நீரியல் வளர்ப்பு‍ – நீருடன் ஓர் உரையாடல் 38

வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே, பையை திறந்து அதிலிருந்த மணி பிளான்ட் செடியை எடுத்து வெளியே வைத்தேன்.

நண்பர் ஒருவர் தான் எனக்கு இச்செடியை தந்தார். அவர் சொன்னபடி ஒரு பெரிய கண்ணாடி குடுவையை எடுத்து தூய்மை செய்து, தண்ணீரால் நிரப்பினேன்.

பிறகு அந்தச் செடியை அந்த குடுவையில் வைத்தேன். ‘எங்கு வைக்கலாம்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“என்ன சார் யோசிக்கிறீங்க?”

“யாரு?”

“வேற‌ யாரு நான் தான் – நீர்”

“அட! நீ தானா?”

“பயந்திட்டீங்களா?”

“ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் இல்ல.”

“நல்லது. இது என்ன செடி?”

“மணி பிளான்ட்.”

“இது தமிழ் பெயரா?”

“இல்ல ஆங்கிலாத்துல money plant. இந்தச் செடிக்கு பல பேரு இருக்கு. இம்ம்.. house plant-ன்னும் சொல்லுவாங்க. இதமொழி பெயர்த்தா, வீட்டுச் செடின்னு சொல்லலாம்.”

“நல்லது சார். ஆனா, இந்தச் செடிக்கு மண்ணே போடலையே! செடி தாங்காதே?”

“இந்தச் செடிக்கு மண்ணு தேவையில்ல. நீர் மட்டும் போதும்.”

“என்னது, செடிக்கு மண்ணு வேண்டாமா?”

“ஆமா. பொதுவா தாவரங்கள் வளரனும்னா மண்ணு வேணும். ஏன்னா, தாவரங்கள் உறிஞ்சிப் பயன்படுத்தக் கூடிய நிலையில ஊட்டச்சத்துகளை மாற்றிப் பேணும் வேலைய மண் தான் செய்யும்.

அதோட, மண் தான் தீவிர வெப்பநிலை மாற்றங்களிலிருந்து தாவரங்களோட வேர்களைப் பாதுகாக்குது. நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்குவதைத் தடுக்குது.

மேலும் ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து வெளியிடுது மற்றும் உறிஞ்சிக்கவும் செய்யுது. இருந்தாலும் இந்த மணி பிளான்ட்டுக்கு மண்ணு வேணாம்”

“அப்ப செடிக்கு தேவையான சத்துக்கள் எப்படி கிடைக்கும்?”

“நீருல இருந்து தான்.”

“ஆச்சரியமா இருக்கே?”

“உம்ம்… இதுக்குன்னு ஒரு சிறப்பு முறை இருக்கு.”

“அப்படியா!”

நீரியல் வளர்ப்பு

“ஆமாம். நீரியல் வளர்ப்புன்னு ஒருவகை வேளாண்மை முறை இருக்கு. ஆங்கிலத்தில் இத hydroponics-ன்னு சொல்லுவாங்க.

மண்ணில்லா வேளாண்மைன்னும் இத சொல்றாங்க. இதுல செடிகளின் வேர்கள் ஊட்டச்சத்துள்ள நீர் ஊடகத்துல இருக்கும்படி வச்சு தாவரங்கள வளர்க்குறாங்க.”

“புதுசா இருக்கே… ஆன வெறும் தண்ணீருல எப்படி ஊட்டச்சத்துக்கள் இருக்கும்?”

“வெறும் தண்ணீர் இல்ல. தாவரங்களுக்கு தேவையான கனிம மற்றும் கரிம ஊட்டச் சத்துகளைக் கொண்ட நீர் கரைசல தான் வளர்ப்பூடகமா பயன்படுத்துவாங்க.

இன்னும், மீன் கழிவுகள், வாத்து கழிவுகள் அல்லது சாதாரண உரம் போன்ற பிற ஊட்ட சத்துக்களையும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.”

“இந்த முறையில ஏதாவது வகைகள் இருக்கா? ஏன் கேக்குறேனா, சின்ன செடியா இருந்தா அப்படியே வளர்ந்திடும். பெரிய தாவரங்களால எப்படி நீருல நின்னு வளர முடியும்?”

நீரியல் வளர்ப்பு முறைகள்

“சரியா கேட்ட… இந்த வளர்ப்பு முறையில ரெண்டு முக்கிய வகைகள் இருக்கு. ஒன்று கரைசல் வளர்ப்பு, மற்றொன்று ஊடக வளர்ப்பு.

கரைசல் வளர்ப்பு முறையில வேர்த் தொகுதியைத் தாங்குவதற்கு தாங்கும் ஊடகம் இருக்காது. ஊட்டச்சத்து ஊடகத்தில் நேரடியாக வளர்க்கப்படும்.

