மதியம் பன்னிரெண்டு மணி இருக்கும். சமையல் முடிந்தது. மேடையை சுத்தம் செய்துவிட்டேன். சுழன்று கொண்டிருந்த உறிஞ்சு மின்விசிறியை அணைத்தேன்.
சமையலறையில் நிசப்தம் ஏற்பட்டது.
அப்பொழுது தான் உணர்ந்தேன், அந்த ‘டொக்… டொக்…’ எனும் மெல்லிய ஒலியை.
உடனே சமையல் மேடைக்கு பின் வலதுபுறத்தில் இருந்த கழுவும் தொட்டியை பார்த்தேன்.
குழாயில் இருந்து நீர் துளி ஒவ்வொன்றாக சொட்டிக் கொண்டிருந்தது.
கழுவும் தொட்டியில் இருந்த ஒரு சிறிய பாத்திரத்தில் நிரம்பி வழியப் பார்த்தது. உடனே, சென்று குழாயை நன்கு மூடினேன்.
‘ச்சே! கவனிக்காம விட்டுட்டேனே’ என வருந்தினேன்.
“சார்… சார்…” அந்தப் பாத்திரத்தில் இருந்த நீர் அழைத்தது.
“உம்ம்ம் சொல்லு.”
“நான் எவ்வளவு நேரமா உங்கள அழைக்கிறேன். நீங்க தான் கவனிக்கலையே.”
“சமைச்சிக்கிட்டு இருந்தேன். அதான்… குழா சரியா மூடாம, நீரும் சொட்டிக்கிட்டே இருந்திருக்கு.”
“அதுக்குத்தான் சார். நான் உங்கள அப்போதிலிருந்து கூப்பிட்டேன். உங்க காதுல விழல”
“அடடா… ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் சமைச்சேன். ஒன்னு ஒன்னா யோசிச்சு செஞ்சதுல, எல்லாத்தையும் சரியா கவனிக்க முடியல.”
“பரவால சார். நீங்க சமைச்சு முடிச்சிட்டீங்களா?”
“ஆம்… முடிச்சிட்டேன்.”
“ஓ… இப்ப சாப்பிட போறீங்களா?”
“இல்ல… எப்பவும் ஒரு மணிக்கு சாப்பிடறது தான் என்னோட வழக்கம்.”
“அப்ப உங்ககிட்ட பேசலாம்.”
“இம்ம்… பேசலாமே.”
“சார், குழாயிலிருந்து நீர் ஒன்னும் ஊற்றி வீணாகலயே. ஒவ்வொரு துளியாத் தானே நீர் வந்துச்சு. அதுக்கு ஏன் நீங்க ரொம்பவும் வருத்தப்பட்டீங்க…?”
“என்ன இப்படி சொல்லிட்டே? ஒவ்வொரு துளியா சேர்ந்து தானே இப்ப இந்த பாத்திரம் முழுக்க நீர் நிரம்பி இருக்கு. அதுமாத்திரம் இல்ல ஒரு சின்ன நீர்துளியில எவ்வளவு ஆச்சரியம் இருக்கு தெரியுமா?”
“என்ன சார் சொல்றீங்க. நீர் துளியில ஆச்சரியமா?”
“ஆமாம். சமீபத்துல. நுண்நீர் துளியோட ஒரு முக்கிய பண்ப கண்டுபிடிச்சிருக்காங்க.”
“சார். ஆண்டாண்டு காலமா நீர பயன்படுத்திக்கிட்டு வர்றாங்க. இன்னமுமா நீர பத்தி முழுசா அறிவியல் உலகம் தெரிஞ்சிக்கல?”
“ஆமாம். பொதுவா நீரோட பல செய்திகள் தெரியும். ஆனா நீரப் பத்தி இன்னும் ஆய்வு செஞ்சி அறிய வேண்டியது இருக்குது.
நீர் தொடர்பான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்துக் கிட்டே தான் இருக்குது. சரி, நான் சமீபத்துல படிச்ச செய்தியை உங்கிட்ட சொல்லட்டுமா?”
“அதுக்காகத்தானே சார் நான் காத்துகிட்டு இருக்கேன். சொல்லுங்க.”
நீர் நுண்துளி
“சொல்றேன் சொல்றேன். நிதானமா கேளு.
மைக்ரோ மீட்டர் அளவுடைய நீர்த்துளிய நீர் நுண்துளி அப்படின்னு சொல்றோம்.
நீர் நுண்துளிகள், தானாக ஹைட்ரஜன் பெராக்சைடை உருவாக்குதாம்.”
“ஹைட்ரஜன் பெராக்சைடா?”
“ஆமாம். இரண்டு ஹைட்ரஜன் மற்றும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்தது தான் ஹைட்ரஜன் பெராக்சைடு. இத H2O2 -ன்னும் சொல்லுவாங்க.
இந்த ஹைட்ரஜன் பெராக்சைடு, தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான வேதிப்பொருள். இத தயாரிக்கிறதற்கு பல செயல்முறை இருக்கு.
ஆனா, இந்த புதிய கண்டுபிடிப்புனால, ஹைட்ரஜன் பெராக்சைடின் உற்பத்தி சுலபமாவும் சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் இருக்குமுன்னு விஞ்ஞானிகள் நம்புறாங்க.”
“மகிழ்ச்சி சார். ஆனா, இத எப்படி இப்ப கண்டுபிடிச்சாங்க?”
