நீர் மாசுபாடு

நீர் மாசுபாடு

நீர் மாசுபாடு என்பது ஆறு, குளம், கடல், நிலத்தடி நீர் போன்றவைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும்.

நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளை மாற்றம் செய்யும் பொருளானது நீரில் கலந்து அதன் தன்மையையும், தரத்தினையும் மாற்றும் நிகழ்வு நீர்மாசுபாடு என்று வழங்கப்படுகிறது.

இப்புவியானது 70 சதவீத நீர்பகுதியினை கொண்டுள்ளது. நீரானது உயிரினங்களின் உயிர் வாழ மிகவும் முக்கியமானது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீரானது மாசுபடும்போது அது நேரடியான மற்றும் மறைமுக பாதிப்புகளை உயிரினங்கள் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படுத்துகின்றது.

மிதக்கும் ரசாயன கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளால் நீர்நிலைகள் விஷம் நிறைந்தவைகளாக மாறி வருகின்றன. மக்கள் தொகைப் பெருக்கம், நகர்மயமாதல், தொழிற்புரட்சி போன்றவையே நீர் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாகும்.

இன்றைக்கு நீர் மாசுபாடு பெரிய பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினை உலகினை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறது.

நீரானது தன்னுள் வரும் நச்சுப் பொருட்களை எளிதில் கரைத்து தன் பரப்பு முழுவதும் பரவச் செய்து எளிதில் மாசடைகிறது.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு நாளும் 2 மில்லியன் டன் கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன. மாசடைந்த நீரினைப் பயன்படுத்தி மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டும் சில நேரங்களில் உயிரையும் இழக்கின்றனர்.

இந்தியாவில் மாசடைந்த நீரினைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 1000-த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கு நோயால் மரணமடைகின்றனர்.

நீர் மாசுபாடானது இயற்கை மற்றும் மனித செயல்பாடுகளால் ஏற்படுகின்றன. எரிமலை சீற்றங்கள், நிலநடுக்கங்கள், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் நீர்மாசடைகிறது.

பொதுவாக இம்மாசுபாட்டினால் நீர்வாழ் விலங்குகள் மற்றும் தாவரங்கள் நேரடியாகவும், மற்ற உயிரினங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றன.

 

நீர் மாசுபாட்டின் மூலங்கள்

இம்மாசுபாட்டின் மூலத்தினை ஓரிட மாசுபாட்டு மூலம் மற்றும் பரவலான மாசுபாட்டு மூலம் என இருபிரிவுகளாகப் பிரிக்கலாம்.

ஓரிட மாசுபாட்டு மூலத்தில் நீர்நிலையின் ஏதேனும் ஓரிடத்தில் மாசுபடுத்தியானது நீரில் கலக்கிறது. எடுத்துக்காட்டாக தொழிற்சாலை கழிவானது குழாயின் மூலம் நீர்நிலையில் கலப்பதைக் கூறலாம்.

பரவலான மாசுபாட்டு மூலத்தில் நீர்நிலையின் பல்வேறு இடங்களில் மாசுபடுத்தியானது நீரில் கலக்கிறது. இவை ஒன்று சேர்ந்து நீரினை அதிகளவு மாசடையச் செய்கின்றன. இதனால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றன.

 

நீர் மாசுபாட்டிற்கான காரணங்கள்

தொழிற்சாலைக் கழிவுகள்

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் காரீயம், பாதரசம், கந்தகம், நைட்ரேட் போன்ற விஷத்தன்மையான வேதிப்பொருட்களையும், மாசுபடுத்திகளையும் கொண்டுள்ளன.

இவை சரியாக வடிகட்டப்படாமல் நீர்நிலைகளில் அப்படியே விடப்படுகின்றன. இவை நீரின் நிறத்தினையும், தரத்தினையும் மாற்றி அதனை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசுபடுத்துகின்றன.

