நீர்க்கடிகாரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் ‍- 24

நீர்க்கடிகாரம்

மேசையில் சில காகித லோட்டாக்கள், அளவுகோல், அழியாத‌ மை உடைய‌ எழுதுகோல் மற்றும் ஒரு கிண்ணத்தில் நீர் முதலியனவற்றை கொண்டு வந்து வைத்தேன்.

(லோட்டா என்றால் குவளை அல்லது டம்ளர் என்று அர்த்தம்.)

ஒரு காகித லோட்டாவை எடுத்து அதில் அளவீடுகளை வரையத் துவங்கினேன்.

யாரோ என்னை அழைப்பது போன்று தோன்றியது; கவனம் சிதறியது; சுற்றும் முற்றும் பார்த்தேன்.

“எங்க சார் பாக்குறீங்க? நான் தான் நீர் பேசுறேன். தெரியலையா?” என்று உரக்க பேசியது நீர்.

அப்பொழுது தான் உணர்ந்தேன்.

“ஓ.. நீ தானா?”

“நானே தான்… ரொம்ப மும்ம‌ரமா வேல பாக்குறீங்களே. என்ன பண்றீங்க?”

“இம்,. நான் ‘நீர்க்கடிகராம்’ செய்றேன்”

“நீர்க்கடிகாரமா! கேள்விபட்டதே இல்லையே. விளக்கமா சொல்லுங்க சார்.”

“ஆமாம். உனக்கு நீர்க்கடிகாரம் பற்றி தெரியாதுல!”

“ஆமாம் சார். அதுனாலத்தான் கேட்குறேன்.”

“பழங்காலத்துல நீர்க்கடிகாரத்த மனிதர்கள் பயன்படுத்தியிருக்காங்க”

“எப்ப?”

“நீர்க்கடிகாரம் பண்டைய எகிப்தில கண்டுபிடிக்கப்பட்டதா சொல்றாங்க. இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளிலும் நீர்க்கடிகாரங்கள் குறித்த ஆரம்ப சான்றுகள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் சொல்றாங்க.”

“அப்படியா! சரி சார். நீர வச்சு எப்படி நேரத்த சொல்ல முடியும்?”

“நீரின் ஓட்டத்தைப் பயன்படுத்தி தான் நேரத்தை அளவிட்டிருக்காங்க”

“புரியலையே. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..”

நீர்க்கடிகாரத்தின் அமைப்பு

“சொல்றேன். நீர்க்கடிகாரத்துல ஒரு உருளை வடிவ பாத்திரம் இருக்கும். அதன் அடிப்பகுதியில நீா் வெளியேற துளையும், பாத்திரத்தின் பக்கவாட்டில குறியீடுகளும் பொறிக்கப்பட்டிருக்கும்.

துளையின் வழியாக நீர் வெளியேற, பாத்திரத்திலுள்ள நீா்மட்டம் குறையும். அப்ப, உட்புற பக்கவாட்டில் இருக்கும் குறியீட்ட பயன்படுத்தி, நேரத்தை தெரிஞ்சிக்கிட்டாங்கலாம்.”

“ஆச்சரியமா இருக்கு. என்னோட ஓட்டத்த பயன்படுத்தியும் நேரத்தை கணக்கிட்டுருக்காங்களே!”

“ஆமாம். இன்னொரு தகவலும் இருக்கு.”

“அது என்ன?”

“இம்ம்… இரண்டு வகையான நீர்க்கடிகாரங்கள் இருந்திருக்கு. ஒன்று வெளியேறும் நீர் கடிகாரம் (Outflow water clock) மற்றொன்று உட்புகும் நீர்க்கடிகாரம் (inflow water clocks). ஆனா, இரண்டு வகை நீர்க்கடிகாரங்களிலும் இரண்டு பெரிய கொள்கலன்கள பயன்படுத்தியிருக்காங்க.”

“ரெண்டு வகைகளிலும் இரண்டு கொள்கலன்கள் தான் இருக்கும்னு சொல்றீங்க. பிறகு அவற்றிற்கு இடையே வேற‌ என்ன வித்தியாசம் இருக்கு.”

