தற்கொலை தீர்வல்ல‌ – நீட் தேர்வு – ஒரு நிமிடம் யோசி

தற்கொலை தீர்வல்ல‌ எந்தப் பிரச்சினைக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

நீட் தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள முடியாமல் மாணவ‌ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட வேதனையான செய்திகள் கடந்த வாரம் வந்த வண்ணம் இருந்தன.

சம நிலை இல்லாத போட்டி, தயார் செய்யப் போதுமான நேரமின்மை, போதுமான பணமின்மை மற்றும் பல காரணங்களால் நாம் தோற்றுப் போயிருக்கலாம்.

ஆனால் அதற்கான தீர்வு தற்கொலை அல்ல.

தோல்வி தடைக்கல் அல்ல; படிக்கல்.

நீட் தேர்வில் தோற்றுப் போன மாணவ மாணவிகளுக்கான ஒரு கடிதம்.

அன்புத் தம்பிக்கு / தங்கைக்கு,

தோற்றுப் போன உன் உள்ளத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.

பல வருடக் கனவு சிதைந்து போய்விட்டதே என்கின்ற வலி உன் மனம் முழுதும் இருக்கின்றது.

“எனது முழு முயற்சிக்குப் பின்னும் வெற்றி பெற முடியவில்லையே; எனக்குத் திறமை கிடையாதோ?” என்ற தோல்வி மனப்பான்மை உன் மனதை ஆட்சி செய்கிறது.

உன் குடும்பம், பள்ளி மற்றும் பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லையே என்கின்ற ஏக்கம் ஒருபுறம் உள்ளது.

எந்த சமூகத்தின் முன்னால் இதுவரை வெற்றியாளராக வலம் வந்தோமோ அதே சமூகத்தின் முன் இனி தோல்வியாளராக வலம் வர வேண்டுமோ என்ற எண்ணம் உன் மனம் முழுதும் நிரம்பியிருக்கும்.

ஏழையாகப் பிறந்தது, கிராமத்தில் வசித்தது, தமிழ் வழியில் படித்தது என எல்லாமே உனக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி இருக்கலாம்.

இனி வாழ்வதற்கு என்ன இருக்கின்றது? என்று உன் மனதில் தோன்றலாம்.

உயிரோடு இருப்பதை விட இறப்பது ஒன்றும் துயரம் அல்ல என நீ  நினைக்கலாம்.

உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கின்றது.

ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேள்; யோசி; அடுத்து முடிவெடு.

தற்கொலை தீர்வல்ல‌

இன்றைய நிலையில் மனிதனின் சராசரி வயது 70 என வைத்துக் கொள்ளலாம்.

உன்னுடைய வயது 17 அல்லது 18 இருக்கலாம். அதாவது உன்னுடைய வாழ்வில் தோராயமாக 25% வரை நீ வாழ்ந்து முடித்திருக்கின்றாய்.

இன்றைக்கு நீ தோற்றுப் போயிருக்கின்றாய். ஆனால் இதுவே இறுதி அல்ல.

இதற்குத் தற்கொலை தீர்வல்ல‌.

உனக்கு இன்னும் 75% வாய்ப்புக்கள் உள்ளன.

இன்றைய தோல்வி வாழ்வின் நிரந்தரமான தோல்வி என்று ஏன் எண்ணுகிறாய்?

இன்று தோற்ற நீ என்றும் தோற்றுக் கொண்டே இருப்பாய் என்று ஏன்  நினைக்கின்றாய்?

வாழ்க்கை நேர்கோட்டுப் பயணம் அல்ல. உன் பாதை இறக்கம் மட்டும் கொண்டதல்ல; ஏற்றமும் கொண்டது. அது தான் இறைவனின் (அல்லது இயற்கையின்) படைப்பு.

மேடு வரலாம்; பள்ளம் வரலாம்; ஆறு தன் பாதையை மாற்றும்; ஆனால் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அந்த ஆற்றின் குணத்தை உன் மனதில் நிறுத்து.

அடுத்து என்ன‌?

நீ மருத்துவர் ஆவது என்பது சாத்தியமில்லாமல் போய்விட்டது என்றாலும் மருத்துவத் துறையில் நீ தொடர மற்ற வாய்ப்புக்கள் இருக்கின்றது என்பதை மறந்து விடாதே.

1.ஆங்கில வழி மருத்துவம் படிக்க மதிப்பெண் இல்லாவிட்டால் மாற்றுமுறை மருத்துவம் படிக்கலாம்.

2. நீ விரும்பினால் கால் நடை மருத்துவம் படிக்கலாம்.

