மேடும் பள்ளமுமாய், குண்டும் குழியுமாய் பெயரளவுக்குத் ‘தார்ச்சாலை’ என்ற அடையாளத்தோடுக் காணப்பட்ட அந்தப் போக்குவரத்துச் சாலையில் கப்பி பெயர்ந்து ஆங்காங்கே காணப்படும் பெரிதும், சின்னதுமான பள்ளங்களில் முதல்நாள் இரவு பெய்த மழையால் கலங்கலான தண்ணீர் தேங்கிக் கிடந்தது.
‘விர்விர்’ரென வேகத்தோடு விரையும் வாகனங்களின் டயர்கள் பள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் இறங்கி ஏறங்கின.
அதனால் கலங்கல் தண்ணீர் வாகனங்களின் இருபுறமும் வாரியடிக்க, ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகள் ‘எங்கே அழுக்குத் தண்ணீர் தம்மீது பட்டு, அணிந்திருக்கும் ஆடை கறை பட்டுவிடுமோ?’ என்ற அச்சத்தில் சாலையின் மிக ஓரமாய் நடந்து செல்ல முயன்றனர்.
சாலையோரம் வரிசையாய் நிறுத்தப்பட்டடிருந்த டூ வீலர்களின் அணிவகுப்பும் சாலையோர சிறுசிறு கடைகளின் ஆக்ரமிப்பும் பாதசாரிகளின் முயற்சிக்கு பெரும்தடையாய் இருந்தன.
நிரம்பி வழியும் கூட்டத்தைச் சுமந்தபடி ‘நிறைமாதக் கர்பிணி’போல் மூச்சிரைக்க அந்தப் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது, விழுப்புரத்திலிருந்து திருச்சி வரை செல்லும் அந்தப் பேருந்து.
கட்டிவைத்த நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து தலைகீழாய்க் கவிழ்த்ததுபோல் பேருந்திலிருந்து இறங்கிய ஆண்களும் பெண்களும் நாலாபுறமும் அரக்க பறக்க கலைந்துசென்றனர். இப்போது பேருந்து குறைவான பயணிகளோடு அடுத்த இலக்கை நோக்கிக் கிளம்பியது.
கடந்த இரண்டுமணி நேரங்களுக்கு மேலாக மூன்றுபேர் அமரும் சீட்டில் நான்குபேர் அமர்ந்துவிட, உடலைக் குறுக்கி நெருக்கியடித்து அமர்ந்திருந்ததால் கால்களை நீட்டக்கூட முடியாமல் மரத்துப்போக ஆரம்பித்திருந்த கால்களை மெல்ல நீட்டி ஃப்ரீயாக அமர்ந்து தலையை சீட்டில் சாய்த்து கண்களை மூடித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் அறுபத்தெட்டு வயது இந்துமதி.
விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் அந்த பேருந்தில் இந்துமதி ஏறி அமர்ந்தபோது பேருந்தில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. பேருந்து கிளம்ப சில நிமிடங்கள் இருக்கையில் ‘திமுதிமு’வென்று பெருங்கூட்டம் ஒண்று ஏற பேருந்தில் கூட்டம் நிமிடு தெறித்துப் பிதுங்கி வழிந்தது. பாதிக்குமேல் கல்லூரி மாணவ மாணவியர். சனி, ஞாயிறு விடுமுறைக்காக சொந்த ஊர் செல்கிறார்களோ என்னவோ!
வெளியில் தகிக்கும் வெயில், சூடான வெப்பக் காற்றை ஓடும் பேருந்துக்குள் அனுப்பி அனலைப் பரப்பியது. நெருக்கியடிக்கும் கூட்டத்தால் ஏற்படும் கசகசப்பும், வீசும் அனல் காற்றும் காரணமாய் பேருந்துக்குள் ஆங்காங்கே சிறுகுழந்தைகள் சிணுங்கி அழ ஆரம்பிக்க அழும் குழந்தைகளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள் தாய்மார்கள்.
