நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? - அத்தியாயம் 26

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 26

அந்த அறையில் மெல்ல சுற்றிக் கொண்டிருந்த சீலிங் ஃபேன் சீரான காற்றை பரப்பிக் கொண்டிருக்க, சுவரோரம் கிடந்த கட்டிலில் எலும்பும் தோலுமாய் படுத்துக் கிடந்தார் எழுபத்தி நான்கு வயது முதியவர்.

கண்கள் மூடியிருக்க மார்பு மட்டும் லேசாய் மேலும் கீழும் ஏறி இறங்கி அவர் உயிரோடிருப்பதை உறுதி செய்து கொண்டிருந்தது.

அவ்வப்போது நினைவு வருவதும், அப்படி நினைவு வரும்போதெல்லாம் உதடுகள் எதோ சொல்வதுபோல் அசைவதும் சட்டென நினைவு தப்பிப் போவதுமாய் கடந்த ஒன்னரை மாதமாக இப்படியான நிலைதான்.

மருத்துவ மனையிலிருந்து மருத்துவர்கள் ‘மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் பத்து நாட்களுக்கு மேல் தாங்காது வீட்டிற்குக் கொண்டு சென்று விடுங்கள்’ என்று டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி ஐந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன.

போய்ச் சேர்ந்த பாடில்லாமல் பிள்ளைகளின் பொறுமையைச் சோதித்தபடி இப்படியேதான் கிடக்கிறார்.

அறையின் ஜன்னலோரம் கிடந்த நாற்காலியொன்றில் கணேசன் அமர்ந்திருக்க, கணேசனின் தங்கை கோகிலா கிச்சனில் காபி போட்டுக் கொண்டிருந்தாள்.

ஃபோன் சிணுங்கியது.

“ப்ச்! இவ வேற, எப்பவரேள் எப்பவரேள்ன்னு கேட்டுண்டு” அலுத்துக்கொண்டே ஃபோனை ஆன் செய்தான்.

“ஏன்னா திரும்பி வரமாரி எதுவும் யோசன இல்லியா! ஆகாஷ் நீட் எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டான். அவனுக்கு கல்யாண்ல மெடிகல் காலேஜ்ல சீட் கெடச்சிருக்கு. அப்பாவா லட்சணமா ஆம்பளையா நீங்க ஃபீஸ் கட்டினா தேவல. அதுக்கும் நானே போட்டுமா? இன்னும் எத்தன நாளைக்கு அப்பாவக் கட்டிண்டு அழுவேள்” ஃபோனில் கத்தினாள் கணேசனின் மனைவி சரசு.

ஏற்கனவே கடுப்பில் இருந்த கணேசன், “என்னை என்ன பண்ணச் சொல்ற?போய்ச் சேர்வேனாங்கறார். படுத்தமா பத்து நாளு கெடந்தமா போய்ச் சேந்தமான்னு இருக்கனும். இன்னும் எத்தன நாளுக்குதா இழுத்துண்டே கெடப்பாறோ நம்ம உயிர வாங்கிண்டு” தன் பங்குக்குக் கத்தினான் கணேசன்.

தனக்கும் அண்ணாக்கும் இரண்டு டம்ளர்களில் காபியை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு சமையலறையிலிருந்து வந்த கோகிலா, “அட கண்ராவியேன்னு இருக்கு. எம்பொண்ணு நித்யஸ்ரீக்கு வர பதினேழாந்தேதி பிகேஜி ஆடிடோரியத்துல பரதநாட்டிய அரங்கேற்றம். ஜட்ச் ப்ரேம்நாத் சிறப்பு விருந்தாளியா கலந்துகிறார். இன்னும் ரெண்டுநாள்தா இருக்கு. பொண்ணும் என் ஆத்துக்காரரும் கால்மணிக்கு ஒருதடவ போன் பண்ணி ‘வரப்போறியா இல்லியா’ன்னு சத்தம் போடறா. இவரானா ச்சே!” கோபமும் எரிச்சலுமாய் கத்தினாள் கோகிலா.

