கடந்த இரண்டு நாட்களாகவே, அவ்வப்பொழுது பெருமழை கொட்டிக் கொண்டிருந்தது.
அன்று மழை சற்றே ஓய்ந்த நிலையில் நான் வெளியே வந்தேன்; வானத்தைப் பார்த்தேன். கார்மேகக் கூட்டங்கள் இன்னமும் அகலவில்லை. தெருவீதியை பார்த்தேன்; மழைநீர் தேங்கியிருந்தது.
வீட்டின் மதில் சுவரில் பல நத்தைகள் ஏறி ஒட்டிக் கொண்டிருந்தன. உடனே தேங்கிக் கொண்டிருந்த, மழை நீரை பார்த்தேன்.
தவளைகளும் அவற்றின் குஞ்சுகளும் நிலத்தை நோக்கி தாவிக் கொண்டிருந்தன. உயிரினங்கள் பாதுகாப்பான வாழிடத்தை நோக்கி நகர்வதை உணர்ந்தேன்.
அப்பொழுது, எங்கிருந்தோ வந்திருந்த ஒரு மீன் கூட்டம் தேங்கியிருந்த மழைநீரில் உலாவிக் கொண்டிருந்தது. அதையே உற்றுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
“சார், மழை போதுமா?”
நிமிர்ந்து பார்த்தேன். யாரும் அங்கு இல்லை.
“சார், நான் தான் நீர் பேசுறேன். தெரியலையா?”
“ஓ! நீரா?” என்று சொல்லிக் கொண்டே தெருவீதியில் தேங்கியிருந்த மழை நீரைப் பார்த்தேன்.
“உம்… மழை அதிகமோ..”
“இயற்கையை யாராலும் கட்டுபடுத்த முடியாதே..”
“சரிதான்… நீங்க ஏதோ யோசிச்சிக்கிட்டு இருந்தீங்கபோல. நான் கூப்பிட்டு தொந்தரவு செஞ்சிட்டேனா?”
“இல்ல இல்ல… சில உயிரினங்களுக்கு, நீர் அவற்றோட வாழிடத்துக்குள்ள வந்தா தெந்தரவு. ஆனா நீரே வாழிடமா இருக்கும் உயிரினங்களுக்கு?”
“என்ன சார் சொல்றீங்க? ஒன்னும் புரியலையே!”
“நாங்கள்லாம் நிலத்துல வீடுகட்டி வாழுறோம். எங்க வீட்டுக்குள்ள வெள்ளநீர் புகுந்தா எங்களுக்கு தான் தொந்தரவு. ஆனா, மீன் மாதிரியான உயிரினங்களுக்கு நீர் தானே வாழிடம். இததான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.”
“ஆமாம்ல, நான் உயிரினங்கள் வாழ்வதற்கு மட்டுமில்ல, வாழிடமாகவும் பயன்படுறேன்ல.”
“நிச்சயமா… தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட பலவகையான உயிரினங்களுக்கும் நீர் வாழிடமா இருக்கு.”
“ஆம்… சார் நீங்க பலவகையான நீர பத்தி சொல்லியிருக்கீங்க. அப்ப, எல்லா வகை நீருலையும் எல்லா வகையான உயிரினங்களும் வாழுமா?”
“இல்ல. நீர் சூழல்நிலை மண்டலத்தப் பொறுத்து உயிரினங்களின் வகை மாறுபடும்.”
“சார், முதல்ல, சூழல்நிலை மண்டலத்தப் பத்தி சொல்லுங்க.”
“சொல்றேன். எந்த ஒரு சூழல்நிலை மண்டலத்திலும், உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகள் இருக்கும்.
கரியமில வாயு, நீர் மற்றும் சூரிய ஒளி, ஆகியனவற்றைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கும் தாவரங்களும், சிலவகை பாசிகளும் உயிரினங்கள் தான்.
இவற்ற உற்பத்தியாளர்கள்னு சொல்லுவோம். ஆங்கிலத்துல Autotrophs-ன்னு சொல்றாங்க. தாவரங்கள் தயாரிக்கும் உணவை எடுத்துக்கிட்டு வாழும் உயிரினங்களுக்கு நுகர்வோர்னு பேரு. ஆங்கிலத்துல Heterotrophs-ன்னு அழைக்கிறாங்க.
