கூடத்திலிருந்த அறையொன்றின் நிலைப்படியில் சாய்ந்து கொண்டு கணவர் மற்றும் ரத்தினவேலின் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த சொர்ணாம்மா கோபத்தோடு தரையதிர கணவர் கதிரேசனை நோக்கி ஓடி வந்தாள்.
“அந்த பிச்சக்காரபய கணக்குப்புள்ள என்ன சொன்னா? என்ன சொன்னா? எம்புள்ள படிக்காதவனாமா! அவம் பொண்ணு ரொம்ப படிச்சவளாமா! அவம் பொண்ணுக்கு இஷ்டமில்லாத எதையும் செய்யமாட்டானாமா!
நம்ம புள்ள நாகராசு அப்டி இப்டி இருக்குறது அந்த பிச்சக்காரப் பயலுக்குத் தெரியும். பணக்காரவூட்டுப் பையன்னா அப்டியிப்டிதா இருப்பான். அதுக்காக அவுனுக்கு யாரும் பொண்ணு தரமாட்டாங்களா?
டேய் கணக்கு! இந்த நிமிஷத்து லேந்து நாந்தாண்டா ஒனக்கு ஏழர. தொலஞ்சுதுடா ஒன் நிம்மதி.
ஒம் பொண்ணோட வாழ்க்கையில இனிமே நல்லது நடந்துடுமா? அவ வாழ்க்கைய நரகமாக்கிட மாட்டேன்? ஒவ்வீட்டுல இனிமே ஒப்பாரிதாண்டா!” கத்திக் கொண்டே சாமியாடினாள். ‘சுடீர் சுடீரெ’ன்று விரல் சொடுக்கினாள். ஆவேசத்தில் முகம் சிவந்தது.
“அம்மா! அந்தப் பொண்ண தூக்கிடட்டுமாம்மா?” கேட்டான் நாகராசு
“டேய்! அவசரப்பட்டு எதையும் செஞ்சுடாத. நிதானமா நம்மமேல சந்தேகம் வராம காய் நவுத்தனும். செய்யரேண்டா. செய்யுறேன்! செய்யுறேன்! அவங் குடும்பத்த நாசமாக்கிடமாட்டேன்! நாசமா!”
——-
நெய்வேலி. மணி இரவு எட்டு.
சிதிலமடைந்த நிலையில் பெயருக்கு வீடென்று நின்று கொண்டிருந்த அந்தக் கட்டிடத்தின் உள்ளே கரையான் அரித்த மர அலமாரியிலிருந்த தகர டப்பாக்களை ஒவ்வொன்றாய்த் திறந்து ‘சில்லரை ஏதாவது கிடைக்குமா?’ என்று நடுங்கும் கரங்களால் பரபரப்பாகத் தேடிக் கொண்டிருந்தான் தனசேகரன்.
சில்லரை இருந்தால்தானே கைக்குத் தட்டுப்பட, “ச்சே” என்றபடி டப்பாக்களைக் கீழே தள்ளிவிட்டான்.
நடுங்கும் கரங்களை ஒன்றோடு ஒன்றாய் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டான். சுவற்றோரம் காலையில் குடித்துவிட்டு உருட்டி விட்ட சாராய பாட்டில் கண்ணில் பட, அவசரமாய் பாட்டிலை எடுத்து வாயில் சரித்துக் கொண்டான்.
காலி பாட்டிலுக்குள் செத்துக் கிடந்த ஈ ஒன்று பாட்டில் சுவற்றின் ஈரத்தில் வழுக்கிக் கொண்டு வந்து பாதியில் நின்றது.
ஆத்திரத்தோடு பாட்டிலை சுவற்றை நோக்கி வீச, பாட்டில் ‘படீர்’ சப்தத்தோடு சில்லு சில்லாய் உடைந்து சிதறியது.
“சாராயம்! சாராயம்! சாராயம்! வேணும். காசு, காசு யாராவது குடுங்களேன்” பைத்தியம் போல் கத்திக் கொண்டே சாராயம் குடிக்காமையால் நடுங்கும் கரங்களால் தலையைப் பிடித்துக் கொண்டான்.
“தட்..தட்..” வாசல் கதவு தட்டப்படும் சப்தம்.
‘சீந்தும் ஆளிலில்லாத தன்னைத் தேடி யார் வந்திருக்கப் போகிறார்கள்’ என்று நினைத்தவன், ‘யாராக இருந்தாலும் சரி அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி சாராயம் வாங்க காசு பார்த்து விடுவது’ என்ற முடிவோடு கதவைத் திறந்தான்.
அடியாட்களைப் போல் வாட்டசாட்டமாய் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
“யாரு? யாரு வேணும் ஒங்களுக்கு?”
“தனசேகர் இருக்காருங்களா?”
“நாந்தா தனசேகர். நீங்க?”
“நாங்க சரவூரு. ஒங்கள பெரிய தனக்காரரு மவன், சின்னவரு நாகராஜய்யா கையோட கூட்டியாரச் சொன்னாரு”
“யாரு? நாகராஜா? அவுருக்குதா நான்னா ஆவாதே”
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இத ஒங்ககிட்ட குடுக்கச் சொன்னாரு” என்றபடி பையொன்றை தனசேகரன் கையில் வைக்க, ரெண்டு பாட்டில்கள் பைக்குள் உருண்டு ஒன்றோடொன்று இடித்து ‘சலங் சலங்’கென்று சப்தமெழுப்ப, பறந்தடித்துக் கொண்டு பைக்குள் கைவிட்டான் தனசேகரன்.
வழுவழுத்தது பாட்டில்கள். அவசர அவசரமாய் பாட்டில்களை வெளியே இழுத்தான். சீமைச்சரக்கு பாட்டில்கள் இரண்டு பைக்குள்ளிலிருந்து எட்டிப் பார்த்துச் சிரித்தன.
“உய்” என்று அளவிடமுடியாத உத்ஸாகத்தில் உதடுகள் கூட்டி விசிலடித்தான்.
தாங்க முடியாத வேகத்தோடு பாட்டிலொன்றை எடுத்து மூடி மீது ஒரு தட்டு பாட்டிலடியில் ஒரு தட்டு தட்டி மூடியைச் ‘சக்’கென்று திறக்க, பொங்கி வரும் சரக்கை பேராவலோடு வாய்க்குள் சரித்து விழுங்கினான்.
இரண்டே நிமிடத்தில் சீமைச்சரக்கு வேலை செய்ய ஆரம்பிக்க “ஷூப்பரு” என்றான் குழறளோடு.
“இது மாரி நெதமும் பத்து பாட்டில் தர்ரதா சின்னய்யா ஒங்ககிட்ட சொல்லச் சொன்னாரு. எங்களோடு வர்ரீங்களா?”
“பத்து பாட்டிலா!” என்று வியப்போடு ஏழு விரலைக் காட்டினான் தனசேகர்.
“ம்.. வரேன்.. வரேன்” என்று சொல்லி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு வீட்டைக்கூட பூட்டாமல் அவர்களைப் பின் தொடர்ந்தான், இந்துமதியின் வாழ்க்கையோடு விளையாடப் போகும் குடிகாரன் தனசேகரன்.
(நேசம் வளரும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
மறுமொழி இடவும்