சில அடிப்படை வேதியியல் கருதுகோள்கள், விதிகள், மற்றும் தத்துவங்கள் ஆகியனவற்றை நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் படித்து நினைவூட்டிக் கொண்டிருந்தேன்.
தாகம் எடுத்தது. நீர் பருகினேன்.
″போதுமா சார்?″ – நீர் கேட்டது.
″நீர் தானே?″
″ஆமாங்க…″
″உம்ம்… சொல்லு″
″என்ன வாசிக்கிறீங்க?″
″இதக் கேக்குறீயா? வேதியியல் தத்துவங்களை படிச்சிக்கிட்டு இருக்கேன்.″
″ஓ நீங்க இதுக்கு முன்னாடி இத படிக்கலையா?”
″இல்ல இல்ல எத்தனையோ முறை படிச்சிருக்கேன். ஆனா, அடிக்கடி படிச்சாதான் எனக்கு நியாபகத்துல இருக்கும்.″
″அப்ப, நீங்க படிங்க சார். நான் கிளம்புறேன்″ என்றது நீர்.
அப்பொழுது நீரின் இயல்பை வைத்து கூறப்பட்டிருந்த வாழ்விற்கு தேவையான தத்துவ விளக்கத்தை முன்பு எங்கோ வாசித்தது நினைவிற்கு வந்தது. உடனே, ″பொறு, பொறு உனக்கு நீர் தத்துவத்த சொல்லட்டுமா?″ என்றேன்.
″நீர் தத்துவமா! என்ன சார் சொல்றீங்க. எனக்கு ஒன்னும் புரியலையே″
″சொல்றேன். உன்னோட இயல்புல இருந்து மூணு வாழ்க்கை தத்துவங்கள, அதாவது வாழ்க்கைக்கு தேவையான நல்ல இயல்புகள கத்துக்கலாமாம்.″
″என்ன அது?″
″இம்ம்.. பணிவு, நல்லிணக்கம் மற்றும் திறந்த தன்மையும் (openness) – இந்த மூன்று பண்புகளத் தான் நீரிடமிருந்து கத்துக்க வேண்டியவைன்ணு ஒரு தத்துவவியலார் சொல்லியிருக்காரு.″
″எனக்கு இன்னும் விளக்கமா சொல்றீங்களா?″
″ஆம், முதல்ல பணிவு பத்தி சொல்றேன். நீர் இல்லாம உலகமே இல்ல. அப்படி இருந்தும், நீர் மேட்டிலிருந்து பள்ளத்த நோக்கி தான் செல்லுது. அதுமாதிரி, ஒருத்தர் தற்பெருமை கொள்ளாம மத்தவங்ககிட்ட பணிவோட நடந்துக்கணும். அதாவது தன்னடக்கத்தோட, மத்தவங்க சொல்றத கேட்டு, மதிச்சு நடக்கணும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் பணிவோட அடையாளம் தான்.″
″நல்லது சார். எல்லோரும் பணிவோட நடந்துப்போம்.″
″உம், அடுத்து நல்லிணக்கம். அதாவது, ஒரு கரடுமுரடான பாதை வழியா நீர் பாய்ந்து வரும்போது, அங்க பல தடைகள் இருக்கும். கற்களோ பாறைகளோ நீரோட்டத்திற்கு தடையா இருக்கலாம்.
அதற்கெல்லாம், அந்த தடைகளின் மீது நீர் வருத்தப்படுவதோ, எரிச்சலடைவதோ, சண்டையிடுவதோ இல்லை, மாறாக தடைகளை தாண்டி தொடர்ந்து இலக்கை நோக்கி பாயுது.
இது மாதிரி, ஒருவர் நல்ல செயல்கள செய்யும் போது வரும் தடை அல்லது பிரச்சனைகள எண்ணி வருத்தப்படாம, முன்னேறும் வழியக் கண்டுபுடிச்சி தொடர்ந்து தனது இலக்கை அடைய முயற்சி செய்யணும். இது பிறரோட நல்லிணக்கத்தோட இருந்தா சாத்தியமே.″
″சிறப்பு சார்.″
″அடுத்து திறந்த தன்மையும் நீரிடமிருந்து கத்துக்க வேண்டிய ஒரு பண்பு தான். அதாவது, சூழலுக்கு ஏற்ப நீர் தன்னோட நிலைமைய மாத்திக்கும். அதாவது உறைவெப்ப நிலையில திரவ நீர் திடநிலைக்கு மாறிடும். வெப்பம் அதிகமா இருந்தா, அதே நீர் வாயு நிலைக்கு மாறிடும். அதுமாதிரி மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தன்னை தகவமைச்சுக்கணும்.”
″சார், நான் எந்த நிலைமையில இருந்தாலும் என்னோட அடிப்படை பண்பு மாறாதே″
″ஆமாம், நல்ல பண்புகள எந்த நிலைமையிலும் மாத்திக்கக் கூடாது″
″நல்லதுங்க… நாம் பிறகு சந்திப்போம்″ என்றுக் கூறி நீர் சென்றது. நான் மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.
(உரையாடல் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
உலக நீர் நாள் – நீருடன் ஓர் உரையாடல் 48
மறுமொழி இடவும்