3. மருந்தியல் துறையில் படிக்கலாம்.

4. உயிர் வேதியியல் படிக்கலாம்

5. விலங்கியல் படிக்கலாம்; தாவரவியல் படிக்கலாம்; வேதியியல் படிக்கலாம்.

6. மருத்துவம் தொடர்பான பொறியியல் படிக்கலாம்.

7. மருத்துவக் கருவிகளைக் கையாள்வது தொடர்பான பொறியியல் படிக்கலாம்.

8. கணினிப் பொறியியல் படித்துப் பின்னாளில் மருத்துவத் துறை சார்பான பணிகளை மேற்கொள்ளலாம்.

9. நிர்வாகம் படித்து ஒரு மருத்துவமனையின் மிகச் சிறந்த நிர்வாகியாக ஆகலாம்.

நாடி பிடித்து மருந்துச் சீட்டு எழுதுவதுதான் மருத்துவம் என்ற தட்டையான சிந்தனையில் இருந்து வெளியே வா.

மக்கள் பிணி தீர்க்கும் எந்த வேலையும் மகத்தானது என்பதை உணர்ந்து கொள்.

நீ மருத்துவராகி சேவை செய்யும் நேரடி முறை உனக்குக் கிடைக்கவில்லை. அதற்காக வருந்தி நீ உயிரை விடலாம்;

அல்லது

புதிய மருந்துகள் கண்டுபிடித்தல், அவற்றை உற்பத்தி செய்தல், விநியோகம் செய்தல், ஆராய்ச்சிக் கூடங்கள் நடத்துதல், மருத்துவக் கருவிகள் தயாரித்தல், மருத்துவமனையினை நிர்வாகம் செய்தல், மருத்துவ மனைக்கான மென்பொருள் தயாரித்தல் என மக்களுக்கு சேவை செய்யப் பல வழிகள் உண்டு என்பதை நீ உணர்ந்து உன் பாதையை சற்று மாற்றிக் கொண்டு உன் பயணத்தைத் தொடரலாம்.

புதிய பயணம்

தோல்வி என்பது யாருடைய வாழ்விலும் தொடர்கதை அல்ல; நம் நெடுஞ்சாலைப் பயணத்தில் கடந்து செல்லும் ஒரு பேருந்து நிறுத்தம்; அவ்வளவுதான். இதற்குத் தற்கொலை தீர்வல்ல‌.

இன்றைக்கு வாழ்வில் வெற்றி பெறும் 100 பேரில் 90 பேர் நேற்றைக்குத் தோற்றவர்கள்தான். தோல்வி நிலையானதல்ல.

இன்றைக்கு நீ கீழே விழுந்திருக்கின்றாய். மீண்டும் எழு.

விழாமலே இருப்பதல்ல வாழ்க்கை; விழும்போதெல்லாம் எழுவதுதான் வாழ்க்கை.

கவலை, பயம் மற்றும் சுய இரக்கத்தை உன் மனதிலிருந்து ஓட்டி விடு.

நீ விழுந்ததைப் பார்த்துப் பலர் கைகொட்டிச் சிரித்திருக்கலாம்; அவர்களுக்கு உன்னுடைய புன்னகையையே பரிசாகக் கொடு.

நீ தோற்றதைக் கண்டு வருந்தி உன்னை ஆறுதல் படுத்தி அரவணைக்கும் உன் குடும்பம், உறவினர், ஆசிரியர் மற்றும் நண்பர்களின் அரவணைப்பை ஏற்றுக்கொள்.

நீ விழும்போது தாங்கும் அந்த நல்ல உள்ளங்களின் உதவியை ஏற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

நீ நாளை நல்ல நிலைமைக்கு வந்ததும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்.

நன்கு சாப்பிடு; நன்கு தூங்கு.

நண்பர்களைப் பார்; இயற்கையை நன்கு ரசித்திரு.

நல்ல நூல்களைப் படி.

நிதானமாகத் திட்டமிடு.

வைரமுத்துவின் இந்த வைரவரிகளை நெஞ்சில் பொறித்துக் கொள்.

சுடும் வரை நெருப்பு

சுற்றும் வரை பூமி

போராடும் வரை மனிதன்

நீ மனிதன்

மிகவும் இருண்டு விடும்போதுதான் நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்.

எல்லா இரவும் விடியும் என்பதை மனதில் கொண்டு புதிய பயணத்தைத் துவங்கு.

அன்புடன்
வ.முனீஸ்வரன்

2 Replies to “தற்கொலை தீர்வல்ல‌ – நீட் தேர்வு – ஒரு நிமிடம் யோசி”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.