நீளமான கருமை பாய்
நீண்டு கொண்டே செல்கிறது…
முன்னேறிச் செல்லச் செல்ல
வாழ்விற்கான வெளிச்சக் கீற்று
வழியெங்கும் வாழ்க்கை பாடம்…
‘முன்னே செல்’
உன்னால் முடியும்…
முழங்கியபடியே
பின்னால் ஓடிய மரங்கள்
தொட்டு விடும் தூரம்தான்
தொலைவொன்றும் இல்லை…
கூவி அழைக்கும்
அண்மையில் உள்ள வானம்
பார்ப்பவை அனைத்தும் உண்மையில்லை
பார்த்து எடுத்து வை…
உன் அடியை
கானல் நீர்
வாழ்க்கையின் போக்குக்கு வளைந்து கொடு…
மனதை வருடும் தென்றலுக்கு
அசைந்தாடும்
அழகிய மலர்களும் மரக்கிளைகளும்
பிரச்சினைகளைக் கண்டு
தளர்ந்துவிடாதே…
கட்டளையிடும்
வானுயர்ந்த மலைகள்
வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் …
இடையிடையே வந்துபோகும்
வேகத்தை குறைக்கும்
மேடு பள்ளங்கள்
முளைத்தால் மரம்
மடிந்தால் உரம்
விருட்சமாய் விரிந்தெழும்
எறியப்பட்ட விதைபந்து…
மனதிற்கும் உடலிற்கும்
புத்துணர்வு ஊட்டும்
மகிழ்ச்சியான தருணங்கள்…
காபி நிறுத்தங்கள்
புதுமையான
பல்லுயிர்களின் தரிசனம்…
வழியெங்கும் புதுமுகங்கள்
விதவிதமான புது அனுபவங்கள்
‘பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்’…
இவ்வையகம் உனக்கானது மட்டுமல்ல
மனதில் கொண்டு
தலைக்கனம் களை
‘வாழ்வும் முற்றுப் பெறும்’
உன்னுள் உள்ள
மகிழ்ச்சியை இழக்காதே…
மனநிறைவுடன் சென்று சேர்ந்த இடம்
தமிழினி (எ) த.சுமையா தஸ்னீம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!