ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் அப்பு பூமியில் தரை இறங்கினான். மூதாதையர்கள் கைவிட்டுப் போய்விட்ட பூமிக்கு, இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த அப்பு ஓராண்டு பயணத்துக்குப் பின், பற்பல கற்பனைகளுடன் வந்திருக்கிறான்.
“பூமியில எந்த உயிரினங்களும் இல்ல”
“மனுசன் பூமியில வாழற தகுதிய இழந்துதான் ஓடிப் போனான்”
பூமியைப் பற்றி காலங்காலமாக செவ்வாய் கிரகத்தில் ஒப்புவிக்கப்பட்ட கருத்துரைகள் அவனுக்குள் கட்டி எழுப்பப்பட்டிருந்தன.
பசுமையான காடுகள் பூமியைச் சுற்றிப் போர்த்தியிருந்தன. நிலம் எதுவென கவனிக்க இயலவில்லை. கடலுக்குள்ளும் காட்டு மரங்கள் கிளை பரப்பி உள் சென்றபடி அடர்ந்திருந்தன.
“பூமிக்கு வந்து சேர்ந்துட்டேன்”
அப்பு குரல் பதிவில் தகவலைச் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டுக் கப்பலிலிருந்து தரையில் கால் பதித்தான்.
கப்பலுக்குள் இருந்த குரல் பெட்டி சேகரிப்பில் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன; அப்புக்குக் கேட்க வாய்ப்பில்லாத தூரத்திற்குச் சென்றிருந்தான்.
“அப்பு! நீ எங்க இருக்க? எங்கப் போய்கிட்டு இருக்க? உன்னோட லொக்கேஷன எங்களால கண்டுபிடிக்க முடியல.”
“அப்பு, பூமிக்குத்தான பயணம் செஞ்சிக்கிட்டு இருக்க? அந்தப் பாதையில உன்னோட ஸ்பேஸ் கப்பலே இல்லியே?”
ஆர் யூ ஓகே?
“அப்பு, பூமிக்குப் போகும் விண்வெளி பாதையிலேந்து விலகி, ஒலி வேகத்துல ஆறு மாசம் பயணிச்சி, இப்ப எங்கப் போய் சேர்ந்திருக்கான்னு தெரியல.”
கப்பலின் குரல் சேகரிப்பு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்டதென அப்புவிற்குத் தெரிய வாய்ப்பில்லை.
அப்பு மெல்ல அடர்ந்த காட்டு மரங்களுக்கிடையே நடக்கத் துவங்கினான். நீண்ட கழுத்துடைய மிருகம் வானுயரம் நின்றவாறு, மரங்களின் மேல்கிளைகளை முறித்துத் தின்று கொண்டிருந்தது.
கே.பாலமுருகன்