சேற்றில் வழுக்கி விழுந்த இந்து எழுந்திருக்க முயன்று தோற்றுப் போனாள். செருப்பு சேற்றில் மாட்டிக் கொண்டிருந்தன. கால்களை விடுவிக்க முயன்றபோது வலது கணுக்கால் ‘விண்விண்’னென்று வலிக்க ஆரம்பித்தது. மீண்டும் கைகளை ஊன்றி எழ முயன்றபோது, அருகிலிருந்த பூவரசு மரத்தடியில் வந்து நின்றான் ராகவ்.
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல், அவளின் பொன்னிற மேனியில் ‘ப்ரௌன்’ கலர் சேறு ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு மேலும் அவள் நிறத்தைப் ‘பளீரெ’ன்று அதிகப்படுத்திக் காட்டியது.
மேகம் மூடியும் மூடாமலும் கொஞ்சமாய் வெளியே தெரியும் நிலவைப் போல் சேறெனும் மூடிய மேகத்துக்குள்ளிருந்து கவிதையாய்த் தெரிந்தாள் இந்து.
இந்துவின் அருகே இருந்த பூவரசு மரத்தடியில் வந்து நின்ற ராகவ் அவளுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டுமென நினைத்தான்.
‘இவங்கள எப்டி அழைப்பது? மிஸ் என்றா மேடம் என்றா?’ என்று தயங்கியவனின் பார்வையில் இந்துவின் கழுத்தில் கிடந்த டாலரோடு கூடிய ஒற்றைச் செயின் விழ அவள் திருமணமாகாத பெண் என்பதை புரிந்துகொண்டான்.
என்ன காரணமோ மனம் கொஞ்சம் சந்தோஷத்தில் பொங்கியது.
கைகளை ஊன்றி மெல்ல எழுந்து அமர்ந்தாள் இந்து. தடுக்கியோ வழுக்கியோ விழும் மனிதர்கள் தான் விழுந்ததை யாரும் பார்த்திருப்பார்களா என்று சுற்றும் முற்றும் பார்ப்பது இயல்பு.
இந்துவும் ‘தான் விழுந்ததை யாரும் பார்த்திருப்பார்களோ?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. ‘நல்லவேளை ஈ, காக்கை இல்லை’ என மனசு சந்தோஷப்பட கழுத்து இடப்புறம் திரும்பியது. திரும்பிய இந்துவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
இந்து சேற்றில் அமர்ந்திருந்த இடத்திற்குப் பத்தடி தூரத்தில், பாதையின் இடப்புற ஓரத்தில் நின்றிருந்த பூவரசு மரத்தின் அடியில் இவளையே பார்த்தபடி நின்றிருந்த ராகவ் மீது இந்துவின் பார்வை விழுந்தபோது அசிங்கமாகிப் போனது.
‘ஐயோ! யாரிவரு? என்னையே பாத்துகிட்ருக்காரு. நா வழுக்கி விழுந்தத பாத்ருப்பாரோ?அட கண்ராவியே!’ வெட்கமும் வேதனையும் மனதை வாட்ட மீண்டும் கையை ஊன்றி எழுந்திருக்க முயல சேற்றில் சிக்கியிருந்த செருப்பிலிருந்து வலிக்கும் கநுக்காலை வெளியே எடுக்க முடியாமல் தவித்தாள். “ம்..ம்..அம்மா..” என்று முனகினாள் இந்து.
‘இனிமேலும் சும்மா இருக்க வேண்டாம்’ என நினைத்த ராகவ் இந்துவுக்கு மிக அருகில் சென்றான். பேச தயக்கமாக இருந்தது. ஆனாலும் தயக்கத்தை வலுக்கட்டாயமாய் விரட்டிவிட்டு “..மிஸ்..மிஸ்..மேடம்..” என்று தடுமாறினான்.
“மிஸ்! இங்க பாருங்க. ஆபத்துக்குப் பாவமில்ல. இதோ எங்கையப் புடிச்சுண்டு மெதுவா எழுந்திருங்க மிஸ்.” இந்துவை நோக்கித் தன் வலது கையை நீட்டினான்.
முறைத்தாள் இந்து.
“யார் நீங்க? நான் ஒங்க உதவிய கேட்டேனா? கண்டவன் கையப் புடிச்சுகிட்டு எழுந்திருக்க நா ஒன்னும் பயங்கொள்ளியோ, எழுந்திருக்க இயலாதவளோ இல்ல. பொண்ணுங்கன்னா, ஆவூன்னா வந்துடுவீங்களே. ஒதவறேன் அதுயிதுன்னு சினிமா ஹீரோ மாதிரி” படபடவென்று பொரிந்து தள்ளினாள் இந்து.
சட்டெனத் தான் செய்த தவறு புரிந்தது ராகவுக்கு.
“அதானே! முன்பின் அறிமுகமில்லாத ஆம்பள நா. எங்கையப் புடிச்சிண்டு எழுந்திருக்கச் சொன்னா எந்தப் பொண்ணுதா எழுந்திருப்பா. தப்புதா! தப்புதா!” பின்னந்தலையில் தட்டிக் கொண்டான் ராகவ்.
