நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 11 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

பார்த்தவர்களை வாய் பிளக்க வைக்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாய் இருந்தது அந்த வீடு. பெரிது பெரிதாய் இரண்டு இரும்பு கேட்டுக்கள் வாசலை மூடியிருக்க, உள்ளே செல்வச் செழிப்பை பறை சாற்றும் விதமாகக் கண்ணில் படும் பொருட்களெல்லாம் விலைமதிப்பற்ற பொருட்களாய் தெரிந்தன.

அந்த மிகப்பெரிய கூடத்தின் நடுவில் பர்மா தேக்கால் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்டிருந்த ஊஞ்சல் தொங்கியது.

அதில் கழுத்தில் கனத்த தங்கசெயினும் விரல்களில் மின்னும் வைரமோதிரங்களும் காதுகளில் வைரக்கடுக்கன்களுமாய் முறுக்கு மீசையோடு பந்தாவாக அமர்ந்திருந்தார் பெருந் தனக்காரர் கதிரேசன்.

“ஏனுங்க” என்றபடி அறையொன்றிலிருந்து வெளிப்பட்ட கதிரேசனின் மனைவி சொர்ணாம்மா ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்திருந்த கணவரின் அருகில் வந்து நின்றாள்.

“என்ன சொர்ணா?”

“நம்ம மவன் நாகுவுக்கு வயசு ஏறிக்கிட்டே போவுது.. கல்யாணம் பண்றது எப்ப?”

“ஏன்? தினமும் புட்டியும் குட்டியுமாதானே இருக்குறான். கல்யாணம்னு வேற தனியா வேணுமா?”

“அட போங்க! அதெல்லாம் இருந்துட்டுப் போவுது. அது வெளிய. வூட்டுல தாலிகட்டுன பொண்டாட்டினு ஒருத்தி வேணாமா? காலத்தோட அவுனுக்கு கல்யாணத்தப் பண்ணினாத் தானே நாமளும் பேரம்பேத்திய
பாக்குலாம்.”

“இப்ப என்னான்ற?”

“அவுனுக்கு அழகான நல்ல பொண்ணா”

“பாத்துட்டா போச்சி”

“நமக்கு பொண்ணு பாக்குற சிரமத்தகூட கொடுக்காம அவனே பொண்ணுகூட பாத்து வெச்சிட்டா”

“அடிசக்க! எந்தப் பொண்ணு இவன் வலேல மாட்டிச்சி”

“அட என்னங்க! நா சீரியஸா பேசிகிட்ருக்கேன். நீங்க?” சின்னதாய்க் கோவப்பட்டாள் சொர்ணாம்மா.

“சரி.. சரி.. கோவப்படாத.. கோவப்படாத.. நம்ம மவ கண்ணுல பட்ட பொண்ணு யாரு?”

“அதாங்க .நம்ம கணக்குபுள்ள ரத்தினவேல் பொண்ணு. பேரென்ன பேரு?”

“இந்துமதி” அந்தப் பெரியகூடத்தில் இருந்த தூண் ஒன்றில் சாய்ந்தவாறு நின்றிருந்த நாகு, நாகராஜ் குரல் கொடுத்தான்.

“ஆமா..ஆமா.. இந்துமதி.. இந்துமதிங்க..பாக்க ரொம்ப அழகுங்க.”

“ஓ! கணக்குப்புள்ள பொண்ணா. அந்தப் பொண்ணு காலேஜுல பெரிய படிப்புன்னா படிக்கிதாம். அது சரிப்பட்டு வருமா? நம்ம பய ஒம்பதாவது கூட பாஸ் பண்ணல”

“என்னாது! பெரிய படிப்பு படிக்கிதா? பெரிய படிப்பு. பொட்டச்சிக்கு எதுக்குங்க படிப்பு? என்னத்தப் படிச்சுக் கிளிச்சாலும் அப்பனோ, அண்ணனோ காட்டுற ஆம்பளைக்கு கழுத்த நீட்டி அவனோட குடும்பம் நடத்தி புள்ளகுட்டிய பெத்து வமுச விருத்திய பண்ணுறத தவிற பொட்ட களுதங்களுக்கு வேறு என்னாங்க பெரிசா பெரும இருக்கு.”