கரைசல் வளர்ப்பு முறைய நிலையான கரைசல் வளர்ப்பு, தொடர் சுற்றோட்ட கரைசல் வளர்ப்பு, மற்றும் வளிவளர்ப்புன்னு மேலும் மூன்று வகைகளா பிரிக்கிறாங்க.

ஆனா, ஊடக வளர்ப்பு முறையில திண்ம ஊடகத்தாலான தாங்கும் ஊடகம் வேர்த்தொகுதிக்கு வழங்கப்படுது. தவிடு, தென்னை நார் படுக்கை, கம்பளி முதலான பொருள்களும் ஊடகங்களாக பயன்படுத்தலாம்.”

“சிறப்பு சார். இம்… எல்லா வகையான தாவரங்களும் நீரியல் வளர்ப்பு முறையில வளர்க்க முடியுமா?”

“பல வகையான தாவரங்கள இந்த முறையில் வளர்க்க முடியும். கீரை, தக்காளி, மிளகு போன்ற தாவரங்கள சிறந்த முறையில வளர்க்க முடியுமுன்னு படிச்சிருக்கேன்.

பொதுவா சொல்லனும்னா, உயரமாக வளரும் தாவரங்கள், ஆழமான வேர்கள் கொண்ட செடிகள் அல்லது நீண்ட கொடியாக வளரும் தன்மைக் கொண்ட தாவரங்களை தவிர்த்து, பிற பயனுள்ள தாவரங்களை வளர்க்கலாம்னு சொல்றாங்க.”

“சரி இந்த முறையால என்ன நன்மை?”

நீரியல் வளர்ப்பு முறையின் நன்மைகள்

“நிறைய இருக்கு. முக்கியமா பார்த்தோம்னா, ஊட்டச்சத்துக்கள் வீணடிக்கப்படுவதில்ல. தேவையான அளவு மட்டும் எடுத்து பயன்படுத்துனா போதும்.

அடுத்து இதுக்கு மண் தேவையில்லை. பயிர் செய்ய முடியாத இடத்திலும் பயிரிடலாம்.

அப்புறம், பல்வேறு சூழ்நிலையிலும் நீரியல் வளர்ப்பு வேலை செய்யும். அதாவது, நகர்ப்புற குடியிருப்பாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அல்லது வெளிப்புற இடம் இல்லாதவர்களும், நீரியல் வளர்ப்பு முறையை பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கலாம்.

இதுல பயன்படுத்தப்படும் நீர் மீண்டும் பயன்படுத்தத்தக்கது. அதனால நீர்ச் செலவும் குறைவு தான். குறிப்பா விளைச்சலும் அதிகமா கிடைக்குமாம்.”

“பல நன்மைகள் இருக்கே!”

“ஆமாம்,. அதேசமயத்துல சில குறைபாடுகளும் இருக்கு.”

“என்ன?”

“பெரிய அளவுல நீரியல் வளர்ப்பு தோட்டத்தை அமைக்கணும்னா செலவு அதிகமாகும். இந்த முறையில மின்விளக்கு, மின்மோட்டார்கள், காற்றூட்டிகள், விசிறி போன்றவை தேவைப்படும்.

இவற்றையெல்லாம் இயக்க, தொடர்ந்து மின்சாரம் தேவைப்படும். அத்தோட, பயன்படுத்தப்படும் நீரின் தன்மை ரொம்ப முக்கியம்.

இல்லைனா, நீர் மூலம் பரவும் நோய்களால தாவரங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். இந்த முறையில வளர்க்கப்படும் தாவரங்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் நோய் போன்ற பிரச்சனைகளுக்கு மிக விரைவாக எதிர்மறையாக செயல்படுவதாகவும் சொல்றாங்க.”

“சரி சார்… ஆக மொத்தத்துல மண்ணு மாதிரியே, நானுங் கூட தாவரங்கள் வளர்வதற்கு ஒரு ஊடகமா செயல்படுறேன்ல.”

“ஆமாம், நீ இல்லாமா இந்த உலகத்துல எதுவுமே இல்ல.”

“ரொம்ப புகழாதீங்க சார்.”

“உண்மையாத் தான் சொல்றேன்.”

“நன்றி சார். நான் புறப்படட்டுமா?’

“சரி, எனக்கும் வேல இருக்கு. முதல்ல இந்தச் செடிய வைக்க ஒரு நல்ல இடத்த தெரிவு செய்யணும்.”

“சரி சார்” என்று கூறி நீர் சென்றது.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர் பிளவு – நீருடன் ஓர் உரையாடல் 37

நீரியல் வளர்ப்பு‍ – நீருடன் ஓர் உரையாடல் 38

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.