“ஸாரி! ஸாரி! எங்கைய புடிச்சுண்டு எழுந்திருக்கச் சொன்னது தப்புதா. யோசிக்காம ஒரு அவசரத்துல சொல்லிட்டேன். ஆனா நா மோசமானவன்லாம் இல்ல. பொண்ணுங்கரத்துக்காக ஒதவ வரல. இதுவே ஒரு ஆம்பளயா இருந்தாலும் செய்வேன்.
சரி. ஒங்களால எழுந்துக்க முடியலேன்னா தெருவுக்குப் போயி பொம்பளைங்க யாரையாவது கூப்பிடவா” கேட்டுக் கொண்டே சேற்றில் குப்புறக் கிடந்த புத்தகம், நோட்டு இரண்டையும் எடுத்து பேண்ட் பாக்கெட்டிலிருந்து கர்சீஃப்பை எடுத்து சேற்றைத் துடைத்தான்.
பால்பாயிண்ட் பேனாவால் ‘ஆர்.இந்துமதி.பி.யூ.சி. மகளிர் கலைக் கல்லூரி, கும்பகோணம் என்று நோட்டில் எழுதப்பட்டிருந்த குண்டு குண்டான அழகிய எழுத்துக்கள் அவன் மனதில் ‘பச்’சென்று ஒட்டிக் கொண்டன.
‘இந்துமதி’ என்று மனது ஒருமுறை சொல்லிப் பார்த்து மகிழ்ந்தது.
‘ம்! நீ மட்டும்தான் சொல்லுவியா? நானும் சொல்லிப் பாப்பேன்ல’ மனசுக்குப் போட்டியாய் அவன் உதடுகளும் சப்தமின்றி இந்துமதி என உச்சரித்தது. நெஞ்சினில் கற்கண்டின் தித்திப்பு.
“ம்கூம்! நிச்சயமாய் யார் உதவியுமின்றித் தன்னால் எழுந்திருக்க முடியாதென்பது புரிந்தது போனது இந்துவுக்கு.
“மிஸ்! சொல்லுங்க. யாரையாவது கூட்டிண்டு வரவா?” மீண்டும் ராகவ் கேட்டபோது முறைப்பு காட்டாமல் மௌனமானாள் இந்து.
தெருவுக்குள் நுழைந்தான் ராகவ்.
அந்த ஓட்டு வீட்டின் திண்ணையில் நடுத்தர வயதுடைய மூன்று பெண்களும், சிறுபையன் ஒருவனும், கிழவர் ஒருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அந்த வீட்டின் முன்பு போய் நின்றான் ராகவ்.
ராகவின் ‘டிப்டாப்’பான டிரஸ்ஸையும் பர்சனாலிட்டியையும் பார்த்த பெண்கள் எழுந்து நின்றனர்.
ஒருபெண் “அடியே! ஆபீஸரு போலருக்குடீ. என்னாத்துக்கு வந்துருக்காரு? தெரியிலியே!” என்றதும்,
“ஆமாண்டீ ஒனக்கு லோனு கொடுக்க வந்திருக்காரு” என்று இன்னொரு பெண் சொல்லிவிட்டுச் சிரிக்க மற்றவர்களும் சிரித்தனர்.
பெண்களை அடக்கினார் கிழவர்.
பெண்களின் சிரிப்பைக் கண்டுகொள்ளாத ராகவ், “ஐயா! நான் விவசாய இலாகாவ சேர்ந்தவன். இந்த ஊரு சமுதாய கூடத்துல நடக்கப் போற பயிற்சி வகுப்புல கலந்து கொள்றவங்களுக்கு பயிற்சி கொடுக்க வந்தேன்.
ஒத்தயடிப் பாதேல வர்ரப்ப சேத்துல ஒருபொண்ணு வழுக்கி விழுந்ததப் பாத்தேன். அவங்களால எழுந்திருக்க முடியலயோன்னு தோணுது. அதான் யாருகிட்டயாவது சொல்லலாம்னு வந்தேன்” என்று பதைபதைப்போடு சொன்னான் அங்கிருந்த கிழவனிடம்.
தான் அந்தப் பெண்ணுக்கு உதவ முற்பட்டதையும், அந்தப்பெண் மறுத்ததையும் பெண்ணின் நோட்டுப் புத்தகத்தின் மூலம் அந்தப்பெண்ணின் பெயர் ‘இந்துமதி’ என்று அறிந்ததையும் சொல்லாமல் மறைத்தான்.
“என்னாது? பொண்ணு சேத்துல வழுக்கி வுழுந்து கெடக்கா? யாருடீ அந்தப் பொண்ணு? வாங்கடி போவலாம்” ஓடினார்கள் பெண்கள்.
விஷயமறிந்து அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்கள் இந்துவின் தாய் சுந்தரியும் அப்பத்தாவும்.