உயிரற்ற காரணிகள் என்பது நீர், வெப்பநிலை, காற்று, விசை, சூரியஒளி முதலியவற்றைக் குறிக்கும். நீர் சூழ்நிலைமண்டலமா இருந்தா, கரைந்த ஆக்சிஜன், உப்புத்தன்மை, ஊட்டச்சத்து, ஆகியவையும் உள்ளடங்கும்.”
“அப்படியா!”
“ஆமாம். பொதுவா நீர் சூழ்நிலை மண்டலத்தை இரண்டு வகையாப் பிரிச்சிருக்காங்க.
ஒன்னு கடல் சூழ்நிலை மண்டலம். மற்றொன்று, நன்னீர் சூழ்நிலை மண்டலம்.”
“ஓ…ஓ…”
“சரி சார், கடல் சூழ்நிலை மண்டலம்னா புரியுது. நன்னீர் சூழல்நிலை மண்டலம்னா?”
“அது ஒன்னும் இல்ல. ஆறு, ஏரி, குளம், நீரோடை, இவற்றை தான் நன்னீர் சூழ்நிலை மண்டலம்னு சொல்றாங்க. தெரியுமா, கடல் நீருல உப்புத்தன்மை அதிகமா இருக்கும்.
நன்னீர் சூழ்நிலை மண்டலத்துல, நீரோட உப்புத்தன்மை குறைவா இருக்கு. இதுதவிர, வெப்பநிலை, ஒளி ஊடுருவும் தன்மை, ஊட்டச்சத்துக்கள் முதலியனவும் கடல் மற்றும் நன்னீர் சூழ்நிலை மண்டலங்கள்ல பெருமளவு வேறுபடும்.
இந்த உயிரற்ற காரணிகளப் பொருத்து தான், நீர் சூழ்நிலை மண்டலத்துல உயிரினங்களின் வகைகளும் அமையுது.”
“இம்ம்… ஆனா ஒரு சந்தேகம்.”
“என்ன?”
“ஒரு சூழ்நிலை மண்டலத்துல எதுக்கு உயிர் மற்றும் உயிரற்ற காரணிகள் இருக்கு. இவற்றுக்குள் ஏதாச்சும் தொடர்பு இருக்கா?”
“என்ன இப்படி கேக்குற? உயிரினங்கள் உயிரற்றவைகள நம்பி தானே இருக்கின்றன.”
“என்ன சார் சொல்றீங்க?”
“ஆமாம். மனிஷங்க உட்பட எல்லா விலங்குகளும், உயிர் வாழனும்னா ஆக்சிஜன் தேவை. ஆனா, ஆக்சிஜன் உயிரிற்ற காரணி தான். ஏன், எல்லா உயிரினங்களுக்கும் முக்கிய தேவையான நீராகிய நீயும் உயிரற்ற காரணி தானே.”
“சரிங்க. நான், சூழ்நிலை மண்டலமா, அதாவது, நீர் வழிடமா மட்டும் தான் பயன்படுறேனா?”
“இருக்கு. இன்னும் நன்மைகள் இருக்கு.”
“என்ன நன்மைகள்?”
“சொல்றேன். நீர் சூழல்நிலை மண்டலங்கள் தான் பல முக்கியமான சுற்றுச்சூழல் செயல்பாடுகளைச் செய்கின்றன. உதாரணமாக, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்யவும், நீரை சுத்திகரிக்கவும், வெள்ளத்தை குறைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் நீர் சூழ்நிலை மண்டலங்கள் மிகமிக முக்கியம். அத்தோட, இவை மனித பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.”
“நல்லது சார். மறுபடியும் மழ வர்றா மாதிரி இருக்கு. நான் கிளம்புறேன். நீங்க எல்லாம் பத்திரமா இருங்க” என்று கூறி நீர் சென்றது.
அப்பொழுது மீண்டும் மழைப்பொழிவு தொடங்கியது. நான் உடனே வீட்டிற்குள் நுழைந்தேன்.
(உரையாடல் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30