“நீ சொல்லுற. படிச்ச பொண்ணு ஒன்பதாவது பெயிலான ஒம்புள்ளய கட்டிக்கனுமில்ல!”

ஆவேசப்பட்டாள் சொர்ணாம்மா.

“என்னாங்க அடிக்கடி எம் புள்ளய படிக்காதவன்னு குத்திக் காட்டுறீங்க. அவுனுக்கு எதுக்குங்க படிப்பு.பணத்த எண்ணத் தெரிஞ்சா போதாதா? பத்து தலமொற குந்தித் தின்னாலும் கொறையாத நம்ம இம்மாஞ்சொத்துக்கும் ஒரே வாரிசு நம்ம புள்ள. அவ படிச்சு வேலைக்கு போயி சம்பாரிக்கவா போணும்.

ஆயிரம் பேத்துக்கு வேல குடுத்து சம்பளம் குடுக்குற சொத்துக்காரனுங்க நம்ம புள்ள. ஏன் அந்த பொண்ணு இந்துமதி படிக்குதே அந்த காலேசு. அந்தக் காலேசயே வெலக்கி வாங்கிடுவான்ல நம்ம பய. என்னமோ பேசுறீங்க பேச்சு.”

“இருக்கட்டும். ஆனாலும் ஒம்புள்ளயோட கல்யாண கொணம் ஊரறிந்ததாச்சே. கணக்கு புள்ள பொண்ணு குடுப்பாறா”

“நாகு வயசு புள்ளைங்க. பணக்கார வீட்டுப் புள்ளைங்க கொஞ்சம் அப்டி இப்டிதா இருக்கும். ஏன் நாகு வயசில நீங்க எப்டியிருந்தீங்க? நா கட்டிக்கிலியா ஒங்கள”

“ஹா! ஹா! ஹா!” என்று சிரித்தபடி மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார் கதிரேசன்.

“க்கூம் சிரிக்காதிங்க. கூப்ட்டனுப்புங்க கணக்குப் புள்ளய. பொண்ணு கேட்டா மாட்டேன்னு சொல்லுவாரா பாப்பம். லட்சலட்சமா கொட்டிக் கெடக்குற சொத்துக்கு ஒரே வாரிசு எம்புள்ளைக்கு பொண்ணுகுடுக்க யாருக்கு கசக்கும்.

நம்ம வீட்டுக்கு மருமகளா வர அந்த பொண்ணு குடுத்துல்ல வச்சிருக்கனும். கூப்டுங்க கணக்கு புள்ளய. எம்மவன் ஆசப்பட்டுட்டான். அந்தப் பொண்ண கட்டி வெச்சே ஆவனும். ஆமா சொல்லிட்டேன்”.கணவனுக்கு எச்சரிக்கை விடுவதுபோல் கையை ஆட்டினாள் சொர்ணாம்மா.

———–

“அய்யா கணக்குப்புள்ள அய்யா கும்புடறேனுங்க”

இறப்புச் சான்றிதழ் கேட்டு வந்திருந்த விண்ணப்பமொன்றை படித்துக் கொண்டிருந்த கணக்குப் பிள்ளை ரத்தினவேல் குரல் கேட்டு நிமிர்ந்தார்.

முருகேசன்.

“என்ன முருகு இங்க?”

“அய்யா! ஒங்கள பெருந்தனக்காரரு கதிரேசனய்யா கையோட கூட்டியாரச் சொன்னாரு”

“எதுக்கு?”

“தெரியலிங்க”

‘எதுக்காக இருக்கும்?’ மனசு குடைந்தது.

‘எதாவது நிலசம்மந்தமா இருக்கும். வேறெதுக்கு நம்மள கூப்புடப் போறாரு’ மனதை சமாதானப்படுத்தினார்.

“சுந்தரி! என்னோட சட்டையையயும் துண்டும் எடுத் தா” உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.

“கதிரேசனய்யா கூப்டு வுட்ருக்காரு.போய்ப் பாத்துட்டு வர்றேன்” சொல்லிக் கொண்டே சட்டையை மாட்டித் துண்டை தோளில் போட்டுக் கொண்டு முருகேசனைத் தொடர்ந்து வீதியில் இறங்கினார் ரத்தினவேல், இனிமேல் அமைதியான தன் குடும்பத்தில் அடுத்தடுத்து நடக்கப்போகும் விபரீதம் அறியாதவராய்.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.