இரண்டு பெண்கள் சேர்ந்து இந்துவைத் தூக்கி நிறுத்த, புடவையிலும் உடலிலும் சேறு அப்பியிருந்தது. ஓரடிகூட எடுத்து வைக்க முடியாமல் வலது கணுக்காலிலிருந்து பாதம்வரை ‘புஸ்’ஸென்று வீங்கிப் போயிருந்தது.
ராகவ் துடைத்து வைத்திருந்த புத்தகத்தையும் நோட்டையும் திறந்து கிடந்த டிஃபன் பாக்ஸையும் அப்பத்தா எடுத்துக் கொள்ள இரு பெண்கள் கைத்தாங்கலாய்ப் பிடித்துக் கொள்ள கால் வலியால் “அய்யோ அம்மா” என்றபடி நடக்கத் தொடங்கினாள் இந்து.
வண்டியருகே நின்றபடி இந்துவையே பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ்.
கருநாகம்போல் இடுப்புவரைத் தொங்கிக் கொண்டிருந்த பின்னல் முதுகில் இடமும் வலமுமாய் அசைய அசைய நடந்து செல்லும் இந்துவை வைத்த விழி நகர்த்தாமல் பார்த்த பார்வை ராகவின் மனதை “யப்பா! இந்தப் பொண்ணுதான் எத்தன அழகு?” என்று எண்ண வைத்தது.
இந்துவை அழைத்துச் செல்ல வந்தவர்கள் யாரும் இவனிடம் பேசவுமில்லை. நன்றி சொல்லவுமில்லை.
‘இன்னும் இரண்டடி வைத்தால் திருப்பத்தில் திரும்பி மறைந்து விடுவாள் அந்தப் பெண் இந்து’ என்று நினைக்கும் போதே தவிப்பாய் இருந்தது ராகவுக்கு.
கண்களை இமைத்தால் இமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் இந்து மறைந்து விடுவாளோ என்ற தவிப்போடு கண்களைக்கூட இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்த ராகவை நொடி நேரத்தில் மெல்லத் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் இந்து.
அடுத்த நொடி ஒற்றையடிப் பாதையிலிருந்து திரும்பி மறைந்து போனாள்.
ஒரு நொடி, ஒரே நொடி இந்து தன்னைத் திரும்பிப் பார்த்ததை கவனித்த ராகவுக்கு ‘குபீரெ’ன்று ஏதோ ஓர் உணர்வு உடலெங்கும் பரவி ஜலதரங்கம் வாசித்தது.
‘டேய் ராகவ்! என்னப்பா? ரொம்ப பண்ற? என்னமோ மொத மொதலா இப்பதா அழகான பொண்ண பாக்கறாப்ல! எத்தன பொண்ணுங்க? அதான் அந்த சாவித்ரி, சரஸ்வதி, சுந்தராம்பா, ருக்குன்னு வலிய வந்து ப்ரபோஸ் பண்ணாங்க. அவங்களுக்கெல்லாம் ‘நோ’ சொன்ன. இப்ப இந்தப் பொண்ண மொத மொதல்ல பாத்த ஒடனேயே உருகி வழியற’ பொல்லாத மனசு கேலியும் கிண்டலும் செய்ய ஆரம்பித்தது.
‘ஆரம்பிச்சிட்டியா? சும்மா இரு. அப்டீல்லாம் ஒன்னுமில்ல. அவசரக்குடுக்க! நீயா எதையும் அர்த்தம் பண்ணிக்காத’ மனதை அடக்கிச் சமாதானம் செய்ய
முயன்றாலும் மனதிடம் ‘தான்’ தோற்றுப் போவதை உணர்ந்து கொண்டான் ராகவ்.
சேறு அப்பிக்கிடந்த வண்டியை ஸ்டார்ட் செய்தபோது அவனின் பெல்பாட்டம் பேண்ட்டின் கால்பகுதியில் பெரும்பகுதி சேறால் கறைபட்டிருந்தது கண்ணில் பட்டது.
‘ம்கூம்! இப்டியெல்லாம் போய் க்ளாஸ் எடுக்க முடியாது. ஆபீஸில் சொல்லி இன்னொரு நாள் ஏற்பாடு செய்யலாம்’ என்று நினைத்தவன் வண்டியை யூடர்ன் எடுத்துத் திருப்பி மெயின் ரோடுக்கு வந்து ‘வீட்டுக்குச் சென்று வேறு பேண்ட்டை மாற்றிக் கொண்டு அலுவலகம் செல்லலாம்’ என்ற நினைப்போடு வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.
ராஜ்தூத் அவனோடு அவனின் இதயத் தடாகத்தில் விவரிக்கவொன்னா ஏதோ ஒருஉணர்வை சிறுசிறு அலைகளாக்கி மோதச் செய்யும் இந்துவின் நினைப்பையும் சேர்த்துச் சுமந்து கொண்டு சீறிப் பாய்ந்து செல்ல ஆரம்பித்தது.
(நேசம் வளரும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்