சிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி

நெல்லி பன்நெடுங் காலமாகவே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவைகளையும் ஒரு சேரக் கொண்டுள்ளது.

இதனை உண்ணும்போது முதலில் புளிப்பு அல்லது துவர்ப்பு சுவையினை உணரலாம். பின் தண்ணீர் அருந்தும்போது இனிப்பு சுவையினை உணரலாம். இக்காய் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

நெல்லியானது நெல்லிக்காய், காட்டு நெல்லிக்காய், மலை நெல்லிக்காய் என்றெல்லாம் பொதுவாக அழைக்கப்படுகிறது. நெல்லியானது ஃபிலந்தசியா என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் ஃபில்லந்தஸ் எம்பிலிகா என்பதாகும்.

நெல்லியினுடைய மருத்துவப்பண்புகள் நம்மை நோய்கள் இல்லாமல் அதிக நாட்கள் இளமையுடன் வாழ வைப்பதால் இக்காய் சிரஞ்சீவி வரம் தரும் நெல்லி என்று அழைக்கப்படுகிறது.

நெல்லியில் ஆரஞ்சினைப் போல் 8 மடங்கு விட்டமின் சி-யும், மாதுளைப்போல் 17 மடங்கு ஆன்டிஆக்ஸிஜென்டுகளும் காணப்படுகின்றன. ஆதலால் இது சூப்பர் பழம் என்று அழைக்கப்படுகிறது.

நெல்லிக்காயின் அமைப்பு மற்றும் வளரிடம்

நெல்லியானது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலத்தில் காணப்படக்கூடிய இலையுதிர் மரவகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது.

நெல்லிமரமானது 1-8 மீ உயரம்வரை வளரும். இது குற்றுமரமாகவும் காணப்படுவதுண்டு. இம்மரத்தில் இலைகள் நீண்டு, சிறியதாக பச்சைநிற கூட்டிலைகளாகக் காணப்படுகின்றன.

பூக்கள் மஞ்சள் கலந்த பச்சைநிறத்தில் இருக்கும். இம்மரத்தில் பூக்கள் ஆண், பெண் என இருபால் தன்மையுடன் இலைக்கோணங்களில் தனித்தனியே காணப்படுகின்றன.

ஆண்பூக்கள் இலையின் மேல்புறமும், பெண்பூக்கள் இலையின் கீழ்புறமும் காணப்படுகின்றன. இம்மரத்தில் பெண்பூக்கள் ஆண்பூக்களின் எண்ணிக்கையைவிட குறைவாக இருக்கின்றன.

 

நெல்லிப் பூக்கள்
நெல்லிப் பூக்கள்

 

இப்பூக்களிலிருந்து உருளைவடிவ அடர்பச்சைநிறக் காய்கள் தோன்றுகின்றன. இவை முதிரும்போது இளம்பச்சை நிறத்துடன் சதைப்பற்றுமிகுந்தும், நீர்சத்துமிகுந்தும் காணப்படுகின்றன.

 

நெல்லி இலை மற்றும் காய்கள்
நெல்லி இலை மற்றும் காய்கள்

 

இக்காயானது ட்ரூப் வகையைச் சார்ந்தது. இதனுள் கடின ஓடுடன் கூடிய விதைகள் இருக்கின்றன. நெல்லியானது இளம்பச்சை, வெள்ளை, கருஊதா நிறங்களில் வெளிப்புறத்தோலைக் கொண்டிருக்கின்றன.

இம்மரமானது மலை மற்றும் காடுகளில் அதிகளவு காணப்படுகின்றது. இம்மரமானது நடப்பட்டு 3-6 வருடங்களில் பலன்தரத் தொடங்குகிறது.

நெல்லியின் வரலாறு

நெல்லியின் தாயகம் இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையின் மலைப்பகுதிகள் எனக் கருதப்படுகின்றது. தற்போது இந்தியா, நேபாளம், இலங்கை, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, ஜப்பான், மடகாஸ்கர் உள்ளிட்ட இடங்களில் அதிகளவு நெல்லியானது காணப்படுகிறது.

இந்துக்கள் திருமால் இம்மரத்தில் வசிப்பதால் இதனைப் புனிதமரமாகக் கருதி வழிபட்டு வந்துள்ளனர். மேலும் இக்காயானது பூமியில் சிதறிய அமிர்தத்தின் துளிகளில் இருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.

தனக்கு நெல்லியை தானம் அளித்த பெண்மணியின் வறுமையைப் போக்க ஆதிசங்கரர் கனகதாரா என்னும் பாடலைப் பாடி திருமகளிடமிருந்து தங்க நெல்லிக்காய்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது.

தமிழ் மொழியை வளர்ப்பதற்காக சங்கப்புலவரான ஒளவையாருக்கு அதியமான் சிரஞ்சீவி வரம்தரும் நெல்லியைப் பரிசளித்ததாக வரலாறு கூறுகிறது.