சிலர் செல்ஃபோனில் பேசிக் கொண்டும், நின்று கொண்டு பயணிக்கும் சில இளம் பெண்களை அவர்களின் பின்னே நிற்கும் ஆண்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவிடக்கூடாது என நினைத்தோ என்னவோ டிரைவர் பிரேக் போடும்போதும் வளைவுகளில் பேருந்தை சாய்த்து ஒடித்துத் திருப்பும்போதும் வேண்டுமென்றே பின்புறத்தில் உரசி உரசி சுகப்பட்டுச் சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள். சில கல்லூரிக் காதல் ஜோடிகள் ‘கிசுகிசு’வென்று ரகசியம் பேசிக்கொண்டும் மெல்ல சப்தமின்றி சிரித்துக் கொண்டுமிருக்க இவை எதனையும் சட்டைசெய்யாமல் தம்பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது பேருந்து.
அப்படி வந்த பேருந்துதான் பெரும்பாலான பயணிகளை நெல்லிக்காய் மூட்டைபோல் இறக்கி விட்டு சுமந்த சுமை குறைந்து போக ஃப்ரீயாக ஓட ஆரம்பித்திருந்தது.
ஜன்னலோரம் கண்களை மூடி தலையை சீட்டின் பின்புறம் சாய்த்தபடி அமர்ந்திருந்த இந்துமதி அவரின் வயதுக்குரிய முதுமையோடு தெரிந்தார்.
இளம் வயதில் பார்ப்பவரைச் சுண்டியிழுக்கும் அழகோடு இருந்திருப்பார் என்பதை அவரின் தற்போதைய தோற்றம் முடிந்த அளவு பறைசாற்றிக் கொண்டிருந்து.
ஆனாலும் முகத்தில் படிந்திருந்த இறுக்கமும் லேசான சோகமும் அவர் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை ரோஜா இதழ்கள் தூவிய பாதையாக இருந்திருக்க முடியாதோ என்று தோன்றியது.
நடத்துனர் விசில் ஊத பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த அந்த கடைத்தெரு ஸ்டாப்பிங்கில் நின்றது பேருந்து. பயணிகள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள்.
மூடியிருந்த கண்களைத் திறந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தார் இந்துமதி. கடைகளில் தொங்கும் பெயர்ப் பலகையைப் பார்த்து அந்த ஊரின் பெயரைத் தெரிந்து கொள்வதற்குள் பேருந்து கிளம்பி நகர்ந்துவிட ஊரின் பெயரைப் படிக்க முடியாமல் போயிற்று.
ஏதோ ஒரு உந்துதலில் பக்கவாட்டில் இருக்கும் இரண்டுபேர் அமரக்கூடிய சீட்டைத் திரும்பிப் பார்த்தார் இந்துமதி. ஒரு இளைஞனும் யுவதியும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.
இளைஞனின் இடது கை விரல்கள் அந்தப் பெண்ணின் வலது கைவிரல்களோடு இணைந்து பிணைந்திருந்தன. கல்லூரிக் காதலர்களோ?
அவர்களின் பேச்சு இந்துமதியின் காதில் ஸ்பஷ்டமாய் விழவே செய்தது.
சட்டெனப் பார்வையைத் திருப்பிக் கொண்டார். ஆனாலும் அவர்களின் உரையாடல் செவிக்குள் நுழைவதையும், மனம் அவர்களை அவ்வப்போது கொஞ்சமே கொஞ்சமாய்த் திரும்பிப் பார்க்க வைப்பதையும் அவரால் தடுக்க முடியவில்லை.
“ஏய்..மகி! இந்தனை நேரம் சரியாதானே இருந்த. திடீர்னு என்னாச்சு ஒனக்கு?” இது இளைஞன்.
