“மோட்டார் ஆன் பண்ணிருக்கேன், அரைமணி நேரம் கழிச்சு நிறுத்திடுப்பா” என்று அப்பா சொல்லிச் சென்றது, அப்பொழுது தான் எனது நினைவிற்கு வந்தது.
உடனே, மேல்மாடிக்கு விரைந்து சென்றேன். எதிர்பார்த்தபடியே, நீர்த்தொட்டி நிறைந்து, அதிகப்படியான நீரை குழாயின் மூலம் ஊற்றிக் கொண்டிருந்தது. மாடி தளத்திலும் நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.
“ச்சே, இவ்வளவு தண்ணி வீணா போச்சே” என்று வருந்தினேன். மேலும் நீர் வீணாகாமல் தடுக்க, கீழே சென்று ஒரு வாளியை எடுத்து வந்து, தொட்டியிலிருந்து வெளியேரும் நீரை சேகரிப்பதற்கு வைத்தேன்.
தொட்டியின் மேற்பகுதியில் இருந்த குழாயிலிருந்து நீர் வெளியேறி கீழே இருந்த வாளியில் இரைச்சலுடன் விழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வாளியில் நீரின் அளவு உயர்ந்து கொண்டு வந்தது.
அக்கணம் ‘நீரோட்டத்தின் இயல்பு பற்றிய அறிவியல்’ எனது நினைவை ஆட்கொண்டது.
ஆம், நீர் எப்பொழுதும் மேலிருந்து கீழ்நோக்கிச் செல்கிறது. இது தான் இயற்கை. பொதுவாக இயற்கை நிகழ்வுகளுக்கு புற ஆற்றல் எதுவும் தரவேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் உயரத்திலிருக்கும் தொட்டியிலிருந்து, கீழிருக்கும் வாளியை நோக்கி தானாக நீர் துள்ளி வருகிறது.
அதுவே, நிலத்தடி நீரை மாடியில் இருக்கும் நீர்தேக்க தொட்டியில் ஏற்றுவதற்கு புற ஆற்றல் கொடுக்கப்பட வேண்டும். அதாவது மின்னாற்றலால் இயங்கும் மின்மோட்டார் தேவைப்படுகிறது.
மேலிருந்து கீழ்நோக்கி நீர் வருவதற்கு காரணம், உயரத்தில் இருக்கும் நீருக்கு நிலையாற்றல் இருப்பதே. தரையிலிருந்து உயரம் அதிகரிக்க அதிகரிக்க நீரின் நிலையாற்றலும் அதிகரிக்கும். நீர் செல்ல வழி எற்படும் பொழுது, அந்த நிலையாற்றலே இயக்க ஆற்றலாக மாறி, நீர் கீழ்நோக்கி விரைந்து செல்கிறது.
இதற்கிடையில், வாளியில் நீர் நிரம்பி வழியும் தருவாயில் இருந்தது. அத்தோடு, தொட்டியிலிருந்து வழியும் நீரின் அளவும் கணிசமாக குறைந்து விட்டது.
வாளியை பார்த்தேன். நீர் ததும்பிக் கொண்டிருந்தது. வாளியை இருகரங்களாலும் தூக்க முற்பட்டேன்.
“சார், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மோட்டார ஆஃப் பண்ணியிருக்கலாமே” என்று ஒரு குரல் ஒலிக் கேட்டது.
சட்டென திரும்பி பார்த்தேன். பக்கத்து வீட்டு மாடியில் யாரும் இல்லை. ‘இந்தக் குரல் எங்கிருந்து வருகிறது?’ என்று திகைத்தேன்.
“சார், மறந்துட்டீங்களா! நான் தான் நீர்” என்றது அந்தக் குரல்.
உடனே அமைதி அடைந்தேன். ஆர்வமுடன் வாளியில் இருந்த நீரை பார்த்தேன். “ஆ… நீரா நல்லது” என்றேன். நீர் ஏதோ கேள்வி கேட்டது. ஆனால் அதை கவனிக்காததால், “மன்னிச்சுக்கோ, என்ன கேட்ட?” என்று கூறினேன்.
