ஞாயிற்றுக் கிழமை.
ஆபீஸ் இல்லை என்பதால் எட்டு மணிக்குதான் எழுந்தான் ராகவ்.
எழுந்து கிணற்றடிக்குச் சென்று பல் துலக்கிவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்தபடி கூடத்துக்கு வந்தபோது, அம்மா தாளிட்டிருந்த வாசல் கதவைத் திறந்து “அட அட! வாங்கோண்ணா! வாங்கோ! வாங்கோ!” என்று அழைத்தார்.
“என்னம்மா பார்வதி! எப்டிருக்க? சௌக்கியமா!” என்று சப்தமாய்க் கேட்டபடி ‘தட் தட்’ என்று பூமி அதிர நடந்து உள்ளே வந்தார் சுப்புணி மாமா. அம்மாவின் உடன் பிறந்த அண்ணா.
“வாங்கோ மாமா!”
“என்னப்பா ராகவ்! எப்டி இருக்க? புது ஆபீஸ் வேலேல்லாம் எப்டி போறுது?”
“உங்க ஆசிர்வாதம் மாமா. ஆல் ஃபைன்.”
“ஒக்காருங்கோ மாமா.” சுவற்றோரம் கிடந்த நாற்காலியைக் கொஞ்சம் முன்புறமாய் இழுத்துப் போட்டான் ராகவ்.
“ஹரே கிருஷ்ணா!” என்று சொல்லியபடி அவர் நாற்காலியில் அமரவும், “அண்ணா! காபி” என்று டபரா டம்ளரில் பார்வதி மாமி காபியைக் கொண்டு வந்து நீட்டவும் சரியாய் இருந்தது.
காபியை வாங்கி அருகிலிருந்த மேஜைமீது வைத்துவிட்டு “பார்வதி இந்தா இதுல. பூ, பழம் இருக்கு வாங்கிக்கோ. அப்றம் மன்னி அதிரசம் பண்ணி அனுப்பிருக்கா ராகவுக்குப் புடிக்குமேன்னு. அது இதுல இருக்கு” என்று சொல்லியபடி இரண்டு பைகளைக் கொடுக்க ரொம்ப “சந்தோஷம்ணா” என்றபடி அவற்றை வாங்கிக் கொண்டார் பார்வதி மாமி.
அம்மாவையும் மாமாவையும் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்தான் ராகவ்.
“அட! ராகவ் ஏன் நிக்கற ஒக்காரு”
நாற்காலியில் உட்கார்ந்தான் ராகவ்.
“அப்றம்?” என்றார் சுப்புணி மாமா.
“சொல்லுங்கோ மாமா. எப்ப கிளம்பினேள் ஊர்லேந்து?”
“விடியகால நால்ர பஸ்ஸுக்கு. அடிச்சு மோதி கொண்டு வந்து விட்டான்ல பஸ்காரன். வேகம்னா வேகம் அப்டியொரு வேகம்.”
இவர்கள் பேச்சில் இடையில் வந்து கலந்து கொண்டார் பார்வதி. பரஸ்பர குசல விசாரிப்புகள் முடிந்தன.
“பார்வதி!”
“சொல்லுங்கோண்ணா”
“நா இப்ப இங்க ஏ வந்தேன்னு சொல்லலியே”
“சொல்லுங்கோண்ணா”
“ராகவ் இப்ப வேலைக்குப் போய் கை நெறைய சம்பாதிக்க ஆரம்பிச்சாச்சு. வயசு இருவத்தேழு ஆரம்பிச்சாச்சு இல்ல”
“ஆமாண்ணா”
“அப்றம் என்ன? காலா காலத்துல கல்யாணத்த பண்ண வேண்டிது தானே. எம்பொண்ணு மீனாட்சிக்கும் வயது பத்தொம்போது முடிஞ்சு இருவது தொடங்கியாச்சு. கல்யாணத்தப் பண்ணனும்.
