நண்பர் ஒருவர், நுண்புழை ஏற்றம் (capillary action) என்ற அறிவியல் தத்துவத்தை விளக்கும் ஒரு எளிய செய்முறை விளக்கத்தை நிகழ்த்தி, அதனை காணொளியாக எடுத்து அனுப்பும்படி கேட்டிருந்தார்.
அதற்காகத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு யோசனை கிடைத்தது. அதன்படி, ஒரு கண்ணாடி லோட்டாவில் பாதியளவு நீர் எடுத்துக் கொண்டேன். ஒரு மெல்லிழைக் காகித்தை (tissue paper) இரண்டாக செங்குத்தாக வெட்டினேன்.
ஒரு காகித துண்டினை எடுத்து, அதன் முனை மட்டும் கண்ணாடி லோட்டாவில் இருக்கும் நீரின் மேற்பரப்பை தொடும்படி பிடித்தேன். உடனே, நீர் அந்த மெல்லிழைக் காகித துண்டு வழியே மேலே ஏறியது.
முதலில் வேகமாக காகிதத்தில் நீர் ஏற்றம் நிகழ்ந்தது. பின்னர் அதன் வேகம் குறைந்தது. இந்த செய்முறையை அப்படியே அலைபேசியை பயன்படுத்தி காணொளியாக எடுத்தும் பார்த்தேன்.
ஆனால், நீர் காகிதத்தில் ஏறுவது காணொளியில் தெளிவாக தெரியவில்லை.
“என்ன செய்வது?” என்று சிந்தித்தேன். நல்ல யோசனை கிடைத்தது.
உடனே, சமையலறைக்குச் சென்று, ‘கேரட் இருக்கிறதா?’ என்று தேடினேன். அது இல்லை. ஆனால் பீட்ரூட் இருந்தது. ‘நல்லது தான்’, என்று நினைத்துக் கொண்டு, ஒரு சிறிய பீட்ரூடை மட்டும் எடுத்து அதன் ஒரு பகுதியை வெட்டி எடுத்துக் கொண்டேன்.
அதனை வலுவுடன் இடித்து, அதன் சாற்றை அந்த கண்ணாடி லோட்டாவில் இருந்த நீரில் சேர்த்தேன். உடனே நீர் சிவப்பு-ஊதா நிறத்திற்கு மாறியது.
மீண்டும் ஒரு மெல்லிழைக் காகிதத்துண்டை எடுத்து முன்பு செய்தது போன்றே செய்தேன். காகிதத்தில் நீருடன் பீட்ரூட்டின் நிறமியும் சேர்ந்து ஏறியது. இதனை தெளிவாக காணொளியாக அலைபேசியில் பதிவு செய்தேன். காணொளியில் நீர் ஏற்றம் தெளிவாகத் தெரிந்தது.
“சிறப்பு” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு புன்னகைத்தேன்.
“என்ன சார் தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்றது நீர்.
“நீரா?”
“ஆமாம் நானே தான்.”
“ஒண்ணுமில்ல… ஒரு அறிவியல் தத்துவத்தை எளிய செய்முறையா செஞ்சி காணொளியாக பதிவு பண்ணினேன்.”
“அது என்ன தத்துவம் சார்?”
“அவசியம் தெரிஞ்சிக்கணுமா?”
“என்ன சார் இப்படி கேக்குறீங்க. அந்த தத்துவத்த விளக்க, என்ன பயன்படுத்தி இருக்குகீங்க. அப்படியிருக்க, நான் அந்த தத்துவத்தை பத்தி தெரிஞ்சிக்க கூடாதா?”
“அப்படிலாம் ஒன்னும் இல்ல.”
“பிறகு என்ன? அந்த தத்துவத்த பத்தி சொல்லுங்க.”
நுண்புழை ஏற்றம்
“சொல்றேன். ‘நுண்புழை ஏற்றம்’ என்ற அறிவியல் தத்துவத்தை தான் நான் செயல்முறை விளக்கம் செஞ்சேன்.”
“நுண்புழை ஏற்றமா?”
“ஆமாம், மெல்லிழைக் காகிதத்தை நீரின் மேற்பரப்புல வச்சவுடன், அதுல நீ சடசடவெனே மேல ஏறுனீல. அதுக்கு பேருதான் நுண்புழை ஏற்றமுன்னு சொல்லுவாங்க. காகித போன்ற நுண்துளைகள் நிறைந்த பொருட்கள்ல நுண்புழை ஏற்றம் நிகழும். அதேபோல, ‘நுண்புழை குழாய்’ மூலமும் நீர் ஏற்றம் நிகழும்.”
“காகிதத்த சொன்னீங்க. புரிஞ்சுது. ஆனா நுண்புழை குழாயின்னு சொல்றீங்களே. அதுபத்தி இன்னும் விளக்கமா சொல்ல முடியுமா?”
“இம்ம்.. ஒரு குழாயோட துவாரத்தின் அளவு, உதாரணத்துக்கு சொல்லனும்னா, தோலில் இருக்கும் துவாரத்தின் விட்ட அளவு போன்று மிகமிக குறைவாக இருந்தால் அந்த குழாய்க்கு நுண்புழை குழாயின்னு பேரு. நீருல நுண்புழை குழாயை வச்சா, அதன் துவாரத்தின் வழியே நீர் மேல ஏறும்.”
“சரி சார் புரிஞ்சிக்கிட்டேன்.”