“எனக்கு பயமாருக்கு கதிர்… நா வீட்டுக்குப் போணும்.” இது இளம்பெண்.
“அய்ய! என்ன மகி இப்பிடி பயப்படுற. நா என்ன ஒன்ன ஊட்டி, கொடைக்கானலுக்கா கூப்புடுறேன். சும்மா கோவிலுக்கு போய்ட்டு அப்டியே எம் ஃப்ரண்டோட பண்ண வீட்டுக்குப் போய் பண்ணைய சுத்திப் பாத்துட்டு வரலாம்னுதானே கூப்புடறேன்.”
“என்னது பண்ண வீட்டுக்கா? கோவிலுக்குப் போலாம்னுதானே சொன்ன. இப்ப பண்ண வீடுன்னும் சொல்ற?”
“என்ன மகி ரொம்பத்தான் பயப்படுறே. ஏன் எங்கிட்ட நம்பிக்கை இல்லியா ஒனக்கு. நா என்ன புலியா சிங்கமா ஒன்ன கடிச்சித் திங்க? நீ என்ன இன்னும் கட்டுப் பெட்டியா இருக்க.
போய்ப்பாரு சிட்டி பொண்ணுங்கள, லவ் பண்ணுற பல பொண்ணுங்க அதது லவ்வரோட டேட்டிங் போவுதுங்க. நீயென்னவோ ரொம்பத்தா பயப்படுற” யுவதியின் விரல்களைக் கோர்த்திருந்த தனது கையை எடுத்து அந்தப் பெண்ணின் தோளை இழுத்து தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
சட்டென அவன் கைகளை விலக்கினாள் அவள். “இல்ல கதிர் நா வீட்டுக்போணும். நா எங்கியும் வரல” இதுவரை ஆசையாய் காதலாய் பேசிக் கொண்டு வந்த இளைஞன் சட்டென காண்டாகியிருக்க வேண்டும்.
‘ச்சே! இந்த பொண்ணுங்களே இப்பிடித்தான். நம்பவெச்சு கடைசிநேரத்துல ஏமாத்துங்க’ என்று நினைத்தானோ அல்லது ‘பண்ணை வீட்டப் பத்தி முன்னாடியே சொல்லியிருக்க வேண்டா’மென்று நினைத்தானோ, தன் இடது கை உள்ளங்கையில் வலதுகை முஷ்டியால் குத்திக் கொண்டான்.
“அப்ப நீ வரமாட்ட. சரி அடுத்த ஸ்டாப்புல நீ இறங்கி ஒவ்வூர் பஸ்ஸுல ஏறி வீட்டுக்குப் போய்க்கோ. ஒன்னல்லா நம்பி வந்தேம் பாரு என்னைச் சொல்லனும்” முகத்தை வெடுக்கென்று வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
அவன் பேச்சும் கோபமும் முகத்தைத் திருப்பிக் கொண்ட பாங்கும் அவன் எதையோ நடத்திக் கொள்ள எதிர்பார்த்து அது நடக்காமல் போய்விட்ட ஏமாற்றத்தைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது.
அடுத்த ஸ்டாப்பில் பேருந்து நிற்க, அந்தப்பெண் இவனிடம் சொல்லிக் கொள்ளாமலேயே பேருந்திலிருந்து இறங்கினாள். முகத்தில் எதிலிருந்தோ தப்பித்த நிம்மதி தெரிந்தது.
பேருந்திலிருந்து இறங்கிச் செல்பவளை வெறிக்கப் பார்த்தான் அந்த இளைஞன். இரை தப்பிவிட்டதால் ஏற்பட்ட குரூரம் அவன் பார்வையில் தெரிந்தது.
இந்துமதியின் அடங்கா மனம் அந்த இளைஞனுக்கும் இளைஞிக்கும் இடையே நடந்த நாடகத்தை பட்டும் படாமல் பார்க்க வைக்க அவரை அறியாமலே கண்களில் கண்ணீர் திரண்டது.
