நீர் தீயணைப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 44

நீர் தீயணைப்பான்

ஏதோ கருகுவதுப் போல் தோன்றியது.

உருளைக்கிழங்கு பொரியல் அடுப்பில் இருப்பது நினைவிற்கு வரவே, சட்டென சமையலறைக்கு சென்று, அடுப்பில் இருந்த வாணலியை பார்த்தேன்.

பொரியலில் நீர் அவ்வளவாக இல்லை. அவசரத்தில் இடுக்கி அகப்படவில்லை. ஆனால் ஒரு துணி இருந்தது.

அதன் மூலம் வாணலியை பிடித்துக் கொண்டு சல்லிக் கரண்டியால் பொரியலை நன்றாக கிளறி விட்டேன். நல்ல வேளை, கிழங்குகள் கருகவில்லை.

ஆனாலும் கருகும் வாடை வருவதை உணர்ந்தேன். ‘வாட எங்கிருந்து வருது?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.

அப்பொழுது தான் கவனித்தேன். நான் பிடித்திருந்த துணியின் ஓரத்தில் லேசாக தீ பிடித்திருந்தது.

உடனே, தீ பற்றியிருந்த துணியின் பகுதியை சமையல் மேடையில் அழுத்தி தட்டினேன். தீப்பொறிகள் அணைந்தன. அதற்கிடையில் அடுப்பையும் அணைத்தேன்.

″என்னாச்சுங்க…?″ பதற்றமான குரல் ஒலி கேட்டது. பாத்திரத்தில் இருக்கும் நீரின் குரல் தான் அது என்பதை உடனே உணர்ந்தேன்.

″ஒன்னுமில்லே. லேசா துணியில தீ பத்திக்கிச்சு. அணைச்சுட்டேன்″

″பாத்துங்க. கவனமா சமைங்க..″

″உ..ம்ம்″

″ஆமா துணியில எப்படி தீ பிடிச்சுது?″

″வாணலிய பிடிச்சுக்கிட்டு பொரியலை கிளறிவிட்டேனா.. அப்போ துணியோட ஒரு முனையில தீ பட்டிருக்கு. அதான் தீ பிடிச்சிடிச்சு.″

″சார். இது எனக்கும் புரியுது. நான் எதிர்பார்ப்பது அறிவியல் பூர்வமான பதில். உங்களுக்கு தெரியுமா?″

″ஓ… நீ அப்படி கேட்டீயா?″

″ஆமாம்…″

″சொல்றேன். பொதுவா தீ எதுனால வருமுன்னா, எரித்தல் எனப்படும் வேதிவினையாலத்தான். ஆங்கிலத்துல இதுக்கு combustion reaction-ன்னு சொல்லுவாங்க.

எரித்தல் வினை நிகழனும்னா மூணு காரணிகள் அடிப்படையில தேவைப்படுது. ஒன்னு எரிபொருள். மரம், காகிதம், எண்ணெய், நிலக்கரி போன்ற பொருட்கள் எரிபொருளா செயல்படுது. ரெண்டாவது ஆக்சிஜன். இது காத்துலேயே இருக்குது. மூணாவது வெப்ப ஆற்றல்.″

″உம். ஆனா துணி தீ பிடிச்சுதே இதுல எது எரிபொருள்?″

″துணி எரியக்கூடிய பொருள். காத்துல ஆக்சிஜன் இருக்கு. தீ மூலமா வெப்ப ஆற்றல் கிட‌ச்சதால துணியில தீ பத்தி எரிஞ்சிது.″

″ஆம்.. இப்ப புரியுது. ஆனா, தீ பத்திக்கிட்ட துணிய மேடையில அழுத்தி அணைச்சீங்களே…″

″அதுவா, தீ லேசா தான் இருந்துச்சு. அதனால மேடையில அழுத்த, சுலபமா தீ அணைஞ்சிடிச்சு. தீ அதிகமா இருந்தா நீர ஊத்திதான் அணைச்சிருப்பேன்.″

″என்னது தீய அணைக்க நான் பயன்படுறேனே?″

″ஆமா… நீ தீயணைப்பானா பயன்படுற″

″சார் தீயணைப்பான்னா, தீய அணைப்பது தானே?″

″ஆமா. எங்காவது திடீர்னு தீப் பிடிச்சு எரிஞ்சா, அதன் பரவல தடுத்துத் தீய அணைக்க உதவும் கருவிதான் தீயணைப்பான்.″

″தீயணைப்பான் எப்படி தீய அணைக்குது?″

″உம் நல்ல கேள்வி. பொதுவா எரிதல் வினை தொடங்கிடிச்சுன்னா, எரிபொருளோ அல்லது எரியக்கூடிய பொருளோ, அவை முழுவதும் தீரும் வரை வினை தொடரும். அதாவது தீ எரிஞ்சுக்கிட்டே இருக்கும்.

