கார்பன் அணுவின் ஐசோடோப்பான கார்பன்-14ஐ பயன்படுத்தி பழங்கால படிமங்களின் வயதினை கண்டறியும் கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு முறை பற்றிய தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது எனக்கு தாகம் எடுத்தது. மேசையில் இருந்த நீர் பாட்டிலை எடுத்து, அதிலிருந்த நீரை குடித்தேன்.
மீண்டும் வசிப்பை கவனமுடன் தொடர்ந்தேன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு…
“எவ்வளவு நேரமா கூப்பிடறது சார்?” என்ற குரல் ஒலி கேட்டது.
நீர் என்ன அழைத்துக் கொண்டிருப்பதை அப்பொழுது தான் கவனித்தேன்.
உடனே, “ஓ… நீரா!” என்றேன்.
“சார் ரொம்ப நேரமா உங்கள கூப்பிட்டுகிட்டு இருக்கேன்”
“மன்னிச்சுக்கோ. கவனிக்கல.”
“இம்ம்… அப்படி என்ன மும்முரமா படிச்சிக்கிட்டு இருக்கீங்க?”
“இறந்த தாவர விலங்குகளோட படிமத்த வச்சு அவற்றோட வயதை கண்டுபிடிக்கலாம். அதுபத்திதான் வாசிச்சிகிட்டு இருந்தேன்”
“உண்மையாவா சொல்றீங்க. ஆச்சரியமா இருக்கே”
“உண்மை தான். அறிவியல் மூலமா இது சாத்தியம் தான்.”
“அப்படீன்னா என்னோட வயசையும் உங்களால கண்டுபிடிக்க முடியுமா?”
அமைதியாக இருந்தேன்.
“என்ன அமைதியாயிட்டீங்க! முடியாதா?”
“கொஞ்ச நேரம் காத்திரு. நான் பார்த்திட்டு சொல்றேன்.”
“சரி சார்.”
உடனே, நீரின் வயது பற்றிய அறிவியல் தகவல்களை அறிவியல் இணைய இதழ்களிலும், பத்திரிக்கைகளிலும் தேடினேன். சில தகவல்கள் கிடைத்தன.
அதற்கிடையில், “கண்டுபிடிச்சிட்டீங்களா?” எனக் கேட்டது நீர்.
“சில தகவல்கள் கிடைச்சிருக்கு. சொல்லட்டுமா?”
“சொல்லுங்க. அதுக்குத்தானே காத்திருக்கேன்.”
“உன்னோட வயச கண்டுபிடிக்கலாம்.”
“அப்படியா!”
“ஆமாம். பொதுவா நிலத்தடி நீரோட வயத கண்டுபிடிக்கிறாங்க.”
“நிலத்தடி நீரா இருக்கும்போதா?”
“ஆமாம்.”
“சார் நீங்க ஏற்கனவே, நிலத்தடிநீர் பற்றி சொல்லீயிருக்கீங்களே”
“ஆமாம். உனக்கு நியாபகம் இருக்கா?”
“இருக்கு சார். நிலப்பரப்பின் மேலிருந்து கீழ்நோக்கி நான் ஊடுவிச் சென்று அங்கிருக்கும் அமைப்புகளில் தங்குவேன். அப்பொழுது தானே என்ன நிலத்தடி நீருன்னு சொல்றீங்க?”
“சரியா சொன்ன…”
“நல்லது சார்.”
“உனக்கு தெரியுமா பூமியின் ஆழத்த பொறுத்து நிலத்தடி நீரோட வயது மாறும்.”
“எதனால சார்?”
“புதிய நீர் நிலத்தடிக்குள்ள நுழையும் பொழுது, எற்கனவே அங்கிருக்கும் பழைய நீர் மேலும் ஆழத்திற்குள் தள்ளப்படும். இதனால, அதிக ஆழத்திற்குள் சென்று அங்கேயே நீண்ட காலம் அந்த பழைய நீர் தங்கியிருக்கும். இதனால தான் ஆழத்தில் இருக்கும், நிலத்தடி நீரின் நீரின் வயது அதிகம்.”
“ஆமாம் சார். நீங்க சொல்றதும் சரிதான்.”
