குண்டானில் ஊற வைத்திருந்த இட்லி அரிசியை எடுத்து ஈரமாவு அரவைப் பொறியில் போட்டேன். பின்னர் போதுமான அளவு நீரை ஊற்றி பொத்தானை அழுத்தினேன். சட்டென அரவைப் பொறி இயங்கத் தொடங்கியது. நீரும் அரிசியும் ஒன்றாக கலக்கத் தொடங்கியது.
சார், சார் – நீர் என்னை அழைத்தது.
வந்துட்டியா, சொல்லு என்றேன்.
எதுக்கு அரிசியோட நீரையும் ஊத்தினீங்க?
அப்பத்தான் அரிசி நல்லா அரைபடும்
ஓஓ… அரிசிய அரைக்க கூட நான் தேவைப்படுறேனா?
இம். இதுக்கு மட்டுமில்ல.. கடினமான பொருள வெட்டக் கூட நீ பயன்படுற..
என்னது பொருட்கள வெட்ட நான் பயன்படுறேனா, என்ன சொல்றீங்க?
உண்மையாத்தான் சொல்றேன்.
எப்படி சார்?
சொல்றேன் சொல்றேன்… நீர்த் தாரை இயந்திரம்ணு ஒன்னு இருக்கு. ஆங்கிலத்துல Water jet cutter ன்னு சொல்லுவாங்க. இந்த கருவி மூலமா பலவகையான பொருட்கள வெட்டவும் முடியும்; துளையிடவும் முடியும்.
நீர்த் தாரை இயந்திரமா?
ஆமாம். முதல்ல அதிக அழுத்தத்துல, நீர அந்த இயந்திரத்துக்குள்ல உட்செலுத்துவாங்க. அப்படி உள்ளே போகும் நீர் சிராய்ப்பு பொருளோட கலந்து பிறகு, உலோகத்தின் மீது வேகமாகப் பாய்ச்சப்படுது. அதிக அழுத்தங் கொண்ட நீராலும், அதிலிருக்கும் சிராய்ப்பு பொருளாலும் உலோகம் அரிக்கப்பட்டு வெட்டப்படுது.
ஆச்சரியம் தான். சரி உலோகத்த தவிர வேற எந்தெந்த பொருட்கள வெட்டுறாங்க?
பளிங்கு, கருங்கல், எஃகு, மரம் போன்ற பொருட்கள வெட்டவும் துளையிடவும் நீர்த் தாரை இயந்திரம் பயன்படுது.
சிறப்பு சார்.
அத்தோட, நீர் தாரை இயந்திரம் ரப்பர், பிளாஸ்டிக், போன்ற மென்மையான பொருட்கள கூட வெட்டப் பயன்படுது. இதுக்கு சிராய்ப்பு பொருள் தேவையில்ல. அதாவது தூய நீர் மட்டுமே போதும். சொல்லப்போனா மென்மையான உலோகங்களக் கூட இந்த தூய நீர் தாரை இயந்திரத்தால வெட்ட முடியும்.
நல்லது சார்.
ஆனா, எந்த வகையில நீர் தாரை இயந்திரம் மற்ற கருவிகள விட சிறந்தது?
இம்ம்…. இந்த கருவிய பயன்படுத்தும் போது, தூசி வர்றதில்ல.
பொதுவா வெட்டுக் கருவிகள உபோயகப்படுத்தி உலோகங்கள வெட்டும் போது அதிக வெப்பம் வரும். அது மாதிரி வெப்பம்லாம் இந்தக் கருவி பயன்பாட்டின் போது வராது. அதனால, வெப்பத்தால உலோகத்தின் உள்ளார்ந்த பண்புகளில் ஏற்படக்கூடிய மாற்றம் கணிசமா குறையுது.
அப்புறம் ரொம்ப மெல்லிய அளவுல கூட உலோகத்த வெட்ட முடியும். இதனால பிசிறு குறையுது. மூலப்பொருள் வீணாவதும் தடுக்கப்படுது.
குறைஞ்ச அளவு நீரே இயந்திரத்துல பயன்படுத்தப்படுது. இந்த நீரக் கூட மறுசுழற்சி செஞ்சிக்கலாம். அதோட சிராய்ப்பு பொரும் மறுசுழற்சி செய்யப்படுது. இதனால் நீர் தாரை இயந்திரத்தோட விலை மற்ற கருவிகளோட ஒப்பிடும்போது குறைவுதான்.
சிறப்புங்க… ஆனா இந்தக் கருவிய எங்க பயன்படுத்துறாங்க?
சொல்றேன். உலோக இயந்திரங்களின் பகுதிகள உருவாக்க நீர்த் தாரை இயந்திரம் பயன்படுது.
முப்பரிமாண முறையில உருவாக்கப்பட்ட சிக்கலான வடிவங்களைக் கூட இந்த இயந்திரத்தின் மூலம் உருவாக்க முடியும்.
அத்தோட பூமி துளையிடல், சுரங்கங்கள் மற்றும் விண்வெளி ஊர்தி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுது.
நல்லது சார். ஆமா இந்த இயந்திரம் என்ன ஓடாம அப்படியே நிக்குது?
அப்பொழுது தான் கவனித்தேன்; அரிசி மாவில் நீர் இல்லை. உடனே சிறிதளவு நீர் ஊற்றினேன். மீண்டும் ஈரமாவு அரவைப் பொறி இயங்கத் தொடங்கியது.
சார் அப்ப நான் புறப்படுறேன். நீங்க உங்க வேலையப் பாருங்க என்று கூறி நீர் சென்றது.
இட்லி மாவை அரைக்கும் வேலையை நான் தொடர்ந்தேன்.
(உரையாடல் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
நீர் நிறம் – நீருடன் ஓர் உரையாடல் 41
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!