‘இந்தூ! பாத்தியா பாத்தியா! காதல்கிற போர்வைல சில ஆண்கள் ஏன் பெரும்பாலான ஆண்கள் பொண்ணுங்கள நம்பவெச்சு சந்தர்ப்பம் கெடைக்கும்போது, தான் நெனச்சத சாதிச்சுட்டு கைகழுவிட்டு போறத காதல்னு எப்பிடி சொல்றது இந்து.
ஆனா இன்னொன்னையும் சொல்லனும் தானே. சில பொண்ணுங்களும் நிஜமாவே தன்னை நேசிக்கிற ஆணை ஏமாத்துறது உண்டு தானே! ஆனா அது அதிக எண்ணிக்கையா இருக்காது. பெரும்பாலும் ஏமாறுறது பொண்ணுங்கதான்.
இப்பிடி ஒருத்தர ஒருத்தர் ஏமாத்திட்டுப் போறது பேரு காதலா? இதுவா காதல்? இதுதானா காதல்?இல்ல! இல்ல காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாத இதெல்லாம் காதலில்ல! சரியா? இல்லியா இந்தூ’ மனம் கேட்கும் கேள்விக்கு இல்லையென்று சொல்ல முடியவில்லை இந்துமதியால். ‘ஆமெ’ன்று மெல்ல உச்சரித்தது உதடுகள்.
‘இந்தூ! நான் சொன்ன எல்லாத்தையுமே நீ ஏத்துக்கிறயா? ஆமான்னு சொல்லுற. அப்ப நா ஒன்னு கேக்குறேன் பதில் சொல்லேன்’ மனம் மீண்டும் கேள்வி எழுப்பியது.
மனசு என்ன கேட்கும் என்று தெரியும் இந்துமதிக்கு. இன்று நேற்றா கடந்த ஐம்பது வருடங்களாக அதே கேள்வியைக் கேட்டுத் துளைத்துக் கொண்டேதானே இருக்கிறது.
மௌனத்தையே பதிலாய்த் தந்தார் இந்துமதி.
‘மௌனமா இருந்துட்டா ஆச்சா. நிஜமாவே தன்னை நேசிக்கிற ஆணை சில பெண்கள் ஏமாத்துறது உண்டுதானே?ஆமான்னு நீதானே ஒத்துக்கிட்ட. அப்ப ராகவ்க்கு நீ செஞ்சது என்ன இந்து?’ மனம் கேட்ட கேள்வியால் அப்படியே சுருண்டு போனார் இந்துமதி.
‘இல்ல.. இல்ல.. நா ராகவ்க்கு துரோகம் பண்ணல. சத்தியமா துரோகம் பண்ணல. அப்ப இருந்த என் சூழ்நிலை வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுத்து. இந்த வயசிலயும் ராகவ மறக்க முடியாம நெனச்சு நெனச்சு அழறது என் கூடவே இருக்குற மனசே ஒனக்குத் தெரியாதா?’ பொங்கிவரும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார் இந்துமதி.
எத்தனை வயதானால் என்ன?
இளமையில் நிஜமாய் நேசித்த இதயங்கள் சூழ்நிலை காரணமாய்ப் பிரிந்து விட்டாலும் வயதானால் நேசித்த நேசிப்பை மறந்து விடுமா என்ன?
நேசம் மறந்திடுமோ நெஞ்சம்?
சீட்டில் தலைசாய்த்துக் கண்களை மூடிய இந்துமதி கண்களில் பொங்கிய கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். உதடுகள் துடித்தன. வாய் “ராகவ்..” என்ற பெயரைத் தவிப்போடு உச்சரித்தது. உடல் லேசாய் எம்பித் தணிந்தது. மனம் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய அவரின் பதினெட்டாம் வயதிற்குப் பின்னோக்கி நழுவிச் சென்றது.
(நேசம் வளரும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!