நெயில் பாலிஷ் இன்றைக்கு சிறுகுழந்தைகள் முதல் பேரிளம் பெண்கள் வரை அனைவரின் முக்கியமான தவிர்க்க முடியாத அலங்காரப் பொருளாக உள்ளது. கிராமம் முதல் நகரத்தில் வசிக்கும் பெண்கள் வரை எல்லோரும் அன்றாட வாழ்வில் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
நெயில் பாலிஷ் அழகோடு ஆபத்தினையும் நமக்கு உண்டாக்குகிறது என்பது எல்லோருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் உண்மை.
இது நமக்கும் மட்டுமல்ல சுற்றுசூழலுக்கும் ஆபத்தானது என்பது அடுத்த வேதனையான உண்மை. நெயில் பாலிஷ் மட்டுமல்லாது அதனை நீக்கப் பயன்படுத்தப்படும் ரிமூவரும் ஆபத்தானதே.
நெயில் பாலிஷின் ஆபத்திற்கு காரணம் அதில் உள்ள வேதிப்பொருட்கள் ஆகும். இதில் உள்ள வேதிப்பொருட்களில் டை-பியூட்டைல் பெத்தலேட், டொலுவீன், ஃபார்மால்டிகைடு ஆகியமூன்று பொருட்கள் அதிகளவு நச்சுத்தன்மை வாய்ந்தவை. இவை நெயில் பாலிஷின் மூன்று நச்சுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. மூன்று நச்சுக்களைப் பற்றிப் பார்ப்போம்.
டை- பியூட்டைல் பெத்தலேட்
இது நெயில் பாலிசில் பிளாஸ்டிசைசராகப் பயன்படுத்தப்படுகிறது. இது நெயில் பாலிசிற்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதோடு உடையும் தன்மையைக் குறைக்கிறது.
இது நீண்டகாலம் நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாக இருக்கும் இயல்பினை உடையது. இது கண்கள், வாய், மூக்கு, தோல், தொண்டைப் பகுதிகளில் எரிச்சலினை உண்டாக்குகிறது.
தொடர்ந்து பயன்படுத்தப்படும் போது இது இனப்பெருக்க ஹார்மோன்கள் பாதிப்பு, நீரழிவு நோய், தைராய்டு சுரப்பில் பாதிப்பு ஆகியவற்றை உண்டாக்கும்.
ஆதலால்தான் ஐரோப்பிய நாடுகளில் டை- பியூட்டைல் பெத்தலேட் வேதிப்பொருள் தடைசெய்யப்பட்டுள்ளது.
டொலுவீன்
இது நெயில் பாலிசில் தின்னராக பயன்படுத்தப்படுகிறது. இது நெயில் பாலின் வழவழப்பான மேற்பூச்சுக்கு காரணமாகிறது. தண்ணீரில் கரையாத இது பொதுவாக பசைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இது தலைவலி, உணர்வின்மை, கண்கள் மற்றும் தொண்டை எரிச்சல் ஆகியவற்றை உண்டாக்குகிறது.
தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவதால் மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்குவதோடு இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
பார்மால்டிஹைடு
இது இறந்த உயிரினங்களின் உடலினைப் பதப்படுத்தி வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது நெயில் பாலிசில் கடினப்படுத்தும் பொருளாக உபயோகிக்கப்படுகிறது.
இதனை அதிகளவு உபயோகிக்கும் போது தொண்டை மற்றும் நுரையீரல் எரிச்சல், சரும அரிப்பு மற்றும் புற்றுநோயை உருவாக்குகிறது.
முக்கிய மூன்று நச்சைத் தவிர டிரை பீனால் பாஸ்பேட் பிளாஸ்டிசைசராக உபயோகப்படுத்தப்படுகிறது. இது நகப்பூச்சுகளை நகங்களில் போடும் போது விரிசல் ஏற்படுவதை தடுப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் மெத்தைகளில் பயன்படுத்தப்படுகிறது.
டீரை பீனால் பாஸ்பேட் கொண்ட நெயில் பாலிசை நகங்களில் பூசிய 10 மணி நேரத்தில் அது நகக்கண்களின் வழியாக உடலுக்குள் ஊடுருவி சிறுநீரில் வெளியேறுவதாகவும், அடுத்த பத்து மணி நேரத்தில் சிறுநீரில் டீரை பீனால் பாஸ்பேட் அளவானது பத்து சதவீதம் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இதனை உபயோகிக்கும் போது இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சில நெயில் பாலிசுகள் நைட்ரோ செல்லுலோஸ் என்னும் வேதிப்பொருளைக் கொண்டிருக்கின்றன. இது பொதுவாக கார்களின் பெயிண்ட்டுகள் மற்றும் வெடிபொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.
நெயில் பாலிஷ் ரிமூவர்களில் பயன்படுத்தப்படும் அசிட்டோன் மற்றும் எத்தில் அசிட்டேட் கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சலை உண்டாக்குகின்றன. இதனால் சுவாசப்பாதைகளில் பாதிப்பு உண்டாகுவதோடு நகம் மற்றும் சரும பாதிப்புகளை உண்டாக்குகிறது.
நெயில் பாலிசானது கீழே சிந்தும் போது நிலத்தையும், மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி உயிரினங்களையும் பாதிக்கிறது.
மேலும் நெயில் பாலிஸ் உள்ள பாட்டில்களை அபாயகரமான கழிவுப்பொருளாக பலநாடுகள் பட்டியலிட்டுள்ளன.
நெயில் பாலிசை உபயோகப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. அவ்வாறு உபயோகப்படுத்த விரும்பினால் தரமானவைகளை உபயோகப்படுத்தவும்.
இதனை குறைந்தளவு நேரமே நகங்களில் வைத்திருப்பதோடு அடிக்கடி இதனை உபயோகப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.
இதற்கு மாற்றாக மருதாணியை அரைத்து உபயோகிப்பது உடல்நலத்திற்கும் சுற்றுசூழலுக்கும் சிறந்தது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!