நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 14 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

எப்போதும் கலகலப்பாக காணப்படும் ரத்தினவேலின் வீடு ‘கல்’ என்று அமைதியாகக் காணப்பட்டது.

காலை தூங்கி விழித்ததுமே அப்பாவிடம் விளையாட்டாய் வம்பிழுத்து சிரிக்க வைத்து, அப்பத்தாவிடம் ஏட்டிக்குப் போட்டியாய் பேசி திட்டு வாங்குவது என்று வேடிக்கையும் விளையாட்டுமாய் இருந்த இந்து காதலில் விழுந்த பிறகு கொஞ்சம் மாறித்தான் போயிருந்தாள்.

தான் மாறிப் போனதை அவளே உணர்ந்திருந்ததால் வீடு கொஞ்ச நாளாய் அமைதியாக இருப்பது பெரிதாய்த் தெரியவில்லை. ஆனால் அப்பத்தா அவ்வப்போது ‘இந்து இப்பெல்லாம் முன்போல் தன்னுடன் வாயாடுவதில்லை
அப்பாவிடம் விளையாட்டுப் பேச்சுக்கள் பேசுவதில்லை’யென்று கவலையோடு குறைபட்டுக் கொள்ளும்போது தனக்கு கடைசி வருடப் பரீட்சை நெருங்கி விட்டதாகவும் அதனால் அதிகபட்சமாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாய்’ காரணம் சொல்லி நம்ப வைத்தாள்.

பாவம்! மகளின் மாற்றத்துக்கு நிஜக் காரணம் தெரியாத ரத்தினவேலுவும் சுந்தரியும் கூட இந்துவின் பொய்யை உண்மையென நம்பினர்.

அதிலும் இன்று வீடு ரொம்பவுமே அமைதியாக இருந்தது.

வலிய வந்து மகளிடம் பேசும் ரத்தினவேல் யாரிடமும் பேசாமல் நாற்காலியில் அமைதியின்றி அமர்ந்திருந்தார். முகம் வாடிப் போயிருந்தது.

மனைவி சுந்தரி பலமுறை காலை உணவு சாப்பிட அழைத்தும் “வேண்டாம் சுந்தரி பசிக்கல” என்றார். “காபியாவது குடிங்க” என்று சொல்லி கொண்டு வைத்த காபி ஏடு பிடித்து ஆறிப் போய்க் கிடந்தது.

“வேலு! ஏ சாப்புடல! காபியகூட குடிக்கில?” தாய் செம்பகத்தம்மா குரல் கேட்டு நிமிர்ந்தார் ரத்தினவேல்.

“அட! கண்ணெல்லாம் ஏன் இப்பிடி ‘ஜிவுஜிவு’ன்னு செவந்து கெடக்கு. ராத்திரி தூங்குல போல. மொகமும் சோர்ந்து போயிருக்கு என்னாச்சு வேலு?” அக்கறையும் கவலையுமாய் மகனிடம் வினவினார் செம்பகத்தம்மா.

உச் கொட்டினார் ரத்தினவேல்.

“ஆமா அத்த ஒங்க புள்ள நேத்து கதிரேசனு கூப்புட்டாருனு போனாங்கள்ல அங்க போய்ட்டு வந்தப்புறமே இவுரு சொரத்தா இல்ல. ‘ஏன்னு’ கேட்டா ‘ஒன்னுமில்ல ஒன்னுமில்ல’ங்குறாரு” என்றார் சுந்தரி.

“மணி ஏழாவுது. இந்த பொண்ணு இன்னமு தூங்குது பாரு. நேரமாவுல? கும்பகர்ணியாட்டம் தூங்க வேண்டியது. அப்பறம் பஸ்ஸுக்கு நேரமாயிடுச்சுனு அடிச்சு புடிச்சிக்கிட்டு ஓடவேண்டியது” புலம்ப ஆரம்பித்தத் தாயை, “சும்மா இரும்மா. தூங்கட்டும். யாரும் எழுப்பாதிங்க. அவ நாலு நாளு காலேஜு போக வேண்டாம்.”

“என்னது? என்ன சொல்றீங்க? இந்து நாலு நாளு காலேஜு போக வேண்டாமா? ஏன்? என்னாச்சு! ஏங்க இப்டி சொல்றீங்க? புரியும்படியா சொல்லுங்க” படபடத்தார் சுந்தரி.

ரத்தினவேல் பதில் சொல்வதற்கு முன் ‘படீரெ’ன்ற கதவு திறக்கும் சப்தம் கேட்க அறையிலிருந்து வெளியே வந்தாள் இந்து.

வழக்கம்போல் “அப்பா” என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்து அப்பாவின் தோளைத் தொட்டுவிட்டு கொல்லைப்புறம் நோக்கி நடந்தாள்.

