நீர் வாழிடம் – ஓர் அறிமுகம்

நீர் வாழிடம் உலகில் 70 சதவீத பரப்பினைக் கொண்டுள்ளது. நன்னீர் வாழிடம், கடல் வாழிடம் என இரு பிரிவுகளை உடையது. இதில் கடல் வாழிடம் அளவில் பெரியது.

நன்னீர் வாழிடம்

நன்னீர் வாழிடம்
நன்னீர் வாழிடம்

 

ஆறுகள், குளங்கள், நீரோடைகள், ஏரிகள், குட்டைகள், நன்னீர் ஊற்றுக்கள் உள்ளிட்டவை நன்னீர் வாழிடங்களாகும்.

இவ்வாழிடம் ஏனைய வாழிடங்களை வகைளைவிட அளவில் சிறியது. உலகின் உள்ள பரப்பில் 0.8 சதவீதத்தை இவ்வாழிடம் கொண்டுள்ளது.

இவ்வாழிடமானது குறைந்த ஆழமுடைய குட்டைகளிலிருந்து ஆழமான ஏரிவரை உள்ளது.

இவ்வாழ்விடத்தில் வெப்பநிலையானது உறைநிலையிலிருந்து கொதிநிலை வரை மாறுபட்டதாக உள்ளது.

இவ்வாழிட நீரில் கரைந்துள்ள உப்புகள் மற்றும் வாயுக்கள் ஆகியவற்றிலும் மாறுதல்கள் உள்ளன.

இவ்வாழிடத்தில் தண்ணீரின் உயரம் மற்றும் வேகம், வெப்பநிலை, தண்ணீரில் கரைந்தள்ள வாயுக்கள் ஆகிய காரணிகள் இவ்வாழிட உயிரினங்களைத் தீர்மானிக்கின்றன.

நிலவாழிடத்தை ஒப்பிடுகையில் நன்னீர் வாழிடம் அளவில் சிறியதாகவும், குறைந்த அளவு மாறுபாடுகளைக் கொண்டு பல வகையான உயிரினங்களை தன்னுள் கொண்டுள்ளது.

இவ்வாழிடம் சுமார் 1,00,000 உயிரினங்களுக்கு வாழ்வளிக்கிறது. உலகில் உள்ள மீன்களில் 41 சதவீதத்தை நன்னீர் வாழிடம் பெற்றுள்ளது.

நீர் அல்லி, தாமரை, பைட்டோ பிளாங்டன், ஆல்கா, அஸ்பென் உள்ளிட்ட தாவரங்கள் இவ்வாழிடத்தில் காணப்படுகின்றன.

இவ்வாழிடத்தில் மீன்கள், இருவாழ்விகள், முதலைகள், நன்னீர் ஆமைகள், நத்தைகள், ஓட்டர்கள், நீர்வாழ் பறவைகள், ஈல்கள், பிரானா, புழுக்கள், மிதவை உயிரிகள் உள்ளிட்டவைகள் காணப்படுகின்றன.

உலகின் நீளமான ஆறான அமேசான், உலகின் பெரிய ஏரியான சைபீரியாவில் உள்ள பைக்கால் ஆகியவை புகழ் பெற்ற நன்னீர் வாழிடத்திற்கு உதாரணங்களாகும். இந்த ஏரியானது உலகில் உள்ள நன்னீரில் ஐந்தில் ஒரு பங்கினைக் கொண்டுள்ளது.

 

 

கடல் வாழிடம்

கடல் வாழிடம்
கடல் வாழிடம்

 

இவ்வாழிடம் எல்லா வாழிடங்களிலும் மிகப்பெரியது. உலகின் மொத்த பரப்பில் 70 சதவீதம் கடல் வாழிடம் கொண்டுள்ளது.

இவ்வாழிடத்தின் இயல்பான பண்புகள் நிலையானவையாக உள்ளன. கடல் வாழிடமானது 6.7 மைல்கள் வரை ஆழத்தினைக் கொண்டுள்ளன.

வெப்பமண்டல கடல் வாழிடத்தின் வெப்பநிலை 32 செல்சியசாகவும், ஆர்டிக் கடலின் வெப்பநிலை -2.2 செல்சியசாகவும் உள்ளது.

இவ்வாழிடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெப்பநிலை வருடத்தில் 5 டிகிரி செல்சியஸ்சுக்கும் குறைவாக மாறுபடுகிறது.

இவ்வாழிடத்தில் உள்ள நீரில் உள்ள உப்பின் அளவும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

இவ்வாழிட நீரில் கரைந்துள்ள காற்றின் அளவானது அவ்விடத்தின் ஆழம் மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடுகிறது.