“தற்செயலாத்தான்.”
“அப்படியா!”
“ஆமாம். ஆராய்ச்சியாளர்கள், நீர் நுண்துளிகளைப் பயன்படுத்தி தங்க நானோ கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சியில ஈடுபட்டிருந்த போது தான், இந்த கண்டுபிடிப்பு தற்செயலாக நிகழ்ந்திருக்கு.”
“கொஞ்சம் விரிவா சொல்லுங்க.”
“உம்ம்… அதாவது தங்க அயனிகளை, உலோக தங்க நானோதுகளா மாற்றுவதற்கு, ஒடுக்கும் தன்மைக் கொண்ட வேதிச்சேர்மத்த பயன்படுத்தியிருக்காங்க.
அப்போது தான், அவங்களுக்கு ஒரு யோசனை வந்திருக்கு. அது என்னன்னா, ஒடுக்கும் வேதிச்சேர்மம் இல்லாம இந்தவினை நிகழுதான்ணு சோதனை செஞ்சிருக்காங்க.
கோட்பாட்டளவில் ஒடுக்கும் வேதிச்சேர்மம் இல்லாம, தங்க உலோக நானோதுகள்கள உருவாகாது. ஆனா, இவங்க நிகழ்த்திய வினையில தங்க உலோக நானோதுகள் உருவாகியிருக்கு.
இது எப்படின்னு புரியாம பல சோதனைகள ஆய்வுக் குழுவினர் செஞ்சிருக்காங்க.
அதுலதான், நீர் நுண்துளிகள் தன்னிச்சையாக அதிக செறிவில் ஹைட்ரஜன் பெராக்சைடை உருவாக்குதுன்னும், அதுமூலமா தான் தங்க அயனிகள் ஒடுக்கம் அடைந்து தங்க உலோக நானோதுகள் உருவாகியிருக்குன்னும் கண்டுபிடிச்சிருக்காங்க.”
“சிறப்பு தான்… “
நீர் நுண்துளி உறை நிலை
“இம்ம். இன்னொரு செய்தியும் இருக்கு. அது நானோமீட்டர் அளவுடைய நீர் துளியின் உறையும் தன்மை பற்றியது. சொல்லட்டுமா?”
“ஓ… சொல்லுங்களேன்.”
“இம்ம். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில திரவ நீர் பனிக்கட்டியா மாறுவது உனக்கு தெரியுமில்லே?”
“ஆமாம்… ஏற்கனவே இத சொல்லியிருக்கீங்களே”
“நல்லது, பல காரணிகள பொருத்து பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸுக்கு கீழேயும் நீர் உறையாம இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், எல்லா நீரும் -38 டிகிரி செல்சியஸுல உறைஞ்சிடும் இத தவிர்க்கவே முடியாது.”
“இம்ம்…”
“ஆனா, புதிய ஆய்வு மூலம், இரண்டு நானோமீட்டர் அளவு வரையிலான நீர்த்துளிகள் எப்படி உறையுதுன்னு கண்டறிஞ்சிருக்காங்க.”
“அப்படியா!”
“இம்ம்… நானோமீட்டர் அளவுடைய ஒரு நீர்த்துளி மென்மையான இடைமுகத்துடன் தொடர்பு கொண்டால், உறைபனி வெப்பநிலை கடினமான மேற்பரப்புகளை விட கணிசமாகக் குறையுதாம். கிட்டத்தட்ட -44 டிகிரி செல்சியஸ் வரைக்கு அது உறையாதாம்.”
“அதாவது, ஒரு பெரிய நீர் துளியா இருந்தா 0 முதல் -38 டிகிரி செல்சியஸுக்குள்ள பனிக்கட்டியா உறைஞ்சிடும். இதுவே, நானோ மீட்டர் அளவுள்ள நீர் துளியா இருந்தா உறைவதற்கு -44 டிகிரி செல்சியஸ் வேணும். ரொம்பவும் தாமதமா உறையும். சரிதானே?”
“சரியா சொன்ன.”
“இதுனால என்ன நன்மை சார்?”
“இருக்கு. பொதுவா, ஒரு விலங்கு செல்லுக்குள் இருக்கும் நீர் உறைஞ்சிதுன்னா அது செல்லை சிதைத்து மரணத்திற்கு வழிவகுக்கும்.
ஆனா, உறையவைக்கும் குளிருலையும் சிலவகை உயிரினங்கள் வாழுதுல்லே. அதுக்கு, இந்த நானோமீட்டர் அளவுள்ள நீர்துளியின் பண்பு கூட காரணாமா இருக்கலாம் இல்லையா?
அத்தோட, காலநிலை முன்கணிப்பு, மேக நிலைகள், விமானம் மற்றும் காற்றாலை விசையாழிகள் போன்றவற்றில் தற்போதைய கண்டுபிடிப்பு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாமுன்ணும் விஞ்ஞானிகள் நம்புறாங்க.”
“நல்லது. சரி சார். ரொம்ப நேரம் ஆயிடுச்சு. நாம் கிளம்பட்டுமா?”
“சரி. எனக்கும் பசிக்கிறா மாதிரி இருக்கு” என்று கூற நீர் புறப்பட்டது.
உடனே, நான் சுவர் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஒன்று எனக் காட்டியது.
(உரையாடல் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
நீர் பிளவு – நீருடன் ஓர் உரையாடல் 37
மறுமொழி இடவும்