நீர் பிளவு – நீருடன் ஓர் உரையாடல் 37

ஒரு வழியாக தேங்காய் மட்டையை உரித்து விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக நாரையும் பிரித்து விட்டேன்.

தேங்காய் பெரிதாகவும் கனமாகவும் இருந்தது. சமையலறைக்குள் சென்று ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து வந்தேன்.

தேங்காயை இரண்டாக உடைத்தேன். தேங்காய் நீரை அந்த சிறிய பாத்திரத்தில் பிடித்தேன்.

சில துளிகளே தரையில் சிந்தின. எனினும் பாத்திரத்தில் இருக்கும் தேங்காய் நீரில் நார் தூசிகள் இருந்தன. வடிகட்டி பின்னர் தேங்காய் நீரை குடிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

தேங்காய் மற்றும் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் சமையலறைக்கு வந்தேன்.

வ்டிகட்டியின் மூலம் தேங்காய் நீரில் இருக்கும் தூசிகளை நீக்கினேன்.

″சார் ஒரே அடியில தேங்கா ரெண்டா உடஞ்சிடுச்சே″ – குரல் கேட்டது.

″நீரா?″

″ஆமாங்க… நான் தான்″

″இம்ம்….″

″பாத்தீங்கல? தேங்காய உடைச்சாலும் நான் தான் இருக்கேன். இனிப்புச் சுவையோட உங்களுக்கு பருகவும் பயன்படுறேன்.″

″ஆமாம். உனக்கு ரொம்ப நன்றிகள்″

″இருக்கட்டும்… இருக்கட்டும்..″

″இம்ம்… உனக்கு தெரியுமா? நீர உடைச்சாலும் நன்மை இருக்கு″

″என்னது? என்ன உடைப்பீங்களா?″

″ஆமாம். நீர் பிளவு ஒரு வேதியியல் வினை. இதுல நீர் உடைஞ்சு ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுவா மாறும். ஆங்கிலத்துல இந்த வினைக்கு Water splitting-ன்னு சொல்லுவாங்க.″

″ஓஓ… ஆனா, நீர எப்படி உடைப்பீங்க?″

″முடியும். இதுக்குன்னு சில செயல்முறைகள் இருக்கு″

″அப்படியா? அது பற்றி சொல்லுங்க″

நீர் பிளவு வழிமுறைகள்

″சொல்றேன். மின்னாற்பகுப்பு முறை மூலமா, அதாவது மின்சாரத்தை பயன்படுத்தி நீர பிளந்து, ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் தயாரிக்க முடியும். ஆனா, இந்த செயல் முறைக்கு மின்சாரம் தேவைப்படுது. இதனால நீர பிளப்பதற்கு மின்னாற்பகுப்பு முறைய பெரிசா பயன்படுத்தறது இல்ல.″

″ஓ… வேற ஏதாவது வழி இருக்கா?″

″இம்ம்… மாற்று வழிகள விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்காங்க. அதுல முக்கியமா சொல்லணும்னா, ஒளிமின்வேதிகலன் முறைய சொல்லலாம்.″

″ஒளிமின்வேதிகலனா?″

″ஆமாம். ஆங்கிலத்துல Photoelectrochemical cell-ன்னு சொல்லுவாங்க. இந்த மின்கலம் மூலமா, சூரியஒளி ஆற்றல மின்னாற்றலா மாற்றி பிறகு, அந்த மின்னாற்றல் மூலமா நீரை பிளக்கறாங்க.″

″சார் சூரியஒளி எப்படி மின்னாற்றலா மாறுது?″

″இம்ம்… இதுக்குன்ணு பிரத்யேக வினையூக்கி வேதிபொருள பயன்படுத்துறாங்க. இந்த வினையூக்கி மேல ஒளிபட்டவுடன், எலக்ட்ரான்கள வெளிவரும். இதுவே மின்னாற்றலா மாறி, பிறகு நீர் மூலக்கூறுகள பிளக்கும்.″

″நல்லது சார்.″

″ஆம், நீரை பிளக்க இன்னொரு முறையும் இருக்கு″

″என்ன அது?″

″ஒளி வினையூக்கி முறை″

″ஓஓ…″

″நீருல ஒளி வினையூக்கிப் பொருள போட்டு, ஒளிய பாய்ச்சினா போதும். தானா நீர் மூலக்கூறு பிளக்கப்பட்டு ஹைட்ரஜன் வாயு வெளிவரும். மற்ற முறைகள காட்டிலும் இந்த முறை மிகவும் சிறந்தது. ஏன்னா, இதுல மின்சாரம் பயன்படுத்த வேண்டியதில்ல. அத்தோட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான சூரிய ஆற்றலே போதுமானது.″

″சிறப்பு சார். ஆனா ஒரு சந்தேகம்″

″என்ன?″

″வெப்பமும் ஒரு ஆற்றல் தானே?″

″ஆமாம். அப்ப வெப்ப ஆற்றலால நீர பிளக்க முடியாதா?″

″பரவாயில்லையே, நல்லா கேள்வி கேக்குற″

″பதில சொல்லுங்க″

″இம்ம்… வெப்ப ஆற்றல் மூலமாவும் நீர பிளக்கலாம். ஆனா இதுக்கு அதீத அளவு வெப்பநிலை தேவைப்படும்″

″எவ்வளவு?″

″சுமார் 2000 டிகிரி செல்சியஸுக்கும் மேல″

″ரெண்டாயிரம் டிகிரி செல்சியஸா!″

″ஆமாம். இந்த அதீத வெப்பநிலையில, கொஞ்சமா தான் நீர் மூலக்கூறுகள் பிளக்கபடுது. அதுவும் ஹைட்ரஜன் வாயுவ தவிர மற்ற ஹைட்ரஜன் ஆக்சிஜன் மூலக்கூறுகளும் உருவாகும்.″

″அப்படியா″

″நான் தான் ஏற்கனவே, சொன்னேன்ல, நீர பிளக்க தற்போதைக்கு ஒளிவினையூக்கி முறை தான் சிறந்ததா கருதப்படுது.″

நீர் பிளவின் நன்மை

″நல்லது சார். ஆனா ஏன் நீர பிளக்கணும்? ஹைட்ரஜன் வாயுவ எடுக்கணும்?″

″அட இத சொல்ல மறந்துட்டேனா?″

″ஆமாம். இப்ப சொல்லுங்க″

″ஹைட்ரஜன் ஒரு சிறந்த எரிபொருள். இதுமூலமா சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாது. அதான் எளிமையான அதேசமயத்துல குறைந்த செலவுல, நீர பிளந்து ஹைட்ரஜன் வாயுவ எடுக்க உலகெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருது.″

″அப்படியா… அப்ப நல்லது தான்″

″சரி சரி. நேரம் ஆயிடுச்சு.″

″தேங்கா தண்ணீர குடிக்கணுமா?″

″அதுவும் தான். அதோட தேங்காய எடுக்கணும். இட்லிக்கு சட்னி செய்யணுமே″

″சரிங்க சார்.. நான் போயிட்டு வர்றேன்.″

″சரி அப்புறம் பேசுவோம்″ என்று கூறி தேங்காய் சட்னியை செய்ய தொடங்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461

மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீரியல் வளர்ப்பு‍ – நீருடன் ஓர் உரையாடல் 38

நீர் நுண்துளி – நீருடன் ஓர் உரையாடல் 36

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.