இவ்வாழிடத்தில் ஆக்ஸிஜனின் அளவானது மேற்பரப்பிலிருந்து குறிப்பிட்ட ஆழம் வரை அதிகமாக உள்ளது.

கடல் வாழிடத்தில் ஒளி ஊடுருவும் தன்மையை அவ்விடத்தின் மேற்பரப்பு இயக்கம் மற்றும் நீரின் கலங்கல் தன்மை ஆகியவை நிர்ணயிக்கின்றன.

சராசரியாக மேற்பரப்பில் இருந்து 6000 அடி ஆழம்வரை ஒளி ஊடுருவுகிறது. அதேபோல் கடல் வாழிடத்தில் நீரின் அழுத்தம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

இவ்வாழிடத்தில் உயிரினங்கள் பரவிக் காணப்படுகின்றன. இவ்வாழிடத்தில் ஒளி ஊடுருவும் பகுதிவரை மட்டுமே தயாரிப்பாளர்கள் காணப்படுகின்றன.

பயனாளி உயிரிகள் கடலின் மேற்பரப்பிலிருந்து கீழே செல்லச் செல்ல குறைந்து கொண்டே செல்கின்றன. ஆழ்கடலிலும் உயிரினங்கள் காணப்படுகின்றன.

கடல் வாழிடமானது திறந்த கடல்நீர் வாழிடம், ஆழ்கடல்நீர் வாழிடம் என இருவகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

திறந்த கடல்நீர் வாழிடத்தில் மிதவை உயிரிகள், திறந்த கடல்நீர் பரப்பு மீன்கள், கடல்வாழ் தாவரங்கள், திமிலங்கள், கடல்வாழ் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன.

ஆழ்கடல்நீர் வாழிடத்தில் கடற்சாமந்தி, பவளப்பாறைகள், ஆழ்கடல் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.

 

நீர் வாழிடத்தின் முக்கியத்துவம்

நீர் வாழிடம் சுற்றுசூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

நிலத்தடி நீரினை செறிவூட்டல், நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீரினை சுத்திகரித்தல், ஊட்டச்சத்துக்களை மறுசீரமைத்தல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல், உயிரினங்களுக்கு வாழ்விடம் போன்ற நிகழ்வுகளுக்கு நீர் வாழிடமானது உதவுகிறது.

நீர் வாழிடம் பொழுதுபோக்கு இடமாகவும், சுற்றுலா தலங்களாகவும் விளங்குகின்றது.

கடல் வாழிடம் உலக மக்களின் புரதச்சத்திற்கு ஆதாரமான மீன்களையும், கடல் உணவுப் பொருட்களையும் அதிகளவு வழங்குகிறது.

கடலில் இருந்து உணவுப்பொருட்கள், ஆற்றல், வேதிப்பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவை கிடைக்கின்றன.

நீர் வாழிடத்தில் உண்டாகும் பாதிப்புகள்

உலகில் உள்ள வாழிடங்களில் நன்னீர் வாழிடம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இப்பாதிப்பிற்கு சுற்றுசூழல் சீர்கேடு, பருவநிலை மாற்றம், மனிதனின் செயல்பாடுகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.

உலகில் உள்ள 177 நீளமான ஆறுகளில் 70-க்கும் குறைவான ஆறுகளே மனிதனின் செயல்பாடுகளால் பாதிப்படையாமல் இருப்பதாக உலக காட்டுயிரி பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கின்றது.

பொருளாதார விரிவாக்கத்திற்கான மனிதனின் செயல்பாடுகள், மோசமான நீர்மேலாண்மை, விவசாயம் போன்றவற்றால் நன்னீர் வாழிடம் சீர்கேடு அடைந்து நன்னீர் வாழிட உயிர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

2025-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நன்னீர் தேவையாக்க மிகப் பெரிய போராட்டத்தை எதிர் கொள்ள வேண்டிருக்கும்.

நன்னீரின் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 2 பில்லியன் மக்கள் உயிரிழப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிகளவு மீன் பிடித்தல், அதிக கடல் வளங்களைச் சுரண்டல், மாசுபாடு, காலநிலை மாற்றங்கள் போன்றவை கடல் வாழிடத்தில் பெரும் மாற்றங்களை உண்டாக்கி உள்ளன.

உலகில் பெரும் பகுதியான நீர் வாழிடத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு நம் நீர் வாழிடத்தினை பாதிக்கும் செயல்களைச் செய்யாது அதனைப் பாதுகாப்போம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.