இறைவனுக்கு நேரம் ஒதுக்குங்கள். பகவானை வழிபடாத நாளெல்லாம் பட்டினி கிடந்த நாளாகும் என்றார் ஒரு பெரியவர். எவ்வளவுதான் வயிறு நிறைய சாப்பிட்டாலும் பகவானை நினைக்கவில்லை என்றால் அவன் பட்டினி கிடந்தவனுக்கு ஒப்பாவான்.
மனிதன் தன்னுடைய 20 ஆண்டு காலத்தை ஓடுவதும், ஆடுவதுமாக பொறுப்பின்றி கடந்து விடுகிறான். அடுத்து 20 ஆண்டுகளுக்கு குடும்பம், பிள்ளை குட்டி என்று பாடுபடுகிறான், பணம், பொருள் சேர்க்கிறான். அதன் பிறகு தான் தன்னைப் பற்றி நினைக்கிறான்.
அடடா! நமக்கு வயதாகி விட்டதே! இதுவரையில் ஆத்ம பலத்துக்கு என்ன செய்தோம்! ஒரு கோவிலுக்குப் போனோமா! காசிக்கோ, ராமேஸ்வரத்துக்கோ போனோமா! வீடு வீடென்றே அலைந்து நாட்களைக் கழித்து விட்டோமே! இனி, உடம்பிலும் தெம்பு இல்லையே! தனியே துணையில்லாமல் ஒரு இடத்துக்குப் போய் வரமுடியுமா? என்றெல்லாம் ஏங்குவார். இது காலம் கடந்த ஞானோதயம்.
இன்னும் கொஞ்சம் வயதானால் இன்னும் உபத்ரவம் தான்! கண் பார்வை மங்கி விடும்: காது மந்தமாகி விடும் எழுந்து நடக்க முடியாது. இருமலோ, அஸ்துமாவோ, சர்க்கரை வியாதியோ ஏதோ ஒன்று இவனை ஆட்கொண்டு விடும். இவனை சதா காலமும் யார் கவனித்து பணிவிடை செய்து கொண்டு இருப்பர்!
சில இடங்களில் இப்படிப்பட்ட வயோதிகரை ஒரு மனிதராகக் கூட மதிக்க மாட்டார்கள். இவர் பாடுபட்டு உழைத்தது, பணம், பொருள் சம்பாதித்து வைத்தது எல்லாவற்றையும் மறந்து விடுவர்: இவரை ஒரு சுமையாகவே நினைப்பர்.
சிலர் இவரது ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து ஆயுள் பலம் எப்படி இருக்கிறது என்று கேட்பர் இப்படிப்பட்ட வாழ்வு வேண்டாம் என்றனர் பெரியோர்.
ஒரு சுலோகம் உண்டு. அதன் பொருள் பரமேஸ்வரா! எனக்கு துன்பமில்லாத மரணம் வேண்டும்! பிறருக்கு கை கட்டி சேவகம் செய்யாத வாழ்வு வேண்டும்: படுத்த படுக்கையில் நீண்ட காலம் இல்லாமல் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், சிரமமில்லாத மரணத்தைக் கொடு!
எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கிறது? அதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! வாழ்நாளில் ஒரு பாதியை தெய்வ வழிபாட்டுக்கு ஒதுக்கி விட வேண்டும். சினிமா பார்க்கவும், சீட்டாடவும் நேரம் ஒதுக்கவில்லையா? உலகில் காண்பதும், அனுபவிப்பதும் நிரந்தரமானதல்ல; மாயை தான்! இதை நாம் உணருங்கள். இறைவனுக்கு நேரம் ஒதுக்குங்கள்.