“வித்தியாசம் இருக்கு. வெளியேறும் நீர்க்கடிகார வகையில, நீர் நிறைந்த ஒரு கொள்கலன், காலியான இரண்டாவது கொள்கலனின் மீது வைக்கப்பட்டிருக்கும். மேல இருக்கும் கொள்கலனில் தான் நேரத்தைக் காட்டும் அளவீடுகளும் இருக்கும்.

நீர் கொள்கலனின் அடிப்பகுதியில் இருக்கும் துளை வழியாக சொட்டி கீழே இருக்கும் கொள்கலனை அடையும். அதனால், மேலிருக்கும் கொள்கலனில் நீர்மட்டம் குறையும். அப்ப, கொள்கலனில் இருக்கும் அளவீடுகளைப் பயன்படுத்தி எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்பதை மனிதர்கள் அறிந்துக் கொண்டார்களாம்.”

“சிறப்பு!”

“ஆமாம். இதே கட்டமைப்பு தான் உட்புகும் நீர்க்கடிகாரத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கு. வித்தியாசம் என்னன்னா, அளவீடுகள் கீழே இருக்கும் கொள்கலனில் குறிக்கப்பட்டிருக்கும்.

மேல இருக்கும் கொள்கலனில் இருந்து நீர் சொட்ட சொட்ட, கீழே இருக்கும் கொள்கலனில் நீர் மட்டம் உயர ஆரம்பிக்கும். இப்ப இதுல இருக்கும் அளவீடுகள பயன்படுத்தி நேரத்தை கணக்கிட்டாங்களாம்.”

வித்தியாசம்

“நல்லது சார். எனக்கு ஒரு சந்தேகம்?”

“என்ன?”

“நீர்க்கடிகாரத்துக்கும் இப்ப இருக்கும் நவீன கடிகாரத்துக்கும் என்ன வித்தியாசம்?”

“துல்லியம் தான். அதாவது, நீர்க்கடிகாரத்த பயன்படுத்தி ஒரு மணிநேரம், இல்லைன்னா, அரை மணிநேரம் கடந்து செல்வதைக் தெரிஞ்சிக்கிட்டுருப்பாங்க. ஆனா, இப்ப இருக்கும் நவீன கடிகாரத்தைப் பயன்படுத்தி, நிமிடத்தையும் துல்லியமா சொல்ல முடியுமே.”

“ஆமாம், ஆமாம்”

“இம்ம்”

“இன்னொரு கேள்வி. என்ன திடீர்ன்னு பழங்கால‌த்துல பயன்படுத்தின நீர்க்கடிகாரத்தின் மீது உங்க கவனம் போயிருக்கு?”

“அதுவா? எழுத்தாளர் த.கோவேந்தன் அவர்கள எழுதிய ‘அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்’ எனும் புத்தகத்த வாசிக்கும் போது, அதுல ‘குறு நீர்க் கன்னலிணைத் தென்றிசைப்ப’ என்ற முல்லைப் பாட்டின் மூலம் பண்டைய தமிழ்நாட்டில் நீர்க்கடிகாரம் இருந்திருப்பது தெரிய வருவதாக குறிப்பிட்டிருந்தாரு.

அப்ப தான் நீர்க்கடிகாரத்தைப் பற்றி தேடிப் படிச்சேன். படிச்சத வச்சு ஒரு செய்முறை செஞ்சி பார்க்கலாமேன்னு தோணுச்சு. அதான் நீர்க்கடிகாரம் செய்து பார்க்கும் முயற்சியில ஈடுபட்டேன்.”

“வாழ்த்துகள் சார். சிறப்பா உங்க வேலைய தொடருங்க. நான் கிளம்புறேன்” எனக் கூறி நீர் புறப்பட்டது.

“நன்றி” எனக் கூறி நானும் எனது வேலையில் ஈடுபட்டேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நிலத்தடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 25

கன நீர்- நீருடன் ஓர் உரையாடல் – 23

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.