நீரின் சுவை – நீருடன் ஓர் உரையாடல் – 17

மூன்று நாட்களுக்கு முன்பு, மாமாவும் அக்காவும் வீட்டிற்கு வந்து சென்றனர். கூடவே, ஒரு பெரிய பை நிறைய மாங்காய்களையும் கொண்டு வந்திருந்தனர். அவை எல்லாம் அவர்களது வீட்டில் இருந்த மாங்காய் மரத்தில் காய்த்தவை.

“வீணா போயிடப் போகுது. ஊறுகாயாவது செய்யுங்க” என்று அப்பா அந்த மாங்காய்கள் குறித்து அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கோ மாங்காய் ஊறுகாய் செய்வதில் அந்த அளவு ஆர்வமில்லை. ‘அவ்வளவு மாங்காய்களையும் என்ன செய்யலாம்’ என்று யோசித்தேன்.

அப்பொழுது ஒருமுறை ‘உலர் இனிப்பு மாங்காய் துண்டுகளை’ நண்பன் எனக்கு தந்தது நினைவிற்கு வந்தது. ‘சரி அதையே செய்திடலாம்’ என்று முடிவு செய்தேன்.

உடனே, அந்த நண்பனுடன் அலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, உலர் இனிப்பு மாங்காய் செய்முறை பற்றிக் கேட்டேன். அவனும் செய்முறையை விரிவாக சொன்னான். ‘நன்றி’ என்றுக் கூறி அலைபேசியை வைத்தேன்.

ஆர்வ மிகுதியால், உடனே, உலர் இனிப்பு மாங்காய் செய்யும் பணியில் ஈடுபட்டேன். தோலினை நீக்கி, நீளவாக்கில் மாங்காய் துண்டுகளை நறுக்கினேன். கொதிநீரில் அவற்றை இட்டு, பதமாக சில நிமிடங்களில் எடுத்தேன்.

நீர் வடிந்தவுடன் மற்றொரு பாத்திரத்தில் அவற்றை இட்டு, போதுமான அளவு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கி, அப்படியே இரண்டு நாட்கள் மூடி வைத்தேன்.

பின்னர் பாத்திரத்தை திறக்க, மாங்காய் துண்டுகளில் அதிகமாக நீர் சுரந்து இருந்தது. அந்தச் சாறு புளிப்பும் இனிப்பும் கலந்து குடிப்பதற்கு நல்லா இருக்கும் என்று நண்பன் ஏற்கனவே கூறியிருந்தான்.

சரி குடிப்போம் என்று எண்ணி, ஒரு ஸ்பூனில் எடுத்து சாற்றை சுவைத்தேன். அற்புதமாக இருந்தது.

“நல்லா இருக்கா?” என்ற குரல் ஒலி கேட்டது.

அங்கு அம்மாவோ அப்பாவோ இல்லை. பாத்திரத்தில் இருந்த சாற்றை நோக்கினேன்.

“சொல்லுங்க சார். நல்லா இருக்கா?”

நீர் தான் பேசுகிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

“இம்ம்… இந்த சாறு ரொம்ப அருமையா இருக்கு.”

“சார், சாறுல நீரும் இருக்கே?”

“இருக்கு. ஆனா, உனக்கு தான் சுவையில்லையே. மாங்காயும் சர்க்கரையும் சேர்ந்ததாலத்தானே இவ்வளவு சுவை.”

“என்ன சொல்றீங்க? எனக்கு சுவையில்லையா?”

“ஆமா, சுத்தமான நீருக்கு சுவை கிடையாது.”

“சார், எனக்கு இதுல சந்தேகங்கள் இருக்கு. விடை சொல்லுவீங்களா?”

“என்ன தயக்கம். உன்னோட சந்தேகங்கள கேளு.”

சுவை

“ஒரு பொருளோட சுவைய எப்படி உணருறீங்க?”

