நேச நாயனார் சிவனடியார்களுக்கு தன்னால் தயாரிக்கப்பட்ட ஆடைகள், கீள், கோவணம் முதலியவற்றை தானமாக வழங்கிய நெசவாளர்.
இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
பழம்பெரும்பதியான காம்பீலியில் நெசவாளர் குடியில் அவதரித்தவர் நேசனார். இவர் நேசனார், நேசன் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். இவரின் பூர்வீகம் கூறைநாடு ஆகும்.
காம்பீலி என்பது இன்றைய கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்துள்ளது. கூறைநாடு என்பது இன்றைய மயிலாடுதுறைப் பகுதியைச் சார்ந்தது.
நேசனாருக்கு சிவனாரின் மீதும் அவர்தம் அடியவர் மீதும் இயற்கையிலேயே பேரன்பு இருந்தது.
ஆதலால் அவர் தம்முடைய மனதில் எப்போதும் சிவனாரை நினைத்தும், வாயால் திருவைந்தெழுத்தை ஓதியும், தம்முடைய உடலால் திருத்தொண்டுகள் செய்தும் இருந்தார்.
நெசவுத் தொழிலில் வல்லவரான நேசனார் தாம் தயார் செய்த ஆடைகள், கீள் மற்றும் கோவணத்தை சிவனடியார்களுக்கு தானமாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஆடை தானம் வழங்கிய நேசனார் இறுதியில் சிவனாரின் திருவடிகளை அடைந்து நீங்கா இன்பம் பெற்றார்.
நேச நாயனார் சிவனடியார்கள் மீதிருந்த அன்பால் தான் நெய்த ஆடைகள், கீள், கோவணம் ஆகியவற்றைத் தானமாக தந்து 63 நாயன்மார்களுள் ஒருவராக திகழும் பாக்கியம் பெற்றார்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதோடு தொழிலின் ஒரு பகுதியாகத் தர்மம் செய்து வந்தால் தனியாகத் தவம் செய்யத் தேவையில்லை. இறைவன் இன்முகத்தோடு நம்மை ஏற்றுக் கொள்வார்.
நேசனார் குருபூஜை பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
நேச நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘நேசனுக்கும் அடியேன்‘ என்று போற்றுகிறார்.