நீர் பிரம்மி – மருத்துவ பயன்கள்

நீர் பிரம்மி முழுத் தாவரமும் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. நரம்புகளைப் பலப்படுத்தும். சிறுநீரைக் கட்டுப்படுத்தும். மலமிளக்கும்; பேதியைத் தூண்டும்.

பல கிளைகளாகப் பிரிந்த சதைப் பற்றான சிறு செடி வகைத்தாவரம். கணுக்கள் வேர்களுடன் கூடியதாக அடர்த்தியான தொகுப்பாக காணப்படும். தாவரம் முழுவதும் பச்சை நிறமாக‌க் காணப்படும்.

இலைகள் நீண்டு உருண்டையானவை; சதைப்பற்றானவை; மலர் வெண்மையானது. செங்கருநீலமான திட்டுகள் இதழ்களில் காணப்படும். மலர்கள் விரைவாக வாடிவிடும் தன்மை கொண்டவை.

சமவெளிகள், கடற்கரை ஓரங்களில் பரவலாகவும், தாழ்வான சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளை ஒட்டி மிகவும் அடர்த்தியானதாகவும் வளர்கின்றது. இதனுடைய மருத்துவ குணங்களுக்காக தற்போது இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகின்றது.

சாம்பிராணி பூண்டு, பிரமிய வழுக்கை, நீர்ப்பிரம்மி சப்தலை, வாடிகம், சருமம், விவிதம் ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது.

வீக்கம் கட்டிகள் கரைய முழுதாவரத்தை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டு அவற்றின் மீது பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும்.

தொண்டை கரகரப்பு குணமாக முழுத் தாவரத்தை நீரில் கழுவி சுத்தம் செய்து, அரைத்து, பிழிந்த சாறு 4 தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். அல்லது ஒரு பிடி அளவு தாவரத்தை வெண்ணெயில் பொரித்து சாப்பிட வேண்டும். தினமும் ஒரு வேளை 5 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

கோழை கட்டு குணமாக முழுதாவரத்தையும் அரைத்து பசையாக்கி நெஞ்சுப் பகுதியில் பூசி வர வேண்டும்.

நீர் பிரம்மியின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பண்பு சமீபத்திய உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நரம்பு தளர்ச்சியைக் குணமாக்கும் பல மருந்துத் தயாரிப்பிலும் நீர் பிரம்மி சேர்கின்றது.

குழந்தைகளுக்கான ஞாபக சக்தியை அதிகரிக்கும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் நீர்ப்பிரம்மியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.