நெல்லிமரமானது பழங்காலத்தில் இந்தியாவில் பூமித்தாய் எனப்போற்றப்பட்டது.

நெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

நெல்லியில் விட்டமின் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), சி ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன.

இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.

மேலும் இக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், அதிகளவு நார்ச்சத்து, நீர்ச்சத்து, ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

நெல்லியின் மருத்துவப்பண்புகள்

நெல்லியை காய வைத்து பயன்படுத்தும்போதும் அதன் மருத்துவப்பண்புகளில் மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை.

எலும்புகளின் பலத்திற்கு

நெல்லியானது எலும்புகளில் முறிவினை உண்டாக்கும் ஆஸ்டியோகிளாட்ஸ் என்ற எலும்புறிஞ்சிகளின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நெல்லியில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது கீல்வாதத்தினால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தினைக் குறைக்கிறது.

மேலும் இக்காயில் உள்ள விட்டமின் சி-யானது உடலானது கால்சியத்தை உறிஞ்சி உட்கிரகிக்க உதவுகிறது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட கால்சியம் எலும்பினை வலுவாக்குகிறது.

கண்களின் பாதுகாப்பிற்கு

இக்காயில் உள்ள விட்டமின் ஏ-வானது கண்பார்வையினை தெளிவுபடுத்துவதோடு வயோதிகத்தினால் ஏற்படும் கண்பார்வை இழப்பு நோயினையும் தடுக்கிறது.

இக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கணபுரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. நெல்லியை ஊறவைத்த தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவும்போது கண்பார்வை தெளிவடையும்.

மூளையின் நலத்திற்கு

நெல்லியை தொடர்ந்து உண்பதால் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்கும். இக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டால் மூளை பாதிப்படைவதைத் தடைசெய்து டிமைன்சர் மற்றும் அல்சீமர்ஸ் உள்ளிட்ட மூளை சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

இக்காயில் உள்ள இரும்புச்சத்தினால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து மூளையின் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் மூளையின் நலம் பாதுகாக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றலினை அதிகரிக்க

இக்காயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பானது உடலினை பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை உள்ளிட்டவைகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

இக்காயானது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலினை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இக்காயில் உள்ள அதிகப்படியான விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியினை வழங்ககிறது.

இதய நலத்திற்கு

நெல்லியானது உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் இதயநாளங்கள் அடைப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

இது இதயத்தசைகளை வலுவாக்கி கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைத்து உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. இதனால் இதய நலத்தைக் காக்க நெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புற்றுநோய்க்கு

இக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் புற்றுச்செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோயினை தடைசெய்கிறது.

உடல் வளர்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டால் உடல் செல்கள் பாதிப்படைந்து புற்றுநோய் உருவாதை இக்காய் தடைசெய்கிறது.

புற்றுநோய்க்கு உண்ணப்படும் மருந்துகளின் பக்கவிளைவை இக்காய் தடைசெய்கிறது.

சர்க்கரை நோய்க்கு

இக்காயில் உள்ள குறைந்தளவு இனிப்பு மற்றும் அதிகமான நார்ச்சத்து சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வினைத் தருகிறது. இக்காயானது இன்சுலின் சுரப்பினைத் தூண்டுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறது.

இக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அல்புமின் அளவினை குறைத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கிறது.

மேலும் இது கிளைக்கோசைலைட் ஹீமோகுளோபின் உற்பத்தியைக் குறைத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கிறது. எனவே இக்காயினை சர்க்கரை நோயாளிகள் உண்டு இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்கலாம்.

செரிமானத்திற்கு

நெல்லியில் உள்ள அதிகமான நார்ச்சத்து உடலானது உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது.

இக்காய் மலமிளக்கியாகவும், குளிர்ச்சியான பொருளாகவும் விளங்குவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு உள்ளிட்ட வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சரியான தீர்வாகும்.

மேலும் இக்காய் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைச் சுரக்கச் செய்து உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.

கேச நலத்திற்கு

நெல்லியானது கேச வளர்ச்சி மற்றும் அதன் கருமைக்கான ஊக்குவிப்பு பொருளாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லியில் உள்ள இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிஜென்டுகள், கரோடீனாய்டுகள் ஆகியவை கேசம் உதிர்வதைத் தடுப்பதோடு அதன் கருமை நிறத்தினையும் நிலைநிறுத்துகிறது. எனவே நெல்லியைப் பயன்படுத்தி கேசத்தின் நலத்தினைப் பாதுகாக்கலாம்.

நெல்லியானது அப்படியேவோ, பொடியாகவோ, சாறாகவோ பயன்படுத்தப்படுகிறது. இனிப்புகள், கேக்குகள், ஊறுகாய்கள், வற்றல்கள், சர்ப்பத்துகள் உள்ளிட்டவை தயார் செய்ய இக்காய் பயன்படுத்தப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த இயற்கையின் கொடையான சிரஞ்சீவி வரம் தரும் நெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.