கைல வெண்ணைய வெச்சுண்டு நெய்க்கு அலைவாளா. ராகவ் இருக்கறச்சே நா ஏன் வேற எடம் பாக்கனும்? அதான் பேசி முடிச்சிடலாம். வர்ர ஆவணில கல்யாணத்த வெச்சுக்கலாமான்னு? கேக்க வந்தேன்.
மன்னியும் வரேன்னுதா சொன்னா. ஆனா மீனாட்சி பயிஷ்ட ஆயிட்டா. அவள விட்டுட்டு வரமுடீல .அதான் நா மட்டுமா வந்தேன். நீ என்ன சொல்ற பார்வதி? அஞ்சுநா கல்யாணம் வெச்சு ஜமாய்ச்சுடலாம்.
எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு மீனாட்சி. ஒனக்கும் ராகவ் ஒத்தபுள்ள. அடுத்தடுத்து யாருக்குப் பண்ணிப் பாக்கப் போறோம். அதுனால ஊரே மூக்குல வெரல வைக்கிறாப்ல ‘ஓஹோ’ன்னு கல்யாணத்தப் பண்ணனும்.
ஜாதகம், பொருத்தம் அதுயிதுன்னல்லாம் பாக்க வேண்டாம். மனசு ஒத்துப் போனா போதும்.” மூச்சுவிடாமல் பேசி முடித்தார் சுப்புணி மாமா.
மாமாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராகவுக்கு ‘குபீரெ’ன்று வியர்த்தது. இதயப் பிரதேசம் லேசாய் அதிர்ந்தது. கை,கால் சில்லிட்டது போல் உணர்ந்தான்.
சட்டென எழுந்து தனது அறையை நோக்கி நடந்தான். நடையில் தளர்வு தெரிந்தது. நெஞ்சில் பயம் பற்றியது.
“பார்வதி பாரேன் ராகவ, கல்யாணப் பேச்ச எடுத்ததுமே வெக்கப்பட்டுண்டு ஓடறத” அவன் எழுந்து சென்றதன் காரணம் தெரியாமல் வெட்கப்பட்டுச் செல்வதாய்ச் சொல்லிக் கைதட்டிச் சிரித்தார் மாமா.
“அண்ணா”
“சொல்லு பார்வதி”
“மீனாட்சி என்னோட மருமா அவ. எனக்கு நாட்டுப் பொண்ணா வந்தா அது எனக்கு ரொம்ப சந்தோஷம்தா. ஆனா முடிவ நாமட்டும் எடுக்க முடியாதே.
ராகவ் என்ன நெனைக்கிறான்னும் கேக்கனுமோனோ. கல்யாணம் பண்ணிக்கப் போறது அவந்தானே. அவன் சரின்னு சொல்லட்டும். கல்யாணத்த ‘ஜாம்ஜாம்’னு முடிச்சிடலாம். மீனாட்சி இந்தாத்து நாட்டுப்பொண்ணாவரது கசக்குமா என்ன?” என்றார்.
“ஆமாமா, நீ சொல்றதும் வாஸ்தவம். கூப்டு ராகவ கேட்டுடுவோம்”
“அண்ணா என்னண்ணா இது? கல்யாணம்கறது ஆயிரங்காலத்து பயிறு. எடுத்தேன் முடிச்சேன்னு செய்வாளா? ஒங்குளுக்குத் தெரியாதது இல்ல. அவனுக்கு யோசிக்க டயம் குடுக்கனுமோல்லியோ”
“அப்ப சரி பார்வதி. புள்ளையாண்டண்ட சொல்லு. பத்துநாள்ள யோசிச்சு சொல்லச் சொல்லு. நல்ல பதிலா சொல்லச் சொல்லு.சீக்கிரம் சொன்னாதா கல்யாண ஏற்பாட்ட நல்ல நாள் பாத்து ஆரம்பிக்கலாம்.”
