நீர் ஆக்கம் – நீருடன் ஓர் உரையாடல் – 32

ஆய்வகத்தில் மும்முரமாக பணி செய்துக் கொண்டிருந்தேன். இரும்பு ஆக்சைடு நானோ துகள்களை தயாரிப்பது தான் அந்த பணி. இரும்பு ஆக்சைடு தயாரிப்புக்கு தேவையான அனைத்து வினைபடு பொருட்களையும் ஆய்வுக் குடுவையில் சேர்த்துவிட்டேன்.

இனி, நான்கு மணி நேரத்திற்கு பின்பு தான் வினையை முடித்து, அதிலிருந்து வினைவிளை பொருளை பிரித்தெடுக்க வேண்டும்.

அதற்கிடையில் வேதிவினையை நிகழ்த்தும் மேடையை சுத்தம் செய்துவிட்டு அருகில் இருந்த குழாயில் கைகளை சோப்பு போட்டு கழுவிக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்தேன்.

“முடிஞ்சுதா?”

“யாரு?”

“நான் தான் சார். குடுவைய பாருங்க.”

அருகே, ஒரு கண்ணாடி குடுவையில் நீர் இருந்த‌து.

“நீரா? நீ இங்கேயும் வந்துட்டியா?”

“ஏன் சார்? நான் தான் எல்லா இடத்துலேயும் இருக்கேனே.”

“சரி.. சரி..”

“இவ்வளவு நேரம் என்ன பண்ணீங்க?”

“எத கேக்குற?”

“அந்த ஆய்வுக் குடுவையில கலர் கலரா எதையோ நீருல கரைச்சு சேர்த்தீங்களே. முதல்ல மஞ்சள் நிறத்துல இருந்துச்சி. அப்புறம் ஒரு நிறமற்ற கரைசல சேர்த்தீங்க. உடனே பழுப்பு நிறத்துல வீழ்படிவு வந்துடிச்சு..”

“உம்ம்ம்… எல்லாத்தையும் சரியா கவனிச்சிருக்கே!”

“ஆமாம் சார். அதுலாம் எதுக்கு?”

“நான் இரும்பு ஆக்சைடு நானோ பொருள தயாரிக்கிறேன்.”

“அப்படியா! பார்த்தீங்களா வேறு வேதிப்பொருள தயாரிக்கவும் நான் தான் தேவைப்படுறேன்.”

“ஆமாம்.. ஆமாம்.”

“சரி சார். என்ன எப்படி தயாரிப்பீங்க?”

“என்னது?”

“என்ன, அதாவது நீர எப்படி தயாரிக்கிறீங்க?”

சில நிமிடங்கள் அமைதியாக நின்று கொண்டு யோசித்தேன்.

“என்ன சார். அமைதியா இருக்கீங்க?”

“பொதுவா செயற்கையா நீர உருவாக்கி பயன்படுத்துறதில்ல.”

“என்ன சார் சொல்றீங்க? நான் ரொம்பவும் எளிமையான மூலக்கூறு தானே?”

“ஆமாம், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் சேர்ந்து டை‍ ஹைட்ரஜன் மோனாக்சைடு, அதாவது நீர் உருவாகுது. ஆனா…”

“பின்ன ஏன் என்ன செயற்கையா உருவாக்குறதில்ல?”

“சொல்லப்போனா, கோட்பாட்டளவில, ‘நீர் ஆக்கம்’ என்பது சாத்தியம் தான். ஆனா, நடைமுறையில பார்த்தோம்னா, நீர் ஆக்கம் வினையில அதீத வெப்ப ஆற்றல் வெளிவரும். அதனால, நீர் ஆக்கம் என்பது சுலபமானது அல்ல.”

“ஓ..ஓ… அப்படியா….”

“இம்ம்…”

“அப்ப வேற எந்த முறையிலும் நீர செயற்கையா ஆக்க முடியாது. அப்படித்தானே?”

“அப்படீன்னும் சொல்ல முடியாது.”

“பின்ன?”

“ஒரு எரிபொருள் மின்கலத்தப் பயன்படுத்தி செயற்கையா நீரை ஆக்க முடியும்.”

“எரிபொருள் மின்கலமா?”

“ஆமா, ஆங்கிலத்துல fuel cell-ன்னு சொல்லுவாங்க. பொதுவா மின்கலத்தோட நோக்கம். மின்சாரம் உற்பத்தி செய்வதுதான். ஆனா எரிபொருள் மின்கலத்தின் மூலமா, மின்சாரத்தோட நீரும் உருவாகுது”

“நீர் உற்பத்திக்காக இந்த மின்கலத்துல என்ன எடுத்துப்பாங்க?”

“சொல்றேன். எரிபொருள் மின்கலத்தின் ஒரு முனையில, வாயு நிலையிலான ஹைட்ரஜன் மூலக்கூறும், மற்றொரு முனையில ஆக்சிஜன் மூலக்கூறும் உட்செலுத்தப்படுகின்றன. அப்போது, மின்வேதிவினை நிகழ்ந்து, அதாவது, ஹைட்ரஜன் மூலக்கூறுகள் ஆக்சிஜனேற்றம் அடைந்து ஹைட்ரஜன் நேர்மின் அயனிகள் உருவாகின்றன. அதே நேரத்தில் ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் ஆக்சிஜன் ஒடுக்கம் அடைந்து ஆக்சிஜன் எதிர்மின் அயனிகளை தருகின்றன. ஆக்சிஜன் எதிர்மின் அயனிகள், ஹைட்ரஜன் நேர்மின் அயனிகளுடன் இணைந்து நீரை உருவாக்குவதோடு, மின்சாரமும் உற்பத்தியாகிறது.”

“சிறப்பு சார்”

“சரி. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு… நாம அப்புறம் பேசலாமா?”

“சரி சார் நான் கிளம்புறேன். அப்புறம் பார்ப்போம்” என்று கூறி நீர் புறப்பட்டது.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461

மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீரின் வயது – நீருடன் ஓர் உரையாடல் 33

மறை நீர்- ‍நீருடன் ஓர் உரையாடல் – 31

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.