தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தின் பகுதி அது.
காவிரியின் கிளை ஆறுகளான திருமலைராயன், குடமுருட்டி மற்றும் முடிகொண்டான் ஆகிய மூன்று ஆறுகள் அழகு நடைபோட்டு செல்லும் பகுதியென்பதால் ஆங்காங்கே வற்றாத குளங்களும் கண்மாய்களுமாய் தண்ணீர்ப் பஞ்சம் என்பதே இல்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தன.
கண்களுக்கு எட்டியவரை பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் ‘பச்சைப் பசே’லென்று காற்றிலாடும் நெற்கதிர்களைக் கொண்ட கழனிகள், வாழைத் தோப்புகள், மாஞ்சோலைகள் மற்றும் கரும்புத் தோட்டங்கள்.
இயற்கையன்னை சுவீகரித்துக் கொண்ட இடமோ என எண்ணும்படி பசுமை மிகுந்த வளத்தோடு காணப்பட்டது அந்தப் பிரதேசம். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகம் விளையும் பூமி.
செழிப்பான நெல்வயல்களில் பால் கதிரில் அடுக்கடுக்காய் நெருக்கம் நெருக்கமாய் சரம் கட்டி விளைந்து நிற்கும் நெல் மணிகளை வீசும் காற்று ஆரத்தழுவி முத்தமிட்டுப் பிரியா விடைபெற்று அகன்று வரும்போதெல்லாம் வயல் வரப்பில் நிற்பவர்கள், வயல்களைக் கடந்து சாலையில் செல்பவர்கள் என அனைவரின் நாசிக்குள்ளும் நுழையும் போது பால்பயிரின் வாசம்.
“அய்யா, என்ன ஒரு வாசம்!” என்று சொல்லி மேலும் மேலும் வேகமாய் மூச்சை இழுத்து நெஞ்சில் நிரப்பிக் கொள்ள முயலாதவர்கள் இருக்கவே முடியாது. கொடுத்து வைத்தவர்களுக்கே இந்த அனுபவம் கிட்டும்.
நெல் அறுவடை முடிந்து விட்டால் கழனியை சும்மா போட்டுவிடாமல் குறுகிய காலப் பயிர்களாய் பயறு, உளுந்து, துவரை என மாற்றுப் பயிர்களையும் விளைவித்து லாபம் பார்ப்பதுண்டு விவசாயிகள்.
வருடம் முழுதும் விவசாயப் பணியில் ஈடுபட்டு பலன் பார்த்துப் பயனடையும் படியாய் வளமையை வாரி வழங்கும் பகுதியாய் அமைந்திருந்தது அந்தப் பகுதி.
வளப்பம் மிகுந்த இப்பகுதியின் ஓர் அங்கமாய் அமைந்திருந்தது அந்த சிற்றூர்.
சின்னஞ்சிறு சரவூர்க் கிராமம். விவசாயமே முக்கிய தொழிலாய் இருந்தது அவ்வூர் மக்களுக்கு. பழங்கால அமைப்புப் படி ஊர் ஆரம்ப எல்லையில் ஒரு மாரியம்மன் கோயில்; ஊர் முடியும் எல்லையில் ஒரு காளியம்மன் கோயில் எல்லைத் தெய்வங்களாய். ஊரின் மையத்தில் சிறிய அளவிலான அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்.
கோயிலைச் சுற்றி நான்கு புறமும் அக்ரஹாரம். அக்ரஹாரத்தின் தெரு ஒன்றிலேயே அருள்மிகு கோதண்ட ராம சுவாமி மற்றும் ஆஞ்சனேய சுவாமியும் எழுந்தருளியிருக்கும் சின்னஞ்சிறு திருக்கோயில். அக்ரஹாரத்தைச் சுற்றி பலதரப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள்.
சரவூர் கிராமத்தில் ஒருசில மிட்டாமிராசுகள், பண்ணையாளர்கள் போன்ற பெரும் தனவந்தர்களும், சாதாரண சிறுகுறு விவசாயிகளும், இவர்களிடம் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களும் இருந்தனர்.
அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வுகளும், உறவும் பகைமையும், சண்டையும் சச்சரவுகளும் என எல்லாமும் உண்டுதான். ஒரு கிராமத்துக்கு உரிய இலக்கணத்தோடு திகழ்ந்தது சரவூர் கிராமம்.
ஒரு சில மச்சு வீடுகளைத் தவிர பெரும்பாலும் மற்ற அனைத்துமே ஓட்டு வீடுகள்தான். மச்சு வீட்டுக் காரர்கள் வசதியானவர்கள் என்று அறியப்பட்டிருந்தனர்.
அக்ரஹாரத்தைச் சுற்றி அமைந்திருந்த பல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் தெருக்கள் ஒன்றில் அமைந்திருந்த பச்சைநிற டிஸ்டம்பர் அடிக்கப்பட்ட அந்த மச்சு வீட்டின் வாசல் முகப்பில் ‘சா.ரத்தினவேல், கணக்குப் பிள்ளை (கர்ணம்), சரயூர் கிராமம்’ என்று எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது.
வாசலில் இரட்டை மாட்டுக் கூண்டு வண்டி மாடுகள் பூட்டப் படாமல் கிடந்தது. நாயொன்று சுருண்டு படுத்துத் தூங்கிய படியிருக்க, பெட்டைக் கோழியொன்று குரலெழுப்பிக் கொண்டு தன் ஏழெட்டுக் குஞ்சுகளோடு ஆகாரம் தேடி அலைந்து கொண்டிருந்தது.
காலை மணி எட்டாகியிருந்தும் ஆதவன் தன் வீரியத்தைக் காட்ட முடியாமல் கருத்த மேகக் கூட்டத்திற்குள் அடைபட்டுக் கிடந்தான். மழை வருவதற்கான அறிகுறிகள்.
குளித்து முடித்துவிட்டு நெற்றி நிறைய திருநீறு அணிந்து கொண்டு பூஜையை முடித்துவிட்டு, “அப்பனே! முருகா! வடிவேலா!” என்றபடி பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார் கணக்குப்பிள்ளை ரத்தினவேல்.
நாற்பத்தைந்து வயதிருக்கும். வழுக்கை விழாத, மொத்தமாய் நரைத்துப் போகாமல் காதோரங்களில் மட்டும் ஓரிரு வெள்ளைமுடி தெரியும் கிராப்புத் தலை. காதுகளில் சிகப்பு நிறக் கடுக்கன். வாட்ட சாட்டமான உடல்வாகு. பளீரென்ற நிறம்.
“ஏங்க! எங்கியோ வெளிய போகணும்னு சொன்னீங்களே! இட்லி சுட்டுட்டேன். கொண்டு வரவா?” சமையல் கட்டிலிருந்து குரல் கொடுத்தார் ரத்தினவேலின் மனைவி சுந்தரி.
“காலேல எந்திரிச்சி எஞ்செல்லத்தப் பாக்காம காபி, தண்ணிகூட குடிக்க மாட்டேன். இட்லி சாப்புடுடச் சொல்லுற! புள்ள இன்னுமா தூங்குது?” மனைவியின் கேள்விக்கு பதில் சொன்னார் ரத்தினவேல்.
“புள்ளயாம் புள்ள, இப்பதா எட்டு வயசு ஆவுது பாரு. மணி எட்டர மணி ஆகப்போவுது. ஒரு வயசு பொண்ணுக்கு அப்பிடியென்ன தூக்கம்? வயசு பதினெட்டாச்சு. அது வயசுல எனக்கு ஒங்கண்ணனும் நீயும் பொறந்தாச்சு.
மாமியார் வீட்டுக்குப் போய் வாழ வேண்டிய பொண்ணு இப்பிடி எட்ர மணி வர தூங்குனா வெளங்கிடும். ‘நல்லா பொண்ணு வளத்தான்னு’ சுந்தரியத்தான் ஏசுவாங்க” ஆரம்பித்தார் ரத்தினவேலுவின் தாய் செம்பகத்தம்மா.
