நேரடிப் பலன்

அலுவலகம் புறப்படத் தயாரானவனுக்கு மதியத்துக்கான லஞ்ச் பாக்சை கொண்டு வந்து மகன் பாலாஜியிடம் நீட்டினாள் தாயார் அமிர்தம். அவன் வேறு யாருடனோ அலைபேசியில் பேசியபடி இருந்தான்.

“சரியிங்க! உங்க அனாதை இல்லத்தோட ஜிபே நம்பர் சொல்லுங்க. நான் ஜிபே பண்ணிடுறேன்” பாலாஜி நம்பரை குறித்துக்கொண்டு ஜிபே மூலமாக ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்தான்.

“டேய்! அநாதை ஆசிரமம், முதியோர் இல்லத்துக்கு பண உதவி செய்றது. தெரியாதவர்களுக்கு பணம் கொடுக்கிறது இது நல்ல விஷயம் தான். ஆனால், இதுக்குப் பதிலா நீ நேருல கஷ்டப்படுறவனுக்கு பணம் கொடுத்தாலோ, வேற ஏதாவது உதவி செஞ்சாலோ, உனக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்” அமிர்தம் பாலாஜியிடம் சொன்னாள்,

“எப்படி? அநாதை ஆசிரமம், முதியோர் இல்லத்துக்கு பணம் ஜிபேல அனுப்புறேன். அவங்க அதுக்கு டொனேஷன் ரசீது தராங்க. ஏமாத்துறவங்களா இருந்தா தானம் செஞ்சதுக்கு ரசீது தரமாட்டாங்க!” பாலாஜி உண்மையை அம்மாவிடம் சொன்னான்.

“அப்படி கிடையாது. ஏமாத்துலாம்ன்னு நினைச்சா எப்பிடி வேணும்னாலும் ஏமாத்தலாம்”

“எப்படி உறுதியா சொல்ற?”

“அநாதைக் குழந்தைகள், முதியோருக்கு உதவி செய்றேன் என்கிற பேருல பாதி பேர் பணத்தை அவங்களே அமுக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவாங்க. அநாதை
குழந்தைகள், முதியோருக்கு உதவி செய்றாங்கன்னு உறுதியா சொல்ல முடியாது.

இப்போ அநாதை ஆசிரமம், முதியோர் இல்லம் நடத்துறது வியாபாரம் ஆகிடிச்சி. நீ உதவி பண்ணுறதா இருந்தா நேர்ல பார்த்து உன் மனசுக்கு சரிதான்னு பட்டுச்சின்னா உதவி பண்ணு ” பாலாஜியிடம் நாட்டில் நடப்பதைக் கூறினாள் அமிர்தம்.

“சரி. அப்பிடி புண்ணியம் செஞ்சா அதுக்கான பலன் எப்படி கிடைக்கும்?”
பாலாஜி தனது சந்தேகத்தை அம்மாவிடம் கேட்டான்.

“நல்ல கேள்வி. தெருவோரம், கோவில் வாசலில் ஊனமுற்றோர், பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருப்பாங்க. அவங்களுக்கு சாப்பாடு, தண்ணீர் பாட்டில் வாங்கி கொடு. அரசு மருத்துவமனையில கஷ்டப்படுறவங்க நிறைய பேர் இருப்பாங்க.

அவங்களுக்கு சோப்பு, டவல், துணிமணி, சாப்பாடு, தண்ணீர் பாட்டில் வாங்கி கொடு. முடிஞ்சா இவங்களை எம்.எல்.ஏ, கவுன்சிலர் கிட்ட கூட்டிட்டு போய் அறிமுகப்படுத்தி ஏதாவது சின்ன வேலையில சேர்த்து விடப் பாரு” அமிர்தம் பாலாஜிக்கு அறிவுரை சொன்னாள்.

அம்மாவின் அறிவுரை அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது.

”சரிம்மா! இனிமே அப்பிடியே பண்றேன்” சொல்லிவிட்டு, அம்மா தந்த மதிய டிபன்பாக்ஸை எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் நோக்கி விரைந்தான்.

அன்று மாலை தெருவோரம், கோவில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களிடம் வந்தான்.

“ஐயா, சாப்பிட்டு மூணு நாள் ஆகுது. ஒரே பசி, தாகமா இருக்கு. சாப்பாட்டுக்கு உதவி பண்ணுங்க ஐயா”

பிச்சைக்காரர்கள் கையேந்தியபடியே கேட்டார்கள். அவர்களுக்கு பாலாஜி சாப்பாடு, தண்ணீர் பாட்டில், மருத்துவச் செலவுக்கு தேவையான பணம் கொடுத்து உதவினான்.

“நீயும், உன் குடும்பமும் நல்லா இருக்கணும்” பாலாஜியை அவர்கள் மனதார வாழ்த்தினார்கள்.

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குடும்பத்தினருக்கு சோப்பு, டவல், தண்ணீர் பாட்டில், சாப்பாடு வாங்கி கொடுத்து அவர்களின் வறுமையை ஒழிக்க சிறிய வேலை ஏதாவது வாங்கி தர முயற்சி செய்வதாக கூறினான்.

“சாமி! எங்கிருந்தோ தெய்வம் மாதிரி வந்து உதவி செய்றீங்க. நீங்க நல்லா இருக்கணும். கடவுள் உங்களையும், உங்க குடும்பத்தையும் நல்லா வெச்சிப் பாரு” பாலாஜியை வாழ்த்தினார்கள்.

தன் அனுபவத்தை வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னான் பாலாஜி.

“இப்போ வித்தியாசம் தெரியுதா? எல்லாரும் வாழ்த்துறாங்களா? அதனால தான் உன்னை நேருல கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்ய சொன்னேன்”அமிர்தம் சிலாகித்தபடி பாலாஜியிடம் சொன்னாள்.

ஒரு மாதம் கழிந்திருந்தது. அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பாலாஜியிடம் அன்று தபாலில் வந்த கடிதத்தை நீட்டினாள் அமிர்தம்.

பாலாஜி கடித உறையைப் பிரித்துப் படித்து உற்சாகத்தில் குதித்தான்.

“மத்தவங்களுக்கு நேரில புண்ணியம் செஞ்சா அதுக்கான பலன் எப்படி கிடைக்கும்னு கேட்டியே, இப்பிடித்தாண்டா கிடைக்கும்” சொல்லி விட்டு புன்னகைத்த அம்மா அமிர்தத்தை கட்டி அணைத்தான் பாலாஜி.

எம்.மனோஜ் குமார்

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்