நீரின் உறைதிறன்

நீருடன் ஓர் உரையாடல் 6 – நீரின் உறைதிறன்

ஒரு ஆய்வகத்தினுள் நுழைந்து சென்று கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு விஸ்தாரமான ஆய்வக அறை இருந்தது. அங்கிருந்த ஒரு ஆராய்ச்சியாளர் என்னை இன்முகத்துடன் வரவேற்றார்.

நானும் இன்முகத்துடன் அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதனை அடுத்து ஒரு மேசையில் இருந்த கருவியை அவர் எனக்கு காண்பித்தார். ஆர்வமுடன் அதனை நான் பார்த்தேன். அந்தக் கருவி ஏதோ ஒரு பெட்டி மாதிரித்தான் இருந்தது.

“சார், இந்தக் கருவி மூலமாத் தான், சூடான பனிக்கட்டிகள உருவாக்குறேன்” என்று அவர் கூறினார்.

“எப்படி சார்?” என்று அவரிடம் கேட்டேன்.

“கொஞ்சம் பொறுங்க” என்று கூறி ஒரு பாட்டிலில் இருந்த தண்ணீரை அந்தக் கருவியில் இருந்த துளையில் ஊற்றினார். பின்னர் மற்றொரு பொத்தானை அழுத்தினார். சில நொடிகளில் அந்த கருவியின் மற்றொரு முனையிலிருந்து பனிக்கட்டிகள் வெளியே வந்து விழுந்தன.

அதைக் கண்டதும் நான் ஆச்சரியம் அடைந்தேன். “இந்தக் கருவி மூலமா வெப்பநிலைய குறைக்கிறீங்களா?” என்று கேட்டேன்.

“இல்ல சார். இந்தக் கருவி அறைவெப்பநிலையில தான் இயங்குது.” என்றுக் கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே, “வெப்பநிலைய குறைக்காம, நீர் எப்படி சார் பனிக்கட்டியா மாறும்?” என்று கேட்டேன்.

அப்பொழுது, எனது தொண்டை வற‌ண்டு இருந்தது. சட்டென கண் விழித்தேன். எழுந்து மின்விளக்கை ஒளிர விட்டேன். கடிகாரத்தை பார்க்க, மணி 4.50 என்று காட்டியது.

“ச்சே இதெல்லாம் கனவா?” என்று முணுமுணுத்தேன். எனினும், நான் கண்ட கனவால், எனது மனதில் சில கேள்விகள் எழுந்தன. அதில் ஒன்று, அறைவெப்பநிலையில் தண்ணீர் உறைய முடியுமா? என்பது தான்.

இதனை சிந்தித்தபடியே, சமையலறைக்குச் சென்று ஒரு டம்பளர் நீரை பருகிவிட்டு மீண்டும் எனது படுக்கைக்கு திரும்பினேன். எனக்கு சற்று வியர்த்தது. எனது நெற்றியின் ஓரங்களில் வியர்வை துளிகள் வழிந்தன. தூங்க முற்பட்டேன். உறக்கம் வரவில்லை.

“என்ன சார்? ஏதோ யோசிக்கிறா மாதிரி தெரியுது” என்ற குரல் வியர்வையிலிருந்து வந்தது. அது நீரின் குரல் தான் என்பதை உறுதி செய்துக் கொண்டேன்.

உடனே, “நீயா? உன்னப்பத்தி தான் ஒரு கனவு கண்டேன். அதான் யோசிக்கிறேன்” என்றேன்.

“என்ன கனவு கண்டீங்க?”

“ஒரு கருவி. அது அறைவெப்பநிலை தான் செயல்படுது. ஆனா அந்தக் கருவி திரவ நீர, பனிக்கட்டியா மாத்திடுது. அந்த கருவிய வடிவமைச்ச ஆராய்ச்சியாளரும் அங்க இருந்தாரு. இதான் நான் கண்ட கனவு.”

“இதுல என்ன யோசிக்கிறீங்க?”

“என்ன இப்படி கேக்குற? வெப்பநிலைய குறைக்காம, நீ எப்படி உறைஞ்சு பனிக்கட்டியா மாறுவ? அதான் என் கேள்வி.”

“ஓ…ஓ… உங்க சந்தேகத்தை அந்த ஆராய்ச்சியாளரிடமே கேட்டிருக்கலாமே?”

“உம்ம்…அதுக்குள்ள‌ தான் கனவு கல‌ஞ்சி கண்விழிச்சி எழுந்துட்டேனே.”

“ஆமால்ல… இப்ப என்ன பண்றது?”

“சரி இது பத்தி ஆய்வுக் கட்டுரைகள் வந்திருக்கான்னு பார்க்கிறேன்” என்று கூறி எழுந்தேன். நேரே எனது அறைக்கு வந்தேன். எனது நெற்றியில் இன்னமும் வியர்வை துளிகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

மடிக் கணினியை திறந்து, ‘அறைவெப்பநிலையில் பனிக்கட்டி உருவாக்கம்’ பற்றி இணையத்தில் தேடினேன்.