பத்து நாள் கால அவகாசம் தந்துவிட்டு மதியம் ஒருமணிக்கெல்லாம் ஊருக்குக் கிளம்பிச் சென்றார் சுப்புணி மாமா.
எப்போதும் வேடிக்கையும் சிரிப்புமாய் தாயிடம் பேசும் ராகவ் இப்போதெல்லாம் கொஞ்சம் மாறிதான் போயிருந்தான். ஆபீஸில் அதிக வேலைபோலும் என்று அவனை அதிகமாகக் கேள்வி கேட்பதில்லை மாமி.
ஆனாலும் அண்ணா சுப்புணி வந்துவிட்டுப் போன பிறகு ராகவ் சுரத்தில்லாமல் அமர்ந்தபடி விரல் நகங்களைப் பார்ப்பதும் முகவாயைச் சொரிவதும் விரல் கொண்டு காதைக் குடைவதுமாய் மனச்சஞ்சலத்தோடு இருப்பதாய்த் தோன்றியது மாமிக்கு.
‘ஒருவேளை மாமா பொண்ணு மீனாட்சிய கல்யாணம் பண்ணிக்க சம்மதமில்லையோ? அதச் சொல்லத் தயங்கிண்டு இப்டி இருக்கானோ?’ தாயுள்ளம் மகனின் நிலைபார்த்து தவித்தது.
“ராகவ்” மெல்ல மகனை மெல்ல அழைத்தார் மாமி.
தலைகுனிந்து அடிக்கடி பெருமூச்சு விட்டபடி விரல் நகங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ராகவ் அம்மாவின் அழைப்பைக் கேட்டுத் தலை நிமிர்ந்தான்.
“ஏங்கண்ணு இப்பிடி ஒக்காந்திருக்க எதையோ பறி குடுத்தாமாரி?” மகனின் தலைமுடியைக் கோதி விட்டார் மாமி.
தாயின் மடியும் தலை கோதும் கரங்களும் அவள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு சொர்க்கத்தையல்லவா காட்டும்.
“தோ பாரு ராகவ் கண்ணா! ஒனக்கு மாமா பொண்ணு மீனாட்சிய கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லேன்னா தைரியமா சொல்லிடு. ஒன்னும் பாதகமில்ல. ஒருவேள ஒங்கத்த பொண்ணு அலமேலுவ ஒனக்குப் புடிச்சிருந்தா வெளிப்படையா சொல்லிடு.
கோமதி அதா ஒன்னோட அத்த, பாக்றப்பல்லாம் ‘மன்னீ, அலமேலுவுக்கும் வயசு இருவதாயிடுத்து. இதுக்கு மேலயும் வீட்ல வெச்சுண்டு ஒக்காந்ருப்பாளா? அண்ணா உயிரோட இருந்தப்ப அடிக்கடி சொல்லுவா ‘கோமதி! ஒம் பொண்ணு எம் மருமா அலமேலுதான் எங்காத்து நாட்டுப் பொண்ணுனு. அண்ணா வார்த்தைய, ஆசைய மீறக்கூடாதுன்னு அலமேலுக்கு வேற வரன் எதுவும் பாக்காம இருக்கேன்.
நீங்க சரின்னு சொல்லிட்டா அடுத்த மூணு மாசத்துல ராகவ் அலமேலு கல்யாணத்த வெச்சுகலாம்னு நையிநைனு புடுங்கி எடுக்கறா.
மாமா பொண்ணா? அத்த பொண்ணா? நீயே நல்லா யோசிச்சு ஒனக்கு புடிச்ச பொண்ண தேர்ந்தெடு. பத்து நாள் அவகாசமிருக்கு. அவசரமொன்னுமில்ல.” அம்மா சொல்லி முடிப்பதற்குள்,
“அம்மா கொஞ்சம் சும்மா இரேன். தலைய வலிக்கறது” என்று சொல்லிக் கொண்டே எழுந்து தன் அறையை நோக்கி நடந்தான் ராகவ்.
(நேசம் வளரும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
மறுமொழி இடவும்