“சார். எப்படி என்னோட வயத கண்டுபிடிக்கிறாங்க?”
“இதுக்குன்ணு பல முறைகள் இருக்குது. பொதுவா, நிலத்தடி நீரில் இருக்கும் இயற்கையான ஐசோடோப்புகளை அளவிடுதல் முறைய பயன்படுத்தி நிலத்தடி நீரின் வயச கணிக்கிறாங்க.”
“ஐசோடோப்புனா?”
“ஒரு தனிமத்தோடு மற்ற வடிவத்த தான் ஐசோடோப்புன்னு சொல்லுவாங்க. உதாரணத்துக்கு, ஹைட்ரஜனுக்கு புரோட்டியம், டியூட்டீரியம் மற்றும் ட்ரிடியம்னு மூணு ஐசோடோப்புக்கள் இருக்கு.”
“சார், நீரோட வயத கண்டுபிடிக்க எந்த ஐசோடோப்ப பயன்படுத்துறாங்க”
“உம்ம். குளோரின் கதிரியக்க ஐசோடோப்பு பயன்படுது. காரணம், ஒப்பீட்டளவில இதுக்கு நீண்ட அரை-வாழ் காலம், நீர்விரும்பும் தன்மை மற்றும் எதிர்வினையற்ற பண்புகள் இருக்கு.”
“சிறப்பு சார். ஆனா, என்னோட வயச கண்டுபிடிக்கறதுனால உங்களுக்கு என்ன நன்மை?”
“நன்மைகள் இருக்கு.”
“அப்ப அத சொல்லுங்களேன்.”
“சொல்றேன். நிலத்தடி நீர் ஓட்டத்தின் திசை மற்றும் வேகம், மற்றும் கடந்தகால காலநிலை மாற்றத்தினால நிலத்தடி நீரில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் முதலியனவற்றை புரிந்து கொள்வதற்கு நிலத்தடி நீரின் வயது முக்கியமானதுன்னு சொல்றாங்க.
அத்தோட, நிலத்தடி நீர்நிலைகளில் எவ்வளவு நீர் உள்ளது, எவ்வளவு விரைவாக நிலத்தடி நீர் நிரப்பப்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை காணவும், நிலத்தடி நீரின் வயது பயன்படுதாம். முக்கியமா நிலத்தடி நீரில் இருக்கும் மாசுக்கள் பற்றிய தகவலும் நீரின் வயது மூலம் தெரிஞ்சிக்க முடியுமுன்ணு ஆய்வாளர்கள் எதிர்பார்க்குறாங்க.”
“நல்லது. ஆனா, நீரின் வயசுக்கும் அதிலிருக்கும் மாசுக்களுக்கும் என்ன தொடர்பு?”
“நல்ல கேள்வி. பொதுவா அதிக வயதுடைய பழைய நிலத்தடி நீரை விட, இளம் வயதான புதிய நிலத்தடி நீரில், அதிக அளவு வேதிமாசுப்பொருட்கள் இருக்கலாம்ணு ஆய்வாளர்கள் கணிக்கிறாங்க. காரணம், வேதிமாசுக்களின் அளவு கடந்த சில வருடங்களாகத்தான் அதிகரித்துள்ளது. அதனால் மாசுக்கள் ஆழம் குறைந்த இடத்தில் இருக்கும் நிலத்தடி நீரில் தான் கலக்க வாய்ப்பு அதிகம் இருக்கு. அதேசமயத்துல, இயற்கை புவிவேதியியல் செயல்முறைகளால, பழைய நிலத்தடி நீரில் உலோகங்கள் போன்ற மாசுக்கள் அதிகம் இருக்கவும் வாய்ப்புகள் இருக்குதாம்.”
“ஓஓ… சரி சார். இப்ப நான் கிளம்ப வேண்டிய நேரம். பிறகு பார்க்கலாமா?”
“சரி அப்புறம் பார்க்கலாம்” என்று கூறி மீண்டும் நான் படிக்க துவங்கினேன்.
(உரையாடல் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
உருகிய நீர் – நீருடன் ஓர் உரையாடல் 34
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!