அப்பொழுது, ‘அழுத்தத்தால் திடப்பொருளின் உருகுநிலையில் ஏற்படும் தாக்கம்’ பற்றிய தகவல் கிடைத்தது. அதாவது, ‘அழுத்தம் அதிகரிக்கும் போது ஒரு திடப்பொருளின் உருகு நிலையும் அதிகரிக்கும்‘ என்ற தத்துவத்தை படித்தேன். இதை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். ஆனால் இது என்னை மேலும் குழப்பியது.

ஏனெனில், மேற் சொன்ன தத்துவப்படி பார்த்தால், பனிக்கட்டி மீது அழுத்தம் அதிகரிக்க, அது கரைய வேண்டும். அதே சமயத்தில், ‘அழுத்தத்திற்கும் திரவநீர் பனிக்கட்டியாக உறைவதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?’ என்ற கேள்வி என்னுள் எழும்பியது.

காரணம், மேற்சொன்ன தத்துவப்படி, திடப்பொருளின் அடர்த்தி அதன் திரவத்தின் அடர்த்தியைவிட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், நீர் இதற்கு விதிவிலக்கு.

அதாவது திரவநீரின் அடர்த்தி, பனிக்கட்டியின் அடர்த்தியை விட அதிகம்.

“சார், உங்க கேள்விக்கு ஏதாச்சும் விளக்கம் கிடைச்சுதா?” என்றது நீர்.

“ஆம். கிடைச்சிடுமுன்னு நம்புறேன்.” என்று கூறி மேலும் ஆராய்ந்தேன்.

அப்பொழுது ஒரு ஆய்வுக் கட்டுரை கிடைத்தது. அதில், ‘அறைவெப்பநிலையில் பனிக்கட்டியை உருவாக்க முடியும்.’ என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். எனக்கோ ஆச்சரியம்.

எனது முகத்தை பார்த்ததும் “சார், விளக்கத்த கண்டுபிடிச்சிட்டீங்க போல.” என்றது நீர்.

“ஆமாம். ஒரு கட்டுரை இருக்கு. நான் படிச்சிட்டு சொல்றேன்.” என்று கூறி, தொடர்ந்து அக்கட்டுரையை படித்தேன். சில நிமிடங்கள் சென்றன.

“படிச்சிட்டீங்களா? எனக்கும் நீங்க படிச்சி புரிஞ்சிக்கிட்டத சொல்லுங்களேன்.” என்றது நீர்.

“ஓ…ஓ… சொல்றேன். இந்த கட்டுரையில என்ன சொல்லியிருக்காங்கன்னா, வளிமண்டல அழுத்தத்தை விட 10,000 மடங்கு அதிகமான அழுத்தத்த கொடுத்தா, திரவநீர் பனிக்கட்டிகளா மாறுதாம். வெப்பநிலைய பூஜ்ஜியம் டிகிரி செல்சியசுக்கும் கீழாக குறைக்க வேணாமாம்.

அதோட, இந்த தொழிற்நுட்ப முறைய, உணவு, மருத்துவம் மற்றும் விண்வெளி துறையிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவா இருக்குமாம்.” என்றேன்.

“அப்படியா! எனக்கு வியப்பா இருக்கு.”

“எனக்கும் தான்.” என்றேன்.

“அதிக அழுத்தத்தால பனிக்கட்டி உருவாகுது சரி. ஆனா இது எப்படி உணவு துறையில பயன்படுது. இதுபற்றிச் சொல்லுங்களேன்.”

“உம் செல்றேன். வழக்கமான வளிமண்டல அழுத்தத்தில இறைச்சிய உறைய வைக்கும்போது, ஊசி போன்ற முனைக் கொண்ட அறுகோண தட்டு பனி படிகங்கள் உருவாக்கப்படும். இவை இறைச்சியின் திசுக்களை சேதப்படுத்துதாம். இதனால்தான் உறைய வைக்கப்பட்ட இறைச்சியின் சுவையைக் காட்டிலும் புதிய இறைச்சி அதிக சுவையா இருக்குதாம்.

ஆனா, இந்த புதிய தொழிநுட்பத்தால, அதாவது அதிக அழுத்தத்தில இறைச்சி உறையவைக்கும் போது, கூர்மையற்ற வெவ்வேறு வடிவங்களில் பனி படிகங்கள் உருவாகிறதாம். இதனால இறைச்சியின் திசுக்கள் பாதிக்கப்படுவதில்ல. அதனால இறைச்சியின் தரமும் பாதுகாக்கப்ப‌டுகிறது.” என்றேன்.

“நல்லது சார். எது எப்படியோ. உங்களுக்கு நான் பயன்படுறேனே. அதுல எனக்கு மகிழ்ச்சி தான்” என்றுக் கூறி விடை பெற்றது நீர்.

அடுத்த சில நொடிகளில் எனது முகத்தில் வியர்வை இல்லை. அதன்பின்னர், எனது வழக்கமான காலை பணிகளைத் தொடர்ந்தேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

நீருடன் ஓர் உரையாடல் 5 – கொதிநீராவி

நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.