 

வீட்டுக்கழிவுநீர்

வீட்டுகளில் இருந்து வெளியேறும் சோப்புகள், டிடர்சென்டுகள் கலந்த நீர், மனிதக்கழிவுகள், வாகனங்களைச் சுத்தம் செய்த நீர் போன்றவை சுத்திகரிக்கப்பட்டோ அல்லது சுத்திகரிக்கப்படாமலோ நீர் நிலைகளில் விடப்படுகின்றன. இவை நீரினை மாசுபடுத்துகின்றன.

இக்கழிவு நீரிலிருந்து உருவாகும் பாக்டீரியா உயிரினங்களுக்கு பலவித நோய்களைத் தோற்றுவிக்கின்றன. மேலும் திடவீட்டுக்கழிவுப் பொருட்களான பிளாஸ்டிக், பேப்பர், இரப்பர், அலுமினியம் போன்றவை நீரில் கலந்து உயிரினங்களுக்கு தீங்கிழைக்கின்றன.

 

சுரங்க நடவடிக்கைகள்

சுங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் தாதுக்களின் மூலப்பொருட்கள் நீரில் கலந்து நீரினை மாசடையச் செய்கின்றன. சுரங்க நடவடிக்கைகள் உலோகக்கழிவுகளையும், சல்பைடுகளையும் நீரில் கலக்கச் செய்கின்றன. இவை மனித உடலுக்கு தீங்கிழைப்பவை.

 

எண்ணெய் கசிவு

இந்நிகழ்வு பெரும்பாலும் கடல்களில் நிகழ்கின்றன. எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலக்கும்போது எண்ணெய் நீரில் கரையாமல் நீரின் மேற்பரப்பில் பரவி நிற்கும்.

இதனால் நீர் மாசுபடுவதோடு ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளி கிடைக்காமல் கடல்வாழ் உயிரினங்கள் இறக்கக் கூடும். இந்நிகழ்வு சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 

நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள்

படிம எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் நிலக்கரி போன்றவற்றை எரிப்பதினால் உருவாகும் புகையானது வளிமண்டலத்தில் உள்ள நீர்மூலக்கூறுகளுடன் சேர்ந்து அமில மழையை உருவாக்குகின்றன.

மேலும் பெட்ரோல் மற்றும் நிலக்கரி போன்றவற்றை எரிப்பதினால் உண்டாகும் வாயுக்கள் புவிவெப்பமயமாதலுக்கு காரணமாகின்றன.

 

செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள்

வேளாண்மையில் பயிர் நன்கு செழித்து வளரவும், நோய் தாக்காமல் இருக்கவும் செயற்கை பூச்சி கொல்லிகள் மற்றும் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மழையின் மூலம் அடித்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கலக்கின்றன. இதனால் இவை நீரினை மாசடையச் செய்வதுடன் உயிரினங்களுக்கு நோயினை உண்டாக்குகின்றன.

 

கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள்

கழிவுநீர் குழாய்கள் மற்றும் எண்ணெய் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் நிலத்தினையும், நிலத்தடிநீரினையும் பாதிப்படையச் செய்கின்றன. மேலும் கசிவு அதிகமாகும்போது நிலத்தின் மேற்பரப்பையும், மேற்பரப்பு நீர்நிலைகளையும் பாதிக்கின்றன.

 

கதிரியக்க கழிவுகள்

கதிரியக்க கழிவுகளை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் நீரில் விடும்போது அவை மிகக்கடுமையான விளைவுகளை உண்டாக்குகின்றன.

நீர் மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகள்

நீர்வாழ் உயிரிகள் இறப்பு

நீர் மாசுபாட்டினால் நீர்வாழ் உயிரிகள் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமை, சூரிய ஒளியின்மை போன்றவற்றால் உடல்ரீதியாக மாற்றங்களைச் சந்திக்கின்றன. தாக்குப்பிடிக்க முடியாதவை உயிரையும் இழக்கின்றன. இதனால் நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன.

நீர்மாசுபாட்டினால் இறந்த மீன்கள், நண்டுகள், கடல்பறவைகள், டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை நாம் அடிக்கடிக் காணலாம்.

