நீ இல்லாது ……

உத்ரா வீட்டினுள் இருந்து வேகவேகமாய் புழக்கடை பக்கம் வந்தாள். சுந்தரின் சிக்னல் அவள் காதுகளை எட்டியதே அவள் பரபரப்புக்கு காரணம் உத்ராவின் அப்பா முன் அறையில் அமர்ந்து செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்தார்.

“என்ன சுந்தர் இந்நேரம்? அப்பா வீட்டுக்குள்ள பேப்பர் படிச்சிட்டிருக்கார். உன்னோட விசில் சப்தம் கேட்ட உடனே வேகமா வந்தேன்” பதட்டத்துடன் கூறினாள்.

“இல்ல உத்ரா! சும்மா இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன். அப்படியே உன்ன பாத்துட்டு போகலாம்னு வந்தேன்”

“உனக்கு நேரம் காலமே தெரியாதே! அப்பா இந்நேரம் என்னையப் பார்த்தா கொலையே செஞ்சிருவார்” அவள் உடல் நடுங்கியது.

“ சரி உத்ரா! நான் வந்த விசயத்தை சொல்லிட்டு போறேன். கல்யாண ஏற்பாடெல்லாம் நடந்துட்டே இருக்கு. நீ இல்லாம என் கல்யாணம் எப்படி நடக்கும்? எத்தனை நாள் இப்படி உங்க அப்பாவுக்கு தெரியாம பேசிட்டு இருக்க முடியும்? எதுக்கும் கடைசியா ஒரு முறை உங்கப்பாகிட்ட பேசிப் பார்க்கிறேன். நம்மள ஆண்டவன் சேர்த்து வைப்பான்”

“சரிசரி நீ போய்ட்டு வா! அப்பா வந்த மாதிரி இருக்கு” வேகமாய் வீட்டினுள் நுழைந்தாள் உத்ரா.சுந்தர் ஏமாற்றத்துடன் திரும்பினான். சரியாக உத்ராவுடன் பேச முடியவில்லையே!

ஒரு வாரம் சென்றது. சுந்தரின் திருமண நாளும் நெருங்கியது. அன்று காலை. உத்ராவின் அப்பா செய்தித் தாளில் மூழ்கியிருந்தார். சுந்தர் எந்த சிக்னலும் இன்றி வீட்டினுள் நுழைந்தான். உத்ராவின் அப்பா நிமிர்ந்தார். கண்கள் கோபத்தில் சிவப்பேறியது. முகத்தில் வெறுப்பு படர்ந்தது.

“சித்தப்பா! இப்ப நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் அதான் எங்க அப்பாவுக்கும் ஆயிரம் சண்டை இருக்கலாம். அதெல்லாம் மனசில வச்சிக்காதீங்க. என் கல்யாணத்துக்காவது நம்ம குடும்பம் சேரட்டும்.

தங்கச்சிய இப்பவே என்னோட கூட்டிட்டு போக அனுமதிக்கணும். செய்வீங்களா சித்தப்பா? உங்க குடும்ப சண்டைக்கு எங்க பாசத்தை பலிகடா ஆக்கலாமா? கண்ணீர் மல்க கேட்டான்.

கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும் அன்றோ? சுந்தரின் அன்பால் அங்கே ஒரு கல்லிதயமும் கரைந்தது. உத்ரா மகிழ்ச்சியுடன் தன் அண்ணனுடன் புறப்பட்டாள்.

-மு.அருண்