“அம்மா! காலங்கார்த்தால ஆரம்பிச்சிட்டியா! இன்னிக்கி நாத்திக் கெழம தானே? லீவு நாளுதானே. எம்மவ என்ன நம்மள மாதிரியா? நீ மழைக்குக்கூட பள்ளிக்கூடத்துல ஒதுங்கி நிக்காதவ. நா எட்டாங்க்ளாஸோட சரி.
ஆனா எம்மவ பெரிய படிப்பு படிக்கிறா. சும்மால்லம்மா எம் பொண்ணு. காலேஜு போயி பியூசி படிக்கிது. அதமுடிச்சி மேலயும் மூணு வருஷம்ல படிக்கணுமாம்.
நம்ம குடும்பத்துல யாராச்சும் இம்மாம் படிப்பு படிச்சாங்களா? இல்ல படிக்கிறாங்களா? அவனவுனுக்கு மனசு பொறாமயில பத்திக்கிட்டு எரியிது. போவியா, லீவு நாளுல தூங்கட்டுமே.
ஒனக்கு எப்ப பாரு எம்மவள கொற சொல்லுறதே வேல. ஒம் பேத்திதானே அது. சும்மா நொண நொணன்னுகிட்டு” தாயை அடக்கினார் ரத்தினவேலு.
சமயலறையிலிருந்து மாமியாரும் கணவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரிக்கு சிரிப்பாய் இருந்தது.
மாமியாருக்கு தன் பேத்திமீது அளவுகடந்த பாசம் என்பதும், பேத்திமீது சொல்லும் குற்றம் குறைகளெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்காக என்பதும் தெரியும்.
பேத்தி கல்லூரியில் படிப்பதை பார்ப்பவர்களிடமெல்லாம் பீற்றிக் கொள்வதை எத்தனை முறை பார்த்திருப்பார் சுந்தரி.
அம்மாவுக்குப் பேத்தி மீது இருக்கும் பாசம்பற்றி ரத்தினவேலுக்கும் தெரியும்.
திடீரென ‘சடசட’வென்று பெரிய தூற்றலாய் போட ஆரம்பித்த மழை, கண்ணு மண்ணு தெரியாமல் பெருமழையாய் பேய்மழையாய் பெய்ய ஆரம்பித்தது. இடையிடையே கொடி மின்னலும் பெரும் சப்தத்தோடு இடியுமாய் அமர்க்களப்பட்டது.
“சுந்தரீ! இடிக்குது பாரு. இடி இடிச்சாலே பயப்படுவால்ல கொழந்த. ரூமுக்குப் போய் பாரு. அவ என்ன பண்றான்னு” சமையலறையிலிருக்கும் மனைவியிடம் சப்தமாய்ச் சொல்லிக் கொண்டே மகள் தூங்கும் அறையின் சாத்தியிருந்தக் கதவைப் பார்த்தார் ரத்தினவேல்.
அறையின் உள்ளே கட்டில்மீது அப்பொழுதுதான் பூத்த ரோஜாப் பூக்களை பெண்ணுருவில் கோர்த்து வைத்தது போல் அழகோவியமாய்ப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பதினெட்டு வயது பேரழகுப் பெட்டகம்.
“இந்தும்மா! இந்துக்குட்டி! எழுந்திரு செல்லம்!” என்ற தாயின் குரலைக்கேட்டு
சிணுங்கிக் கொண்டே கண் விழித்தாள்.
“அம்மா! அப்பா எங்கம்மா?” என்று கேட்டபடியே படுக்கையில் எழுந்தமர்ந்து மெல்லச் சோம்பல் முறித்தாள் இந்துமதி.
“ஏண்டி எழுந்திருக்கும் போதே அப்பா ஞாபகம் தானா?” பெண் அப்பா மீது வைத்திருக்கும் பாசம் தாய் சுந்தரியை நெகிழச் செய்தது.
ரோஜா இதழ் விரித்து மெல்லச் சிரித்தாள் இந்துமதி. சுண்டியிழுக்கும் அழகு, சொக்க வைக்கும் புன்னகை. தாயின் முகத்தை தன்னருகே இழுத்து கன்னத்தில் மெல்ல முத்தமிடுவதைப்போல் பாவனை செய்தாள் இந்து.. இந்துமதி.
(நேசம் வளரும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்