 

உணவுச்சங்கிலியில் மாற்றம்

மாசடைந்த நீரில் உள்ள மாசுபடுத்திகளை நீரில் வாழும் நுண்ணுயிர்கள் உண்ணுகின்றன. அவற்றை உண்ணும் மீன்களின் வழியாக அவை மனிதனை வந்தடைகின்றன. இதனால் நோய்கள் ஏற்படுவதோடு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

 

மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்

மாசடைந்த நீரினை சரிவர சுத்திகரிக்காமல் பயன்படுத்துவதாலோ மாசடைந்த நீரினைப் பயன்படுத்துவதாலோ டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் உண்டாகின்றன. இவ்வாறு மனிதன் இம்மாசுபாட்டினால் நேரடியாக பாதிப்படைகின்றான்.

மாசடைந்த நீரில் வளரும் மீன்கள், நண்டுகள் ஆகியவற்றை உண்ணுவதால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள், தோல் நோய்கள் ஏற்படுகின்றன. இது நீர் மாசுபாட்டினால் ஏற்படும் மறைமுக விளைவு ஆகும்.

 

சுற்றுச்சூழல் சிதைவு

மாசடைந்த நீரில் ஆல்காக்கள் செழித்து வளருகின்றன. இதனால் நீரில் வாழும் உயிரினங்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாகுறை ஏற்படுகிறது. எனவே அவற்றின் இனப்பெருக்கத் திறன் பாதிப்படைவதோடு சில நேரங்களில் அழிவும் நிகழ்கிறது. இதனால் சுற்றுச்சூழலில் மாறுதல்கள் உண்டாகின்றன.

காற்று மாசிபாட்டில் உள்ள சல்பர்-டை-ஆக்ஸைடு, கார்பன்-டை-ஆக்ஸைடு போன்றவை வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்துடன் இணைந்து அமில மழையை உருவானக்குகின்றன. இதனால் நிலம் மற்றும் நீர்நிலைகள் மாசடைவதோடு சுற்றுச்சூழல் சிதைவும் ஏற்படுகின்றது.

 

நீர் மாசுபாட்டிற்கான தீர்வுகள்

நீர் மாசுபாடு ஏற்படக் காரணங்கள் மற்றும் அதன் விளைவுக‌ள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

வீடுகளில் இருந்து உருவாகும் குப்பைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கொட்டக் கூடாது. மேலும் வீட்டுக்குப்பைகளை மக்குபவை மற்றும் மக்காதவை எனப்பிரித்து சரியான முறையில் அகற்ற வேண்டும்.

அன்றாட மனித செயல்பாடான குளித்தல், துவைத்தல் போன்றவற்றிற்கு அளவான நீரினைப் பயன்படுத்துதல் என்பதனை எல்லோரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். அளவோடு நீரினைப் பயன்படுத்துவதால் கழிவுநீரினைச் சுத்திகரிக்கும் அளவு குறைவதுடன் நீர் பற்றாக்குறையும் சமாளிக்கலாம்.

நீர்நிலைகளில் தொழிற்சாலைகளில் கொட்டப்படும் கழிவுகள் சரியான முறையில் சுத்தரிக்கப்பட்டு பின் நீர்நிலைகளில் விடப்பட வேண்டும்.

வேளாண்மைக்கு செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றைத் தவிர்த்து இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதோடு இயற்கை வேளாண்மை செய்ய வலியுறுத்துதல் அவசியம்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்யாத மேலும் விரைவில் மட்கக்கூடிய பொருட்களை மட்டும் வாங்கி உபயோகிக்க மக்களை வலியுத்த வேண்டும்.

நீர் நிலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரினைக் கொட்டுவதை தடுத்து நீர் நிலைகளைப் பாதுகாக்க கடுமையான சட்டதிட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாசில்லா நீர்வளம் இன்றைய மற்றும் நாளைய சமுதாயத்தின் முக்கிய சொத்து என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

– வ.முனீஸ்வரன்

Visited 1 times, 1 visit(s) today