“இல்ல, மோட்டார முன்னாடியே ஆஃப் பண்ணியிருக்கலாமேன்னு கேட்டேன்.” என்றது நீர்.
“ஆமா, அப்பா அப்பவே சொன்னாரு; அரைமணி நேரத்துல மோட்டார நிறுத்திடுன்னு; நான் தான் மறந்துட்டேன். அதான் அதிகமா தண்ணீர் மேல ஏறிடுச்சி. நீ தான் வழியிருந்தா மேல இருந்து கீழ்நோக்கி இயல்பா வந்துடுவியே, அதான் இவ்வளவு நீரும் வீணா போயிடுச்சு”
“சார் என்ன சொன்னீங்க?”
“ஆ..ஆ.. நான் உன்ன ஒன்னும் குறை சொல்லல. மேல இருந்து கீழ வறர்து தானே உன்னோட இயல்பு.”
“எப்பவும் மேட்டிலிருந்து பள்ளத்த நோக்கி மட்டும் தான், நான் போவேன்னு யார் சார் சொன்னாங்க”
“அப்புறம்.. பள்ளத்தில இருந்து மேட்ட நோக்கியும் நீயே தானா போவியா என்ன?”
“ஆம்ம்…போவேனே உங்களுக்கு தெரியாதா?”
“என்ன சொல்ற? அப்படி நான் பார்த்ததே இல்லையே! வலுவான புவியீர்ப்பு விசைக்கு எதிரா நீ எப்படி கீழ இருந்து மேல ஏற முடியும்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“சார், நான் பள்ளத்துல இருந்து மேடு நோக்கி போவேன். நீங்களும் அத பார்த்திருப்பீங்க.” என்றது நீர்.
ஆச்சரியத்துடன், “எங்க அப்படி நீ போற எனக்கு சொல்லேன்” என்றேன்.
“சார், நீங்க கடற்கரைக்கு போயிருக்கீங்களா?”
“ஓ..ஓ.. நான் போயிருக்கேனே. அதுக்கு என்ன?”
“அங்க போயி என்ன பார்த்திருக்கீங்க?”
“கடலத்தான். ஓயாம அடிச்சிக்கிட்டு வரும் அலைகள பார்த்து மகிழ்ந்திருக்கேன்.”
“நல்லது. கடல்ல அலைகள் எப்படி வருது?”
“இது எல்லோருக்கும் தெரிஞ்சது தானே! கடல்ல அலைகள் உருவாவதற்கு காரணம் காற்றுதான்னு. அதோட பௌர்ணமி, அமாவாசை காலங்கள்ள பெரிய பெரிய அலைகள் உருவாகும். அத ஓதங்கள்னும் சொல்லுவாங்க. அதற்கு காரணம் புவிக்கும் நிலவுக்குமான ஈர்ப்பு சக்திதான்” என்று கூறினேன்.
“இவ்வளவு செய்தி சொல்றீங்க. ஆனா, பள்ளத்துல இருக்கிற கடல்ல இருந்து மேடான கரைப்பகுதிக்கு நானே (நீர்) ஏறிவர்ரேனா அதசொல்ல மாட்றீங்களே?”
அப்பொழுது தான் எனக்கும் புரிந்தது. ஆம், நீர் பள்ளத்திலிருந்து மேடு நோக்கி வருவதற்கு அலைகளே சான்றாக இருக்கின்றன. எனினும் அதிலும் எனக்கு கேள்விகள் எழுந்தன.
உடனே, “சரிதான், ஆனா ஒரு அலை சில நொடிதானே கரையில இருக்கு. அது உடனே, மீண்டும் கடலுக்குள்ள போயிடுதே. அதோடா, காற்றழுத்தம் மற்றும் ஈர்ப்பு விசை போன்ற புற காரணிகளும் தேவைப்படுதுல்ல” என்று கேட்டேன்.