எரிதல் வினைய கட்டுபடுத்தனும்னா, நான் ஏற்கனவே சொன்ன மூணு காரணிகள்ல ஏதாவது ஒன்னுத்தயாச்சும் நீக்கணும். அப்பதான் தீ அணையும்.

இந்த வேலையத் தான் தீயணைப்பான் செய்யுது.

அதாவது, தீயணைப்பான் வெப்பம், காற்று அல்லது இரண்டையும் நீக்குவதன் மூலம் தீயைக் கட்டுப்படுத்துது.″

″ஓ… ″

″தீயணைப்பானின் அடிப்படை தத்துவம் எது தெரியுமா?″

″சொல்லுங்க.″

″குளிர்வித்தல் மற்றும் போர்த்துதல்.″

″விளக்கமா சொல்லுங்களேன்″

″சொல்றேன். தீப்பிடித்த பகுதியில நீர் போன்ற குளிர்விப்பான அதிக அழுத்தத்தில் செலுத்தும்போது, அங்கிருக்கும் வெப்பம் நீக்கப்படுது. இதனால் தீ கட்டுப்படுத்தப்படுது. இந்த முறையைக் குளிர்வித்தல் அப்படின்னு சொல்றாங்க.

தீப்பிடித்த பொருட்கள் மீது சில வேதிப்பொருட்கள அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுது. இதனால் ஏற்படும் நுரை தீப்பிடித்த பொருள்களின் மேல் படியுது.

இதனால அந்தப் பொருட்களுடனான ஆக்சிஜன் தொடர்பு துண்டிக்கப்பட்டு, தீ அணைக்கப்படுது. இந்த முறைக்கு போர்த்துதல் அப்படின்னு பேரு.″

″நீர், வேதிப்பொருட்கள்ணு சொன்னீங்களே. அப்ப பல வகையில தீயணைப்பான்கள் இருக்கா?″

″ஆமாம். பொதுவா விபத்துக்கான எரிபொருள் அல்லது விபத்துக்கான காரணி ஆகியவற்றின் அடிப்படையில் தீயணைப்பான்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கு.

வேதிநுரை தீயணைப்பான், உலர் வேதிப் பொடி தீயணைப்பான், கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பான் என பலவகை தீயணைப்பான்கள் இருக்கு.″

″சரி சார். நீர் தீயணைப்பான பத்தி சொல்லுங்க″

″இத கேட்பேன்ணு எனக்கு தெரியும்″

″சொல்லுங்களேன்″

″உம். நீர் தீயணைப்பான் பொதுவா காகிதம், மரம், நெகிழி போன்ற பொருட்களால உண்டாகும் தீ விபத்துகளை தடுக்க பயன்படுது.

முக்கியமா, நீர் இரண்டு வழிகள்ல தீயணைப்பானாக செயல்படுது, அதாவது, வெப்பத்த நீக்குவதன் மூலமும், எரியும் பொருட்கள நனைச்சு, அதாவது குளிர்விப்பதன் மூலமும், தீ மேலும் எரியாம தடுக்குது.″

″நல்லது சார்″

″உம்ம்… நீர் தீயணைப்பானின் எடை மிகவும் குறைவு, செயல்திறன் அதிகம். பயன்படுத்துவதற்கு எளிது. பாதுகாப்பானதும் கூட. விலையும் குறைவு தான். அத்தோட சுற்றுச்சூழலுக்கும் இதனால எந்த பாதிப்பும் ஏற்படாது.”

″மகிழ்ச்சி சார்.″

″இன்னொரு தகவலும் இருக்கு″

″என்னது?″

″நீர் தீயணைப்பானின் செயல்திறன் அதிகரிக்க, கூடுதலா மேல் பரப்பி, பால்மமாக்கி, தடிமனாக்கி, கொடுக்கிணைப்பு கரணி, உறைதல் தடுப்பு காரணி முதலியனவற்ற சேர்க்குறாங்க.″

″சிறப்பு சார்.″

″இம்ம் எனக்கு பசிக்கிறா மாதிரி இருக்கு.″

″சரிங்க நான் புறப்படுறேன்″ என்றுக் கூறி நீர் சென்றது.

நானோ, எனக்கு பிடித்த உருளைக்கிழங்கு பொரியலுடன் மதிய உணவை சாப்பிட தயாரானேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.