“கணேசண்ணா காலேல கோடி வீட்டு ஜெகதா மாமிய எதேச்சயா பாத்தேன். அப்ப மாமி அப்பாவப் பத்தி விசாரிச்சா. வயசானவங்க இதுமாதிரி ரொம்ப நாளைக்கு இழுத்துண்டு கெடந்தா ஒரு எளம் வயசு பொண்ணு கையில டம்ளருல கொஞ்சமா குடி தண்ணிய குடுத்து அதுல ஒரு சிட்டிக மண்ணப்போட்டு பவுன ஒரு எழப்பு எழச்சு அந்த தண்ணீல கலந்து குடிக்க வெச்சா இழுத்துண்டு கெடக்குற உசிரு பட்டுனு போயிடுமாம். மாமி சொன்னா”

“என்னது? என்ன இது பேத்தல்”

“ஆமாண்ணா! சில ஆம்பளைங்களுக்கு மண்ணாச பொன்னாச பெண்ணாச இதுல ஏதாவது ஒரு ஆச இருந்திச்சினா, அது கெடைக்காத ஏக்கத்துல இழுத்துக்கிட்டே கெடப்பாளாம். மாமி சொன்னாப்ல செஞ்சிட்டா பட்டுனு முடிஞ்சிடுமாம்”

“அப்ப அந்த .. .. கூப்புடுவமா?” என்று கொடிகட்டிப்பறக்கும் குறிப்பிட்ட நடிகையின் பெயரைச்சொல்லிவிட்டு ‘கெக் கெக் கெக்’கென்று சிரித்தான் கணேசன்.

இருவரும் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் முதியவருக்கு நினைவு திரும்பியிருந்தது.

பிள்ளையும் பெண்ணும் பேசும் பேச்சுக்களும் சிரிப்பும் ஸ்பஷ்டமாய் காதில் விழுந்தன.

கண்களின் இரு ஓரங்களிலிருந்தும் கண்ணீர் கோடாய் இறங்கி தலையணையை நனைத்தது. மனம் வேதனையில் விம்மியது. வாய் ஏதோ முணுமுணுத்தது.

‘நாம் பெத்த பிள்ளைகளாய் இருந்தால் இப்படிப் பேச மாட்டார்களோ?’ மனம் அங்கலாய்த்தது.

இம்முறை வழக்கம்போல் அவருக்கு நினைவு தப்பவில்லை.யாரை மறக்க வேண்டுமென்று நாற்பது வருடங்களுக்கு மேலாக தவித்தாரோ, அவளே நெஞ்சு முழுதும் விஸ்வரூபம் எடுத்து நின்றாள்.

‘ஏமாத்திட்டியே இந்து!

நீ வேணும்னேவா என்ன ஏமாத்தின?

இல்ல உன் சூழ்நில அப்பிடி செய்ய வெச்சுதா?

நீ இன்னொருத்தன் மனைவி. ஒன்ன நினைக்கக் கூடாதுன்னு தா நெனைக்கிறேன். ஆனாலும் பாழும் மனசு கேக்க மாட்டேங்குது இந்து.

நீ பொண்ணு! நீ ஒருவேள வேற ஒத்தர கல்யாணம் பண்ணிக்க மறுத்து பெத்தவங்களோட போராடிருக்கலாம். உன்ன வற்புறுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சுருக்கலாம்.

வேற நீ என்னதா பண்ணுவ இந்து. ஒன்ன நா தப்பாவே நெனைக்கில இந்து. ஆனா நா ஆண். என் இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துட்டேன் இந்து.

கணேசனும் கோகிலாவும் யாரு தெரியுமா இந்து?

என்னோட நண்பன் குமாரோட புள்ளைங்க. ..குமாரும் அவன் ஒய்பும் ரெயில் விபத்துல இறந்துட்டதால அவனோட புள்ளைங்கள நாந்தா வளத்தேன் இந்து. கஷ்டப்பட்டு வளத்த புள்ளைங்க நா எப்ப சாவேன்னு காத்துண்டு இருக்காங்க.

இதுதா ஒலகமா இந்து.

இந்து ஒனக்கு ஒன்னு ஞாபகம் இருக்கா?