“பாரேன் இந்துவ. காலேல எழுந்திருச்சி வந்ததும் அப்பாவோட பின்கழுத்த கட்டிக்கிட்டு தோள்ள மூஞ்ச வெச்சு கொஞ்சிட்டுப் போவும். இப்பல்லாம் ‘அப்பா’ன்னுகிட்டு வந்து சும்மா தோள தொட்டுட்டுல்ல போவுது. நெதமும் ராமுழுக்க கண்முழிச்சி படிச்சிக்கிது போலருக்கு. அதான் அசந்து போயிடுது போல. முன்னாடிமாரி வெளையாட்டோ வாயடித்தனமோ ஒன்னக் காணல. ம்.. என்ன படிப்போ? என்ன பரிச்சயோ?” வருத்தத்தோடு அங்கலாய்த்தார் செம்பகத்தம்மா.

குளித்துவிட்டு வந்து கல்லூரிக்குக் கிளம்ப ஆயத்தமான இந்துவை “இந்தும்மா” என்று அழைத்தார் ரத்தினவேல்.

“அப்பா” அருகில் வந்தாள் இந்து.

“கண்ணு இன்னும் நாலு நாளுக்கு நீ காலேஜுக்குப் போக வேண்டாம் கண்ணு” என்றார்.

அதிர்ந்து போனாள் இந்து.

“அப்பா என்னப்பா சொல்றீங்க? நாலு நாள் காலேஜுக்கு போக வேண்டாமா? ஐயோ! என்னப்பா! ஏம்பா போக வேண்டாம்?”

‘தினமும் சந்திக்கிற எடத்துல ராகவ் வந்து என்னத் தேடினா? அய்யோ! ஏமாந்தில்ல போவாரு. நாலு நாள் ராகவ பாக்காம எப்பிடி இருப்பது?’ பயந்து போனாள் இந்து.

“இல்லப்பா! எக்ஸாம் நெருங்கிக்கிட்டு இருக்குப்பா. லீவெல்லாம் எடுக்க முடியாதுப்பா”

“அப்டி என்ன பொல்லாத எக்ஸாம். வீட்ல இருந்தே படி”

“ஏம்ப்பா காலேஜ் போக வேண்டாம். காரணத்த சொல்லுங்கப்பா”

“ஓ! காரணத்த சொல்லித்தா ஆவனுமா. போக வேண்டான்னா ‘சரிப்பா’ன்னு சொன்னத கேக்கமாட்டியா? காரணம் கேப்பியா! முன்னயும் இப்பிடித்தான் பாத சரியில்ல போக வேண்டாம்னு மணி கொத்தனார்ட்ட சொல்லியனுப்பினேன். நீ கேக்காம போன. என்னாச்சு சேத்துல விழுந்து கால ஒடச்சிகிட்ட. இப்பவும் போக வேண்டாம்னு சொன்னா எக்ஸாம் அது இதுன்னு சொல்ற. அப்பா நல்லத்துக்கு தான் சொல்வேன். போக வேண்டாம். வீட்டுல இருந்து படி” என்றார் கண்டிப்பும் கோபமுமாய்.

வாயடைத்துப் போனாள் இந்து.

இதுவரை அப்பா கோபப்பட்டு பார்த்ததே இல்லை என்பதால் கொஞ்சம் அரண்டுதான் போனாள்.

அம்மா கொடுத்த தோசையை வேண்டா வெறுப்பாகத் தின்று, காபியை ருசி பார்க்காமல் வாயில் ஊற்றிக் கொண்டு தனது அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டாள். அப்பத்தா கதவைத் தட்டியும் கதவைத் திறக்கவில்லை.

மகளைத் திட்டியோ, கண்டித்தோ பழக்கமில்லாத ரத்தினவேல் கண்களில் அரும்பிய கண்ணீரைத் துண்டால் துடைத்துக் கொண்டார்.

“ஏங்க என்னாச்சுங்க ஒங்குளுக்கு? செல்லப் பொண்ண அவ கண்ணு கலங்குற மாரி பேசிபிட்டு நீங்களும் கலங்குறீங்க. நேத்து கதிரேசன் அண்ணன் வீட்டுல என்னதாங்க நடந்துச்சு? அங்க போய்ட்டு வந்ததுலேந்து கலக்கமா இருக்கீங்க. நீங்களா சொல்லுவீங்கன்னு பாத்தா சொல்லவும் மாட்றீங்க. என்னவோ ஏதோன்னு பயமாருக்குங்க” அழாக்குறையாய் புலம்பித் தீர்த்தார் சுந்தரி.

“உஸ்..” வாயில் விரல் வைத்து எச்சரித்தார் மனைவியை.

“அம்மா குளிக்கப் போவட்டும் சொல்லுறேன். அம்மாக்குத் தெரிஞ்சா நடுக்கூடத்துல ஒக்காந்து ஒப்பாரி வெச்சு புலம்பும். இந்துவுக்குத் தெரிஞ்சுடும்” என்றார்.

தாய் குளிக்க சென்றதும் கதிரேசன் வீட்டில் நடந்த அனைத்தையும் மனைவியிடம் சொல்லிக் கவலைப்பட்ட கணவரைக் கலவரத்தோடு பார்த்தார். நெஞ்சில் பயம் பற்றியது சுந்தரிக்கு.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.