“ஆமாங்க, சில நொடிகள் என்றாலும் நான் பள்ளத்துல இருந்து தானே மேட்டுக்கு வர்றேன். அதோட காற்றழுத்தமும் ஈர்ப்பு விசையும் எப்பொழுதும் இயற்கையில இருக்கே. சரி இருந்தாலும் உங்களுக்கு தெரிஞ்ச இன்னொரு உதாரணத்தை சொல்லட்டுமா?” என்றுக் கூறியது நீர்.
“அப்படியா! சொல்லேன்”
“உயர்ந்த மரங்கள பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.”
சட்டென எனக்கு புரிந்து விட்டது.
“ஆமாம், ஆமாம். எனக்கு புரிஞ்சுடுச்சு. எல்லா தாவரங்களும் நிலத்தடி நீர உறிஞ்சிக்கிட்டு தானே வளரும். அதுவும் நெட்டை மரங்கள் வேர்மூலமா உறிஞ்சிய நிலத்தடிநீரைப் பல அடி உயரம் வரைக்கும் எடுத்துகிட்டு போகுதே. இங்கவும் நீர் கீழிருந்து மேல தானாகவே போகுது.
அறிவியலாளர்கள் நுண்புழை ஏற்றமுன்னு சொல்லுவாங்க. அதாவது, ரொம்ப குறுகிய குழாய் அமைப்பு வழியா, நீர் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி சொல்லும்.
தாவரங்கள்ல ‘சைலம்‘ எனப்படும் தந்துகிகள் இருக்கு. இது மூலமாத்தான் நீர் மண்ணிலிருந்து தாவரத்தின் உச்சிக்கு போகுது.” என்றேன்.
“ஆ..ஆ..இப்ப தெரிஞ்சுக்கிட்டீங்களா? அளவுருக்கள் சரியா இருந்தா நானும் கீழிருந்து மேல் நோக்கி போவேன்னு”
“ஆமாம்.. ஆமாம்.. இப்ப எனக்கு இன்னொரு செய்தியும் நியாபகத்துக்கு வருது. அண்டார்டிகாவில பனிக்கட்டிக்கு அடியில ஒரு நதி இருக்காம். அது கீழிருந்து மேல்நோக்கி பாயும் அப்படீங்கற ஒரு செய்திகூட படிச்சிருக்கேன்.” என்றேன்.
“நல்லது சார்.” என்றுக் கூறியது நீர்.
“சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு. நான் கீழ போறேன்” என்று கூறி நீர் நிறைந்த வாளியை தூக்கிக் கொண்டு படிகட்டுகளின் வழியே கீழே இறங்கி வந்தேன்.
அப்பா என்னைப் பார்த்தார். “என்னது?” என்று கேட்டார்.
“தொட்டி நிரம்பி தண்ணீ கொட்டிச்சி. அதான் வாளியில புடிச்சுக்கிட்டு வர்றேன்” என்றேன்.
“அதுக்கு இங்க இருக்குற குழாய தொறந்தே தண்ணீய புடிச்சிருக்கலாமே எதுக்கு மேல போய் வாளியில புடிச்சு தூக்கிட்டு வர?” என்று அப்பா கேட்டார்.
அப்பொழுது தான் அந்த சுலபமான வழியை யோசிக்காமல் சென்றது எனது நினைவுக்கு வந்தது.
“அடடா, இது தெரியாம மேல இருந்து கஷ்டப்பட்டு இத தூக்கிட்டு வர்றேனே” என்று எண்ணியவாறே, அந்த நீர் நிறைந்த வாளியை வாசலுக்கு அருகில் இருந்த குழாயின் பக்கத்தில் வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன்.
(உரையாடல் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com
இதைப் படித்து விட்டீர்களா?
மறுமொழி இடவும்