நேரம் நிர்வாகம்

உலகத்தில் அனைவருக்கும் பொதுவாக ஒன்று இருக்குமென்றால் அது நேரம் தான்.

அமெரிக்க அதிபருக்கு இருக்கும் அதே 24மணி நேரம் தான் உங்களுக்கும் இருக்கின்றது. கல்வி, செல்வம் ஆகியவற்றில் மனிதர்களுக்கிடையே வித்தியாசம் இருந்தாலும் கிடைக்கும் நேரத்தில் வித்தியாசம் இல்லை.

உங்கள் நேரத்தை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றியடையலாம். முதலில் உங்கள் நேரத்தை வீணடிப்பவை எவை என்று கண்டு கொண்டு சீர் செய்ய வேண்டும்.

சரியாகத் திட்டமிடாமல் வேலை செய்வது, எந்த வேலையையும் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பது, பிறரிடம் எந்த வேலையையும் பகிர்ந்து கொடுக்காமல் தானே செய்வது எல்லாம் உங்கள் நேரத்தை வீணாக்கும். அவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

திட்டமிட்டு வேலை செய்வது, எதையும் எடுத்த இடத்தில் வைப்பது, தினசரி கடமைகளை முறையாக செய்வது என்பது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். ஒருவர் உங்களிடம் வந்து ஒரு வேலையைச் செய்யச் சொன்னால் உங்கள் வேலைப் பளுவினால் உங்களால் அதைச் செய்ய முடியாது என்றால் நாசூக்காக முடியாது என்று சொல்லப் பழகுங்கள். அது உங்கள் நேரத்தையும் மன உளைச்சலையும் மிச்சமாக்கும்.

உங்களுக்கு இருக்கும் வேலைகளை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து செய்யப் பழகுங்கள். அதிக முக்கியத்துவம் வாய்ந்தவற்றை முதலிலும் மற்றவற்றைப் பிறகும் செய்யுங்கள்.

தினமும் காலையில் 10 அல்லது 15 நிமிடங்கள் திட்டமிடுவதற்கென்றே ஒதுக்குங்கள். என்னென்ன வேலைகள் எப்போது யாரால் செய்யப்பட வேண்டும் எனக்குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த திட்டத்தைச் செயல்படுத்துங்கள்.

இந்த முறை உங்களுக்கு பலனளிக்கின்றதா எனப் பாருங்கள். இதைத் தொடர்ந்து மெருகேற்றுங்கள். இதை வாரம் மாதம் எனத் தொடருங்கள். இது உங்களுடைய பழக்கமாக மாறும். உங்கள் நேரம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

 

One Reply to “நேரம் நிர்வாகம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.