ஒருதடவ ஒங்கிட்ட என்னோட உயிரு ஒன்னோடது இந்து. ஒன்னோட சம்மதமில்லாத என்னோட உசிரு போகாதுன்னு சொன்னேல்ல.

இப்ப கெஞ்சிக் கேக்குறேன் இந்து.

நா சாகனும் இந்து. என் உசிரு என் ஒடம்ப விட்டுப் பிரிய சம்மதம் குடு இந்து.

நீ இன்னொருத்தர் மனைவி. ஒங்கிட்ட இப்டீல்லாம் பேசறது தப்பு. அது பாவம்னு தெரியுது இந்து.

நாம ஒருத்தர ஒத்தர் விரும்பின காலத்து அந்த இந்துகிட்டதா நா பேசுறேன். இன்னொருத்தர் மனைவி இந்துகிட்ட இல்ல. என்ன நம்பு இந்து’ அதிகமாய் சிந்தித்ததாலோ என்னவோ மனமும் உடலும் மேலும் பலவீனமாக கண்களை மூடிக்கொண்டார் முதியவர்.

காலை மணி பத்து.

காலிங் பெல்லின் சப்தம் கேட்டு சேரிலிருந்து எழுந்து சென்று கதவைத் திறந்தான் கணேசன்.

“வணக்கம் நா இந்துமதி. தன்னார்வத் தொண்டு நிறுவனத்துலேந்து வரேன்.
மிஸ்டர்.கணேசன்கிறது!”

“ஓ! நாந்தான் கணேசன். வாங்க மேடம்..வாங்க.. வாங்க.. உள்ள வாங்க..” வரவேற்றான் கணேசன்.

“உக்காருங்க மேடம்” நாற்காலியைக் காட்டினான்.

அமர்ந்தாள் இந்துமதி.

“கோகிலா!இங்க வாயேன். தொண்டு நிறுவனத்துல அப்பாவப் பாத்துகனுமின்னு பதிவு செஞ்சோமோனோ! அனுப்பிருக்காங்க”

சமையலறையிலிருந்து வந்து இந்துமதிக்கு வணக்கம் சொல்லி வரவேற்றாள் கோகிலா.

“மிஸ்டர் கணேசன் சார். நாங்க ஒருத்தரே இங்க மாசக் கணக்குல தங்க முடியாது. வாரம் ஒருத்தரா மாத்தி மாத்தி வருவோம். அதுவும் உடல்நலமில்லாதவரோட ஹெல்த் கன்டிஷனுக்கு ஏற்ப அதுவும் வாயசான நோயாளின்னா மட்டும் தான் எங்க சர்வீஸ் இருக்கும்”

“ஓகே! மேடம்”

“உடல் நலமில்லாதவர் உங்க ஃபாதரா?”

“ஆமாம் மேடம். உங்க மதர்?”

“மதர் இல்ல. காலமாயிட்டாங்க”

“உங்கப்பாவ பாக்கலாமா?”

“வாங்க மேடம்”

நாற்காலியிலிருந்து எழுந்தபடியே “மிஸ்டர் கணேசன் ஒங்கப்பா பேரு?” கேட்டார் இந்துமதி.

“ராகவ்! எங்க அப்பா பேர் ராகவ்!”

இதயம் ஒரு முறை அதிர்ந்தது. உடல் ஒருமுறை குலுங்கியது. சட்டென மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார் இந்துமதி.

ஹேண்ட்பேக்கிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்துத் திறந்து ஒருவாய் தண்ணீர் குடித்தார். படபடக்கும் நெஞ்சம் இயல்புக்கு வராமல் கூடுதலாய்ப் படபடத்தது.

‘அட! ஏன் இப்பிடி பதர்ற? ராகவ்ங்கர பேர்ல ஒன்னோட ராகவ் மட்டும்தானா இருக்காரு? ஒலகத்துல எத்தனையோ ராகவ்’ கூவும் மனதை அடக்கினாள்.

“என்னாச்சு மேடம்?” கணேசன் கேட்டான்.

“ஒன்னுமில்ல!”

“சரி! வாங்க”

கணேசன் முதலில் உள்ளே நுழைய, அவன் பின்னால் சென்ற இந்துமதி உள்ளே நுழைந்தார்.