“ஆம்ம்… இப்பதான் எனக்கு ஞாபகம் வருது. நிலத்துல இருக்கும் நீரை வேர்களின் மூலமாக உறிஞ்சி, தாவரத்தோட மற்ற எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் நுண்புழை ஏற்றம் முக்கிய பங்கு வகிக்கிது.”
நுண்புழை ஏற்றத்தின் முக்கியத்துவம்
“அப்படியா! இன்னும் விளக்கமா சொல்ல முடியுமா?”
“நிச்சயமா சொல்றேன். பொதுவாக மரத்தோட தண்டு உட்பகுதியில ’சைலம்’ திசுக்கள் இருக்கு. இந்த திசுக்கள் வழியாத்தான், நிலத்திலிருந்து நீர் நுண்புழை ஏற்றம், ஆவியுயிர்ப்பு (transpiration), மற்றும் நீரின் ஒட்டுந்தன்மை முதலிய அறிவியல் தத்துவங்களின் அடிப்படையில் வேர்கள் மூலமாக மரத்தின் மற்ற எல்லா பாகங்களுக்கும் கடத்தப்படுகிறது.”
“அப்படியா!”
“ஆமாம். இதுக்கு முன்னாடி ஆவியுயிர்ப்பு, நீரின் ஒட்டுந்தன்மை பற்றி நீ தெரிஞ்சிக்கணும்.”
“சார், ஒட்டுந்தன்மைனா, நீர் நீரோடவும், நீர் மற்றப் பொருட்களோடவும் ஒட்டுமுன்னு சொன்னீங்களே. அது தானே?”
“ஆமாம், ஞாபகம் இருக்கா?”
“இ..ம்ம்… அதுக்கூட, தன்னின கவர்ச்சி, வேற்றினக் கவர்ச்சின்னு சொன்னீங்களே?”
“ஆமாம் சரியா சொல்றே”
“நல்லது சார், ஆவியுயிர்ப்புங்கறது தான் என்னன்னு புரியல?”
“சொல்றேன், தாவர இலைகளில் இலைத்துளைகள் (stomata) இருக்கும். இதன் வழியாக நீர் ஆவியாகி வெளியேறும். இந்த நிகழ்வுக்குத்தான் ‘ஆவியுயிர்ப்பு’ என்று பெயர். அத்தோட, இலைத்துளைகள் மூலமாக கரியமில வாயு சூழ்நிலை மண்டலத்துல இருந்து தாவரத்துக்குள்ள உறிஞ்சப்படுது.”
“சரி சார். நீங்க சொன்ன தத்துவங்கள் மூலமா எப்படி நான் நிலத்துல இருந்து தாவரத்துல ஏறுறேன். அத சொல்லுங்க.”
“இம்…. ஏற்கனவே, சொன்னா மாதிரி, சைலம் திசுக்கள் நுண்புழை குழாயாக செயல்படுவதால நீ மேல ஏறுற.”
“சரி”
“அப்புறம், ஆவியுயிர்ப்பு நிகழ்வால, இலைகள் மற்றும் சைலம் திசுக்களில் எதிர்மறை அழுத்தம் உருவாகுது. அதாவது, வேர்களில் இருக்கும் நீர் மேல்நோக்கி உறிஞ்சப்படுது. இதனாலையும் தாவரத்தின் அடிப்பாகத்திலிருந்து நீர் மேல்நோக்கி இழுக்கப்படுது. எதிர்மறை அழுத்தத்தின் போது, தொடர்ந்து நீர் மேல ஏறுவதற்கு காரணம், நீரும் நீருக்குமான தன்னினக் கவர்ச்சி விசைதான்.”
“அப்ப, நுண்புழை ஏற்றம், நிகழும் போது?”
“நல்ல கேள்வி. நுண்புழை ஏற்றத்தின் போது, நீருக்கும் சைலத்திற்கும் இடையில் ஏற்படும் கவர்ச்சி, அதாவது வேற்றினக் கவர்ச்சியால நீர் மேல்நோக்கி ஏறும்.”
“நல்லது சார்.”
“இன்னும் ஒரு தகவல் இருக்கு. வெப்பம், மற்றும் வறண்ட காற்று போன்ற சூழல்நிலைகளைப் பொறுத்து, ஒரு தாவரத்தின் இலைகளில் ஆவியுயிர்ப்பின் வேகம் அதிகரிக்கலாம். இதனால சைலம் வழியாக நீர் விரைவாக மேல்நோக்கி ஏறும்.”
“ஓ…ஓ!”
“சில நேரங்கள்ல, நீர் மூலக்கூறுகளுக்கிடையே இருக்கும் தன்னினக் கவர்ச்சியைக் காட்டிலும், இலைகளின் உடாக நிகழும் எதிர்மறை அழுத்தம், அதாவது உறிஞ்சிதல் நிகழ்வு வலுவாக இருக்கும்பொழுது, சைலத்தில் காற்று குமிழ்கள் உருவாகின்றன. இதனால, கீழிருந்து மேல் நோக்கி செல்லும் நீரில் இடைவெளி உண்டாகுது. இத சரிசெய்ய, தாவரங்கள் வேர்மூலமாக அழுத்தத்தை உருவாக்கி நீரை சைலம் வழியாக மேல்நோக்கி தள்ளும்.”
“சார் எனக்கு நல்ல தகவல சொன்னீங்க.”
“நன்றி.”
“சரி சார். நான் புறப்படுறேன். நீங்க உங்க வேலைய தொடருங்க.”
“சரி நாம் அப்புறம் பேசலாம்” என்று கூறி எனது வேலையைத் தொடர்ந்தேன்.
(உரையாடல் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
கன நீர்- நீருடன் ஓர் உரையாடல் 23
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!