நீதி இல்லாத நாடு இந்தியா என்று ஒரு பெரியவர், தன் அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு பெரியவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
நகரப் பேருந்தில் நின்று கொண்டு, என் அலைபேசியில் மின்னஞ்சல்களைப் படித்துக் கொண்டே பயணம் செய்த எனக்கும் அது காதில் விழுந்தது.
ஒரு நிமிடம் என் மனம் வேதனையில் துடித்தது.
இது உண்மையா? என்று என் அறிவு யோசித்தது; உண்மை என்றே ஒத்துக் கொண்டது.
உடனடி நீதி
ஹைதராபாத் நகரில் ஒரு பெண் மருத்துவர் நள்ளிரவில் கொலை செய்யப்படுகிறார்.
ஓரிரு நாளில் அவரைக் கொன்றதாக, போலீசார் நான்கு குற்றவாளிகளைக் கைது செய்கின்றார்கள்.
ஓர் அதிகாலை அவர்களை போலீசார் சுட்டுக் கொல்கிறார்கள்.
உடனடியாக நீதி வழங்கியதாக, காவல்துறைக்கு மக்களில் பெரும்பாலோர் நன்றி சொல்கிறார்கள். நானும் அதில் ஒருவன்.
ஆனால் காவல்துறையினர் குற்றவாளிகளை சுட்டுக் கொன்றது சரியா? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது.
காவல்துறையின் கடமை என்ன?
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதும், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதும், குற்றவாளிகளை நீதி மன்றத்தில் ஒப்படைப்பதும் தான் காவல்துறையின் வேலை.
குற்றவாளிகளை விசாரித்துத் தண்டனை தர வேண்டியது நீதி மன்றத்தின் வேலை.
ஆனால் தெலுங்கானா போலீசார் தாங்களே தண்டனை வழங்கி விட்டார்கள்.
கைதிகள் தப்பி ஓடினார்கள்; எங்களைத் தாக்கினார்கள் என்றெல்லாம் போலீசார் சொல்லலாம். நமக்கு சிறு வயதிலேயே காது குத்தியாகி விட்டதல்லவா?
பிறகு எது போலீசாரை இந்த முடிவு எடுக்க வைத்தது?
பேருந்தில் அந்தப் பெரியவர் சொன்ன வாக்கியம்தான் பதில். நீதி இல்லாத நாடு இந்தியா.
தாமதமான தில்லி நீதி
ஏழு வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத் போலவே தில்லியிலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
தில்லி காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளை உடனே கைது செய்தது; நீதி மன்றத்தில் ஒப்படைத்தது.
இன்றோடு 7 வருடங்கள் ஓடி விட்டன; ஆனால் இன்னும் அந்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றப் படவில்லை.
தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது நாம் அறியாததல்ல.
இறந்த தில்லிப் பெண்ணின் பெற்றோர், தெலுங்கானா போலீசாரின் செயலைப் பாராட்டி உள்ளனர். ஹைதராபாத் பெண்ணின் பெற்றோருக்கு நீதி கிடைத்து விட்டது; தங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றே வருந்துகின்றனர்.
நீதி இல்லாத நாடு இந்தியா
இன்றைக்கு இந்திய நாட்டில் மக்கள் அனைவருக்கும் எளிதில் நீதி கிடைக்குமா? என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.
தப்பு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற எண்ணம் குற்றவாளிகளிடம் இல்லை.
ஒரு காலத்தில் ஊருக்கு ஒரு ஆலமரம் இருந்தது. அதன் நிழலில் பஞ்சாயத்து நடைபெற்றது. அரசன் அன்றே கொல்வான் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது.
இன்று அத்தகைய அமைப்புகளை அரசு ஒழித்து விட்டது. அதனால் எளியவர்களுக்கு உடனடியாக நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
அரசின் நீதித்துறை மிகவும் மெத்தனமாகச் செயல்படுகின்றது.
எந்த ஒரு பிரச்சினையின் போதும் தங்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சாதாரண மக்கள் இழந்து விட்டார்கள்.
நம் நாட்டில் தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவதில்லை என்கின்ற கருத்து பொதுமக்களிடையே வலுப்பெற்று விட்டது.
அதனால்தான் நீதித்துறையின் வேலையை காவல்துறை கையில் எடுத்த போது மக்கள் பாராட்டினார்கள்.
காவல்துறை தனது அதிகாரத்தின் எல்லையை மீறுகிறதே, பின்னாளில் இது பல தவறுகளுக்கு வழி வகுத்து விடுமே என்று அறிஞர்கள் அச்சமடைகின்றனர்.
விழிக்க வேண்டும் நீதித்துறை
தனது நீண்ட உறக்கத்திலிருந்து நீதித்துறை விழிக்க வேண்டும்.
ஏன் நாட்டில் நீதியை நிலை நாட்ட முடியவில்லை என்பதை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு கால மாற்றத்திற்கேற்ப சட்டங்களை மாற்ற வேண்டும்.
நீதித்துறைக்கு நிறைய நிதி ஒதுக்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
தேவைப்பட்டால் இன்னும் நிறைய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
நீதி வழங்குவதற்கான கால வரையறை ஒன்றை வகுத்து அதனைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடிப்படை, நீதியின் மீதான நம்பிக்கை.
அதை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அறிஞர்கள் அதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!