“நாக்கு மூலமாக தான். அதாவது நாவுல ஒவ்வொரு சுவையையும் உணருவதற்கு, பிரத்யேக சுவை அரும்புகள் இருக்கின்றன. ஆங்கிலத்துல இதற்கு taste buds –ன்னு சொல்லுவாங்க.

ஒரு பொருள் நாவுல பட்டவுடன், சுவை அரும்பு சுவை ஏற்பி மூலமாக சுவையை உணர்ந்து நரம்பு வழியாக சமிக்ஞையை மூளைக்கு அனுப்பும். மூளை சுவையினால் அந்தப் பொருளை சுவைப்பவருக்கு உறுதிபடுத்தும்.”

“நல்லது சார். இப்ப சர்க்கரைய உங்க நாக்குல வைச்சவுடனே, இனிப்பு சுவைக்கான சுவை அரும்பு அதனை உணர்ந்து மூளையின் உதவியுடன் உங்களுக்கு, நீங்க சுவைத்தது சர்க்கரை தான்னு தெரியப்படுத்துது. சரி தானே?”

“ஆமாம், ரொம்ப சரி.”

“நல்லது. இப்ப நீங்க தண்ணீர் குடிக்கிறீங்க. நீங்க குடிக்கிறது ‘நீர்’ தான்னு உங்களுக்கு தெரியுது தானே? சுவையில்லைனா உங்களால எப்படி நீர உணர முடியுது?”

அக்கணம் பிரமித்தேன். நீரின் நுட்பமான கேள்வியை எண்ணி வியந்தேன். ‘இதுவரையிலும் இந்தக் கேள்வி எனக்கு தோன்றவில்லையே?’ என்று எண்ணி வருந்தினேன். சொல்லப் போனால், நீரின் மீது எனக்கு பொறாமை தோன்றியது. ஆனால், உடனே சமநிலைக்கு வந்தேன்.

“சிறப்பான கேள்விய கேட்ட. உண்மையா சொல்லனும்னா, உன்னோட கேள்விக்கு இப்ப எனக்கு விடை தெரியாது. நான் தேடிப் பார்த்துட்டு உனக்கு பதில் சொல்லவா?” என்றேன்.

“அவசரம் இல்ல சார். நீங்க தேடிப் பார்த்துட்டு நாளைக்கு கூட சொல்லுங்க” என்றது நீர்.

“இல்ல இல்ல, இன்னிக்கே சொல்றேன்.”

‘சரிங்க’ என்று கூறி நீர் சென்றது.

வேகவேகமாக, மாங்காய் துண்டுகளை பெரிய தட்டுகளில் இட்டு உலர வைத்துவிட்டு, சாறு இருக்கும் பாத்திரத்தை மூடிவைத்து விட்டு, நீரின் சுவை பற்றிய‌ கேள்விக்கு விடையை அறியும் முயற்சியில் ஈடுபட்டேன். அறிவியல் ஆய்விதழ்களில் தேடினேன்.

ஒரு ஆய்வுக் கட்டுரை கிடைத்தது. அமெரிக்காவில் இயங்கி வரும் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த‌ ஆராய்ச்சியாளர்களால், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதனை வாசிக்க, நீரின் கேள்விக்கு விடை கிடைத்தது.

உடனே, சென்று, பாத்திரத்தின் மூடியை திறந்து சாற்றை உற்று நோக்கினேன். சில நிமிடங்களுக்கு பிறகு, “சார் விடையை கண்டுபிடிச்சிட்டீங்களா?” என்று கேட்டது நீர்.

“ஆமாம், சொல்லட்டுமா?” என்றேன்.

“சொல்லுங்க சார். அதற்காகத்தானே காத்திருக்கேன்.”

நீரின் சுவை உணரும் அரும்பு

“இம்.. சொல்றேன். நீரை உணரும் சுவை ஏற்பி (taste receptor) இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க, இனிப்பு, புளிப்பு எனப் பல்வேறு சுவையைக் கொண்ட திரவங்களை எலியின் நாவில் ஊற்றி ஆய்வுகள ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்காங்க.

