நெய் கடலை அருமையான சிற்றுண்டி வகை ஆகும். இதனை மாலை நேரங்களில் தேநீருடன் ருசிக்கலாம். கடலைப் பருப்பினைக் கொண்டு செய்யப்படுவதால் இது பசி தாங்கும். வீட்டில் இதனை தயார் செய்வது ஆரோக்கியமானதும் கூட.
இதனைத் தயார் செய்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இனி சுவையான நெய் கடலை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 200 கிராம்
வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
மிளகுப் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 3/4 ஸ்பூன்
பெருங்காயப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணெய் – பொரித்து எடுக்கத் தேவையான அளவு
நெய் கடலை செய்முறை
கடலை பருப்பினை அலசி சுமார் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
வெள்ளைப் பூண்டினை தோலுடன் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவி நன்கு காய வைத்துக் கொள்ளவும்.
ஊறிய கடலை பருப்பினை வடிதட்டில் கொட்டி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
தண்ணீர் நன்கு வடிந்ததும் உலர்ந்த துணியில் பருப்பினைக் கொட்டி விடவும். பருப்பின் மேற்புறம் ஓரளவு காய்ந்ததும் எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் எடுத்து வைத்துள்ள கடலைப் பருப்பில் சிறிதளவு போடவும். கடலைப் பருப்பு எண்ணெயில் அடியில் இருக்கும்.
கடலைப் பருப்பு வெந்ததும் படத்தில் உள்ளபடி எண்ணெயின் மேற்பரப்புக்கு வந்து விடும்.
எண்ணெய் குமிழி அடங்கி சலசலவென வெந்ததும் கடலை பருப்பினை வெளியே எடுத்து விடவும்.
வெந்த கடலை பருப்பினை வெளியே எடுக்க வலைக் கரண்டியை உபயோகிக்கவும். அப்போதுதான் வெந்த கடலைப் பருப்பினை ஒரே சீரான நிறத்துடன் கருகாமல் எடுக்க முடியும்.
இவ்வாறாக எல்லா கடலைப் பருப்பினையும் வேக வைத்து எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
தட்டி வைத்துள்ள வெள்ளைப் பூண்டினை சிறிதளவு எண்ணெயில் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் வறுத்த கடலை பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, வறுத்த வெள்ளைப் பூண்டு, கறிவேப்பிலை, மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
சுவையான நெய் கடலை தயார்.
குறிப்பு
கடலைப் பருப்பு நன்கு ஊறினால்தான் வறுத்த பின் மொறு மொறுவென்று இருக்கும்; இல்லையெனில் கடிக்கும் போது கடினமாக இருக்கும்.
வெள்ளைப் பூண்டினை சேர்க்க விருப்பாதவர்கள் பூண்டினைத் தவிர்த்து விடலாம்.