நேர் எதிர்த் தண்டால் செய்வது எப்படி?

நேர் எதிர்த் தண்டால் செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

பெயர் விளக்கம்

பொதுவாக, நேர்த் தண்டால் முறையில் இரு கைகளையும் ஊன்றி, கால்களைப் பின்புறமாக நீட்டி, பின்னர், தரைநோக்கி இணையாக நேர்க் கோட்டளவில் உடலைக் கீழ்புறமாகத் தள்ளி, பிறகு முதல் நிலைக்கு மேலுயர்ந்து வருவதை நாம் அறிவோம்.

இந்தத் தண்டால் முறையில், நேர்த் தண்டால் முறையில் முதலில் முழங்கால்களைத் தரையில் வைத்து உட்கார்ந்து, பிறகு பிட்டத்தை மேலே உயர்த்தியும் கைகளை விறைப்பாக நிமிர்த்தியும், அங்கிருந்து கீழ்ப்புறமாகக் குனிந்தும், பிறகு உடலை வில்லாக வளைத்தும் நேர் எதிரான முறையில் தண்டால் செய்யப்படுவதால், இதற்கு நேர் எதிர்த் தண்டால் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

செய்முறை

முதல் நிலை :  கைகள் இரண்டையும் தோள்களின் அளவிற்கு அகலமாக வைத்து, கால்களையும் இயல்பான தூரம் இருப்பதுபோல பிரித்து, முதுகுப்புறத்தை சமப்புறமாக அமைந்திருப்பது போல வைத்து முதலில் நிற்கவும்.

இரண்டாம் நிலை :  தலையையும் நெஞ்சுப் பகுதியையும் ஊன்றியுள்ள கைகளிருக்கும் உட்புறமாகக் கொண்டுவந்து தலை தரையைப் பார்த்திருப்பது போன்ற நிலையில் வைத்திருக்கவும். முழங்கால்கள் விறைப்பாக இருப்பதுபோல ஊன்றியிருப்பதைக் கவனிக்கவும்.

மூன்றாம் நிலை : பிறகு, தலையை மேற்புறமாக உயர்த்தி, உடலை வில்போல வளைத்துச் செய்ய வேண்டும். இப்பொழுது உடலின் எடை கைகளிலும், முன் பாதங்களிலுமே இருப்பதைக் காணலாம்.

பின்னர், இரண்டாம் நிலைக்கு உடலைக் கொண்டு வந்து, அதன் பின் முதல் நிலைக்கு வரவேண்டும்.

இந்தத் தண்டாலில், கழுத்து வளைவதையும், நிமிர்ந்து விடுவதையும் கவனத்துடன் செய்திடல் வேண்டும்.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

 

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.