பேருந்து விட்டு இறங்கியதும் ஓடிவந்து
பெட்டி வாங்கிக் கொள்ளும் நண்பர் கூட்டம்
உயர்தர குளிர்பானம் அன்போடு கிடைக்கும்
பேருந்து நிறுத்தத்தில் கடை வைத்திருக்கும் நண்பர் மூலம்
வீடுசெல்லும் வழிநெடுக விசாரிப்புகள்
மனதையள்ளும்
இருக்கின்ற ஒருவாரம் முழுதும்
இனிப்புகாரம் என சாப்பாட்டில் அம்மா அசத்தும்
ஆறுநாள் திருவிழாவில் அசத்த வேண்டும்
திட்டமிடும் நண்பர் கூட்டம்
கச்சேரி நடக்கின்ற வேளையிலே கச்சேரி
நாங்கள் செய்யும் ஆட்டம்பாட்டம்
அமர்க்களமாய் கொண்டாடிவிட்டு
கிளம்புகையில் மறக்காமல் முகவரியை வாங்கிக்
குறித்துக் கொள்ளும் நண்பர்கள்
போனதும் போன் போடுடா அன்பான அதட்டல்கள்
கூட்டமாய்ச் சேர்ந்து செய்கின்ற வழியனுப்பு
சுகமாகத் தானிருக்கிறது
இவையெல்லாம் நான்
ஊருக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும்
கிடைக்கும் போதெல்லாம்
ஆனாலும் நெஞ்சில் ஒருமுள்
ஊரிலிருந்து அறுநூறு கிலோமீட்டர் தள்ளியிருந்து
வருடம் ஒருமுறை வந்து போய்க் கொண்டு
சொந்த ஊரில் விருந்தினனாய் ஆனதாக
– வ.முனீஸ்வரன்