நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43

மேல் அலமாரியில் இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை எடுத்துப் பார்த்தேன்.

பல நாட்களாக, இல்லை இல்லை, பல மாதங்களாக அதை நான் பிரித்து பார்க்கவே இல்லை. அதில் என்ன வைத்திருக்கிறோம் என்று கூட எனக்கு அப்போது நினைவில்லை.

பெட்டியின் மீது தூசியாக இருந்தது. அவற்றை சுத்தம் செய்த பின்னர், பெட்டியில் இருந்தவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தேன்.

ஒரு பையில் சதுரங்க அட்டை மற்றும் அதற்குறிய காய்களும் இருந்தன. கருப்பு மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்தில் தலா பதினாறு காய்கள் முறையே மொத்தம் முப்பத்திரெண்டு காய்களும் இருந்தன.

பல வருடங்களுக்கு முன்பு இதனை நான் வாங்கினேன். ″இன்னும் இது இருக்கா?″ என்று ஆச்சரியம் அடைந்தேன்.

″என்ன சார் இது?″

திரும்பி பார்த்தேன்.

″நான் தாங்க. நீர்″ என்றது அந்தக் குரல்.

மேசையின் மீது வைத்திருக்கும் கண்ணாடி குடுவையில் இருக்கும் நீர் பேசுகிறது என்பதை உணர்ந்தேன்.

″இம்ம்… இது சதுரங்க விளையாட்டு ஆடுவதற்கு தேவைப்படும் பொருள்.″

″புரியலையே″

″இங்க இருக்குற கருப்பு காய்கள ஒருபக்கத்திலும் மஞ்சள் நிற காய்களை மறுப்பக்கமும் வச்சு விளையாடலாம். இந்த விளையாட்டுக்கு இரண்டு பேரு வேணும்.″

″சார் எனக்கு முதல்ல விளையாட்டுன்னா என்னன்னு? சொல்லுங்க″

″உம்ம்… சொல்றேன்″ என்றுக் கூறி, சதுரங்க காய்களை நேர்த்தியாக சதுரங்க அட்டையில் அடுக்கினேன்.

பின்னர், ″இங்க பார்த்தியா, இந்த கருப்பு நிற காய்கள் எல்லாம் என்னுடையது. மஞ்சள் நிற காய்கள் உன்னுடையது. நான் முதல்ல ஒரு காய நகர்த்துரேன்ணு வச்சுக்கோ, அடுத்து நீ ஒரு காய நகர்த்தணும். ஒவ்வொரு வகையான காயோட நகர்வுக்கும் ஒவ்வொரு விதிமுறை இருக்கு….″

உடனே, ″சார் எனக்கு விளையாட தெரியாது″ என்றது நீர்.

″உன்ன விளையாட சொல்லல. விளையாட்டுன்னா என்னங்கறதுக்கு எடுத்துகாட்டா தான் இத சொன்னேன்.″

″புரிஞ்சிடுச்சு சார். ஒரு செயல்முறை இருக்கு, அதுக்குன்னு விதிமுறைகளும் இருக்கும். அத பின்பற்றி நீங்க அந்த செயல்முறைய முடிக்கணும். இறுதியில என்ன நடக்கும்?″

″பொதுவா, விளையாட்டு முடிவுல ஒருத்தர் வெற்றி பெறுவாரு. பல விளையாட்டுகள்ல குழுக்களாகவும் விளையாடுவாங்க..″

″அப்ப விளையாட்டு முடிவுல ஒரு குழு வெற்றி பெரும். சரியா?″

″உம் சரி தான். இன்னொன்றும் சொல்லணும். சதுரங்கம் மாதிரியான விளையாட்டுக்கு மதிநுட்பம் தேவைப்படும். சில விளையாட்டிகளுக்கு உடல் வலிமை தேவைப்படும்.″

″எல்லாம் சரி சார். நான் விளையாட்டுக்கு பயன்படுறேனா? இருந்தா சொல்லுங்க.″

″ஓ… பயன்படுறீயே.″

″அப்படியா!″

″ஆமாம் சில விளையாட்டுகள் நீரில் நடத்தப்படும். அதுக்கு நீர் விளையாட்டுன்னு பேரு. உலகம் முழுவதும் பல்வேறு வகையான பிரபலமான நீர் விளையாட்டுகள் இருக்குது.″

″அடடே, நீங்க விளையாடுவதற்கு கூட நான் பயன்படுறேனா! மகிழ்ச்சியா இருக்கு.″

″இம்ம்… மூணு விதத்துல நீர் விளையாட்டுகள் இருக்கு. ஒன்று, நீரில் நடக்கும் விளையாட்டுகள். நீர் கைப்பந்தாட்டம், நீர் கூடைப்பந்து, நீச்சல், டைவிங் போன்றவை இதற்கு உதாரணமா சொல்லலாம்.″

″ஓ..ஓ.. நீருக்கு மேலயும் நீருக்கு அடியிலும் விளையாடக் கூடிய விளையாட்டுகள் இருக்கா?″

″சரியா கேட்ட! படகுப் பந்தயம், பாராசெய்லிங், ஸ்கிம்போர்டிங், ஸ்டோன் ஸ்கிப்பிங், சர்ஃபிங் போன்றவை நீரின் மீது விளையாடப்படுது.

ஸ்கூபா டைவிங் போன்றவை நீருக்கடியில் விளையாடப்படும் விளையாட்டு ஆகும். இவையெல்லாம் சுவாசக்கவசம், துடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி விளையாடப்படுது.″

″நல்லது சார். நீர் விளையாட்டுனால ஏற்படும் பயன்கள் என்ன?″

″இருக்கு. விளையாட்டுங்கறது ஒருவகையில உடற்பயிற்சி செய்யுறது மாதிரித் தான். விளையாடுவதுனால உடல்ல இருக்கும் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுதாம்.

உடலின் வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறதாம். அத்தோட விளையாடும் போது உற்சாகம் உண்டாகுது. கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வும் குறையுதாம். அதனால, நல்ல மனநிலையும் கிடைக்குமாம்.

சுருக்கமாக சொல்லணும்னா, நீர் விளையாட்டுகள்னால உடலும் மனமும் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருக்குமாம்.″

″சிறப்பு சார். எல்லாரும் நல்லா இருந்தா எனக்கும் மகிழ்ச்சி தானே″

″ஆமாம்.″

″சரி சார். நாம பிறகு சந்திப்போம்” என்று கூறி நீர் சென்றது.

″சரி″ என்றுக் கூறி அந்த சதுரங்க விளையாட்டுப் பொருட்களை சுத்தம் செய்து மீண்டும் அந்த பையிலேயே வைத்தேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர் தீயணைப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 44

நீர் உலகம் – நீருடன் ஓர் உரையாடல் 42

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.