“மேடம் அப்பா!”

கட்டிலில் நரைத்துப் போன தாடியும் மீசையுமாய் கண்மூடிப் படுத்துக் கிடந்த வயதான உருவத்தைப் பார்த்த மாத்திரத்தில் தன்னை அடக்க முடியாமல் “ராகவ்!” என்று கத்திவிட்டார் இந்துமதி.

இடம், பொருள், ஏவல் எதையும் பார்க்கவில்லை இந்துமதி.

கட்டிலருகே ஓடினார்.

‘இது! இது! ராகவ்தான். ராகவ்தான்’

“ராகவ்! ராகவ்!” அடக்கமுடியாமல் அழுகை பீரிட்டது. இதயம் நின்று துடித்தது.

“ராகவ்! கண்ணத் தொறங்க ராகவ்! நா இந்து, இந்துமதி வந்ருக்கேன் ராகவ்” ராகவின் காதருகே முகம் வைத்து “நா இந்து, ராகவ். இந்துமதி ராகவ். கண்ணத் திறந்து என்னப் பாருங்க ராகவ்”

இந்துவின் குரல் காதில் விழுந்து இதயத்தில் இறங்கி என்ன மாயாஜாலம் செய்ததோ ராகவின் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.

“ராகவ்! ராகவ்!” இந்து எத்தனைமுறை அழைத்திருப்பாள். காதலிக்கும் நாட்களில், மனதிலும் உணர்விலும் பதிந்துவிட்ட குரலல்லவா?

வருடங்கள் எத்தனை ஆனால் என்ன? ராகவின் கண்கள் அசைந்தன. உதடுகள் மெல்ல “இந்து” என்று உச்சரித்தன.

“இந்து வந்துட்டியா. நா போகனும் இந்து. நீ அனுமதி குடுத்தாதான் என் உயிர் போகும் இந்து. இது உனக்கும் தெரியும்ல! அனுமதி குடு இந்து! அனுமதி குடு ப்ளீஸ் இந்து!”

கதறினார் இந்துமதி.

“இல்ல இல்ல ராகவ்!

நான் நெஜமாவே ஒங்கள பாக்க வந்திருக்கேன்.

ஒங்க உயிர் பிரிய அனுமதி குடுக்க நா வல்ல ராகவ்.

உங்க இந்துவா இந்துமதியா வந்திருக்கேன் ராகவ்.

உங்க காதலியாவே வந்திருக்கேன் ராகவ்.

உங்கள விட்டு இனிமே பிரியவே மாட்டேன் ராகவ்!

யாரும் நம்ம இனிமே பிரிக்கவும் முடியாது ராகவ்.

கண்ண முழிச்சி என்னப் பாருங்க ராகவ்!”

சட்டென ராகவின் கைகள் அசைந்தன; கால்கள் அசைந்தன; கண்களின் இமைகள் திறந்து முகம் பாடும் இந்துவை நோக்கித் திரும்பியது; உதடுகள் நடுங்கின.

“இந்தூ! இந்தூ! நீயா? நீயா?” பேச இயலாமல் கிடந்தவர் குரல் சற்று ஓங்கி ஒலித்தது.

இளமை மறைந்து முதுமை வந்தாலும் நெஞ்சில் பதிந்த உருவம் மறந்திடுமா என்ன?

கைகள் இந்துவின் கைகளைப் பற்றத் துடித்தன.

ஆண்டவன் அவ்வளவு இரக்கமற்றவன் அல்ல. இளமையில் காதல் தோற்றாலும் முதுமையில் இணைந்த ராகவ் இந்துவின் மிச்ச வாழ்க்கை பாசமும் நேசமும் நிறைந்ததாகவே இருக்கும்.

அவர்களின் காதல் பற்றி கணேசனும் கோகிலாவும் அறிந்து கொள்வார்கள். புதிதாய்த் தாயும் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் திளைப்பார்கள்.

இனி விதிக்கு அங்கே வேலையில்லை.

உண்மைக் காதல் தோற்பதில்லை!

நேசம் மறந்திடாது நெஞ்சம்!!

(நேசம் நிறைவு)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்