நீர் பொழுதுபோக்கு – நீருடன் ஓர் உரையாடல் 39

மீன் தொட்டியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். தங்கநிற மீன்களும், கருப்புநிற மீன்களும் ஓயாமல் நீந்திக் கொண்டிருந்தன.

சிறுமீன்கள் தொட்டியின் அடிப்பாகத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த சிறு கற்களுக்கிடையே அவ்வப்பொழுது பதுங்கியிருந்து, பின்னர் மீண்டும் மேலெழுந்து திரிந்தன.

ஒருவேளை அவைகள் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றனவோ? என்னவோ! தெரியவில்லை.

ஆனால் பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் மகிழ்ச்சி பொங்கியது.

“அப்படி என்ன சார் உத்து பார்க்குறீங்க?”– நீர் என்னை நோக்கி கேட்டது.

“நீந்தும் மீன்கள பார்த்து பொழுத போக்கிட்டு இருக்கேன்.”

“என்ன பொழுது போக்குறீங்களா? ஏன், வேல எதுவும் இல்லையா?”

“வேல நெறையவே இருக்கு”

“பின்ன ஏன் இப்ப சும்மா பொழுது போக்கிட்டு இருக்கீங்க?”

“சும்மா இல்ல. பொழுது போக்குறதுல கூட சில நன்மைகள் இருக்கு”

“என்னது பொழுது போக்குறதால நன்மையா?”

“ஆமாம். தேவையான நேரத்துல, போதுமான அளவு பொழுதுபோக்குல ஈடுபடுவதால நிச்சயம் நன்மைகள் இருக்கு. இதுனாலத்தான் வார விடுமுறை நாட்கள் இருக்கு.”

“விடுமுறை நாட்களா! அப்படீன்னா?

“சொல்றேன். பொதுவா, மனிச‌ங்க நாங்கெல்லாம் வாரத்துல ஐந்து நாட்கள் உழைப்போம். வேல செய்யும் துறையப் பொறுத்து ஆறுநாட்கள் கூட வேல செய்வாங்க. எப்படிப் போனாலும் வார இறுதிநாளான ஞாயிற்று கிழம விடுமுறை. அதாவது அன்னிக்கு வேலைக்கு போக வேண்டியதில்ல.”

“எதுக்கு?”

“ஆமா. ஒருநாள் ஓய்வு எடுத்துக்கிட்டா சோர்வு போயிடும். அப்புறம் அடுத்த வாரத்துல ஆர்வத்தோட வேலை செய்ய முடியும்.”

“ஓ…ஓ…”

“இம்ம் ஓய்வு மட்டும் இல்ல. பொழுதுபோக்கு செயல்கள்லையும் ஈடுபடுவோம். இதனால் மகிழ்ச்சி கிடைக்கும். இப்ப நான் மீன்கள பார்த்துக்கிட்டு பொழுது போக்குறதுனாலக் கூட எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிது. அதோட நல்ல பொழுதுபோக்கு செயல்களால உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.”

“இதுல இவ்வளவு இருக்கா?”

“இம்ம்.. இன்னும் சொல்லப்போனா, விடுமுறை காலங்கள்ல குடும்பத்தோடும், நண்பர்கள் மற்றும் உறவினர்களோடும் பொழுத கழிக்க பல சுற்றுலா பகுதிகளுக்கு போவோம். இதனால மத்தவங்களோட பழகுவதற்கான வழி கிடைக்கிது. அத்தோட குடும்ப உறவுகள் பலப்படுவதாகவும் சொல்றாங்க.”

“ஆஆம்… சரி பொழுத போக்க எங்கெங்கல்லாம் போவீங்க?”

“பூங்கா, உயிரியல் பூங்கா, பறவைகள் சரணாலயம், கேளிக்கை பூங்கா, இயற்கை நீர்ப் பகுதிகளான கடற்கரை, ஆறு மற்றும் நீர் விளையாட்டு பூங்கான்ணு பல பகுதிகள் இருக்கு.”

“நீர் நிலைகள் கூட பொழுது போக்குவதற்கு பயன்படுதா?”

“ஆமாம்”

“சரி, நீர் பகுதிகள்ல போய் எப்படி பொழுது போக்குவீங்க?”

“பல வகைகள்ல பொழுத கழிக்கலாம். சில பேரு நீச்சலடிப்பாங்க, படகு சவாரி போவாங்க. சிலரு மீன் புடிச்சு அங்கேயே சமைச்சு சாப்பிடுவாங்க. பனி பிரதேசங்கள்ல மக்கள் பனிச்சறுக்குல ஈடுபடுவாங்க.”

“ஒரு சந்தேகம். நீச்சல் தெரியாதவங்க, மீன்புடிக்க தெரியாதவங்கள்லாம் நீர் பொழுதுபோக்கு இடங்களுக்கு போக முடியாதா?”

“அப்படியில்ல. இயற்கையான நீர் நிலைகள பார்த்தாலே மகிழ்ச்சி வரும். சும்மா கடற்கரையில உக்காந்து கடல் அலைகள பார்த்தாலும், அவற்றோட ஓசைய கேட்டாலுங்கூட மனசுக்கு அமைதி கிடைக்கும். அதேபோல நீர்வீழ்ச்சிகள பார்க்கும்போது மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.”

“என்னை பார்த்தாக்கூட மனிதர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமுன்னு கேட்கும் போது, எனக்கும் மகிழ்ச்சி உண்டாகுது சார்.”

“நன்றிகள்”

“இம்ம். சார், எல்லா நீர் பகுதிகளையும் பொழுதுபோக்கு மையமா பயன்படுத்துவீங்களா?”

“இல்ல. பல காரணிகள பொறுத்து நீர் பொழுதுபோக்கு மையங்கள ஏற்படுத்துறாங்க. குறிப்பா மனித உடல்நலம் மற்றும் சூழியல பொறுத்து நீர் பகுதிகள் பொழுதுபோக்கு மையமா செயல்படும்.”

“அப்படியா!”

“ஆமாம். நீர் பொழுதுபோக்கு இடங்கள், நோய்க்கிருமிகள் மற்றும் இரசாயன மாசுபாடுகள இல்லாத சூழலாக இக்கணும். இல்லைன்னா மாசு அடைஞ்ச நீருல நீச்சல் அடிப்பவர்களுக்கு ஏதேனும் உடல்நலன் சார்ந்த பிரச்சனைகள் வரலாம். மாசடைந்த நீர்நிலைகள்ல பிடிச்ச மீன்களை சாப்பிடுவதன் மூலமா உடல உபாதைகளும் வரலாம்.”

“ஆமாம் ஆமாம்.”

“இம்ம். அப்புறம் சூழியலைப் பொறுத்தும் இயற்கை நீர் பகுதிகள் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துறாங்க. எடுத்துக்காட்டா, நீர் நிலைகளில் ஆபத்தான உயிரினங்கள், அல்லது ஆரோக்கியமற்ற தாவரங்கள் இருந்தா அந்தப் பகுதிகள பொழுதுபோக்கிற்காக பயன்படுத்த முடியாது.”

“சரி சார்”

“இம்ம்… சார் நேரமாச்சு. எனக்கு வேல இருக்கு. பிறகு சந்திக்கலாமா?”

“சரி சார். அப்புறம் பார்க்கலாம்” என்று கூறி நீர் புறப்பட்டது.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர்த் தாரை இயந்திரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் 40

நீரியல் வளர்ப்பு‍ – நீருடன் ஓர் உரையாடல் 38

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்