எதிர்பார்த்தபடி, அனைத்து சுவைகளுக்கும் நாவில் இருக்கும் சுவை ஏற்பிகள் சிறப்பாக செயல்பட்டு சுவைகள் உணரப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.

நீருக்கும் இதேபோன்ற உணர்வை சுவை ஏற்பி காட்டுகிறதாம். நான் முன்னாடி சொன்ன மாதிரி, இனிப்பு, துவர்ப்பு, உப்பு, புளிப்புன்னு ஒவ்வொரு சுவைக்கும் பிரத்யேக சுவை ஏற்பி இருக்குல. இதுல புளிப்புச் சுவையை உணரும் சுவை ஏற்பி தான் நீரையும் உணருதாம்.”

“சிறப்பு சார், ஆனா, புளிப்பு சுவை ஏற்பிகள் தான் நீரை உணருதுன்னு எப்படி கண்டுபிடிச்சங்க. ஏன், காரம் அல்லது உப்பு சுவை அரும்புகள் நீரை உணர முடியாதா?”

“நல்ல கேள்வி. இதற்கும் அந்தக் கட்டுரையில பதில் இருக்கு. ஆராய்ச்சியாளர்கள் என்ன பண்ணாங்கனா, சுவை அரும்புகளில் இருக்கும் ஒவ்வொரு சுவை ஏற்பியையும் முடக்கி, சுவை உணரப்படுதான்னு பார்த்திருக்காங்க.

உதாரணத்துக்கு, உப்பு சுவை ஏற்பியை (salt taste receptor) முடக்கும் போது, திரவத்துல உப்பு இருந்தா உப்புச் சுவை நரம்புகள் செயல்பாட்டைத் தூண்டாது.

ஆனால் திரவத்துல மற்ற சுவைகள் இருந்தா, அதற்குண்டான சுவை நரம்புகள் செயல்பட்டு, சுவை உணரப்படும்.

இதுமாதிரி புளிப்பு சுவையை உணரும் சுவை ஏற்பி முடக்கப்பட்டபோது, நீரையும் அதற்குண்டான நரம்புகளால் முற்றிலும் உணர முடியவில்லையாம். இதிலிருந்து தான், புளிப்பு சுவை ஏற்பிகள் மூலமாக, நீரின் சுவை உணரப்படுவதாக ஆய்வாளர்கள் சொல்லியிருக்காங்க.”

“சரி சார். நீங்க சொல்றதுல இருந்து நான் என்ன புரிஞ்சுக்கிறேன்னா, புளிப்பு சுவை ஏற்பிகள் மூலமா, புளிப்புச் சுவையும் நீரும் உணரப்படுது. சரியா?”

“சரிதான். அதேசமயத்துல, நீர் புளிப்பு சுவையுடையதுன்னு அர்த்தமல்ல. நீருக்குன்னு ஏதோ ஒரு சுவை இருக்கு. அத நாவில இருக்கும் சுவை ஏற்பிகள் சரியா கண்டுபிடிப்பதாலத்தான், நாம‌ குடிக்கிறது நீருன்னு சரியா உணர்கிறோம்.”

“சிறப்பு சார். நான் கிளம்புறேன். நீங்க இந்தச் சாற்றை குடிக்க ஆவலோடு இருக்கீங்க போல?”

“ஆமாம்.. ஆமாம்” எனச் சொல்ல, நீர் புறப்பட்டது.

பாத்திரத்திலிருந்த சாற்றை நன்றாக சூடாக்கினேன். அது சற்றே கூழ்நிலைக்கு வந்தது. சிறிதளவு சாற்றை ஒரு கோப்பையில் ஊற்றி, நீரும் சிறிதளவு சர்க்கரையும் சேர்த்து பருகினேன்.

சுவை அருமையாக இருந்தது. மீதமிருந்த கூழ்நிலை சாற்றை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

அயனிமம் கிளர்வுற்ற நீர்- நீருடன் ஓர் உரையாடல் -18

கடல் நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 16

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.