நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு, உடை, உறைவிடம்.

இவற்றை தட்பவெப்ப நிலைக்கேற்ப அழகாகக் கையாண்டு பராம்பரிய முறைகளின் வாயிலாக அடுத்தடுத்த சந்ததிகளுக்குப் பயணப்படுத்திய சிறப்பு வாய்ந்த பராம்பரியம் தமிழருக்கு உரியது.

‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி’ எனும் புறப்பொருள் வெண்பா மாலையிலிருந்து தமிழர்களின் தொன்மையின் சிறப்பை உணரலாம். பழமை வாய்ந்த இனம் தமிழினம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தமிழர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் உலகளவில் சிறப்பிற்குரியது. நம் அடுக்களையிலுள்ள அஞ்சறைப் பெட்டி ஒருமருத்துவரின் முதலுதவிக்குச் சமமானது.

எந்த வகை நோயானாலும் அதற்கு மருந்து அஞ்சறைப் பெட்டிக்குள்ளேயே இருக்கும்.

இது நம் முன்னோர்களின் வாயிலாக நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.

மண்பானை சமையல், ஆவியில் வேக வைத்த தமிழர்களின் பராம்பரிய உணவுகளான இட்லி, கொழுக்கட்டை போன்றவைகள் உலக பிரசித்தம்.

‘உணவும் மருந்தும் ஒன்றே!’ என்ற நிலைப்பாட்டிற்கேற்ப நம் பராம்பரிய உணவுப் பழக்கங்களை உற்று நோக்கினால் அதன் பயன்கள் நம்மை வியப்படையச் செய்யும்.

வெந்தயக்களி, உளுந்தங்களி போன்றவற்றுடன் வெல்லம் சேர்த்து உண்ணுதல் எவ்வளவு சுவை மிகுந்தது; ஆரோக்கியமானது என்பது அதை ருசித்தவர்களுக்கே புலப்படும்.

அந்தந்த பருவநிலைக்கேற்ப நம் ஊரிலேயே விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறுதானியங்கள், முளை கட்டிய பயிறு வகைகள், வெல்லம், கருப்பட்டி போன்றவைகள் உடலுக்கு செய்யும் நன்மைகள் அதிகம்.

சுத்தமான காற்று மருந்துக்குச் சமமாகும் என்பதில் தமிழர்கள் மிகவும் கவனமாக இருந்தனர்.

வீட்டின் முன்புறம் வேப்பமரத்தையும் முற்றத்திலேயே துளசியையும் வளர்த்தனர்.

விழாக்காலங்களின்போது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்தினர். ‘சூரியன் புகா இடத்தில் வைத்தியன் புகுவான்’ என்பதிற்கேற்ப வெயில்படுமாறு வீட்டின் நடுவே முற்றம் அமைந்திருக்கும்

வெளியே எங்கு சென்று திரும்பினாலும் முற்றத்தில் கை, கால்களை கழுவிய பிறகே வீட்டிற்குள் அனுமதிப்பார்கள்.

தினமும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்தி அதிகாலையிலும் மாலையிலும் அரிசிமாவால் கோலமிட்டு எறும்பு போன்ற சிறுஉயிர்களுக்கும் உணவளித்தனர்.

இப்படியெல்லாம் வீட்டைப் பராமரிப்பதன் மூலம் தீயசக்திகளும் நோய்களும் வீட்டைத் தாக்காது என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கால்களில் சக்கரம் கட்டி ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் அனைத்திலும் புதுமை. மாற்றங்கள் என்பது நவீன காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போய் உள்ளது.

பாராம்பரியத்தின் அடிப்படை சிறப்புகளாகக் கருதப்படும் உணவுப்பழக்கம், விருந்தோம்பல், அறநெறி, சுற்றுப்புறத் தூய்மை, பெரியோர்களை மதித்தல் போன்றவற்றைக் காப்பது மட்டுமின்றி, கடைப்பிடிக்கவும் செய்ய வேண்டும்.

இதனால் மனஉளைச்சல்களுக்கும், நோய்களுக்கும் ஆளாகாமல் ஆரோக்கிய அறநெறி வாழ்விற்குள் நம்மைப் பின்பற்றி நம் அடுத்த தலைமுறையினரும் அடியெடுத்து வைப்பார்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கிணங்க தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்தவர்கள் நமது முன்னோர்கள்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தங்களது வேலைகளைத் துவக்கி, இரவு 8 மணிக்கு தூங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

அதுபோலவே காலையில் எழுந்து பல் துலக்கிய உடன் நீராகரத்தை அருந்திய பின்னர் 8 முதல் 9 மணிக்குள் காலை உணவை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

மதிய உணவை நண்பகல் 12 முதல் 1 மணிக்குளும், இரவு உணவை வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன்னரே உண்ணும் அற்புதமான வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

அதுவே அவர்களின் உடலை ஆரோக்கியத்துடன் தங்கள் உடலைப் பேணி காத்து வந்தனர்.

ஆனால் இன்று நாம் நம்முடைய பாராம்பரிய பழக்கத்திலிருந்து மிகமிக அதிகமான தூரம் வெளியே வந்துவிட்டோம்.

இதற்கு காரணம் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போன அலைபேசி என்றால் அது மிகையாகாது.

இன்றைக்கு பெரும்பாலான மக்கள் அலைபேசிக்கு அடிமையாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் பெரும்பாலானவர்கள் இன்று பகல் உணவை உண்ணாமல் தவிர்த்து விடுகின்றனர்.

பகல் உணவைத் தவிர்ப்பது உடலுக்கு மிகுந்த கேடை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால் நமது மக்கள் 90 சதவீதம் பேர் காலை உணவை தவிர்த்துவிட்டு காலைக்கும் சேர்த்து மதிய உணவை உண்கின்றனர்.

அலைபேசியில் நேரத்தைச் செலவழிப்பதால் இரவு உணவை 10 மணிக்கு மேல் உண்ணும் வழக்கத்தைத் தான் பெரும்பாலானவர்கள் கொண்டுள்ளனர்.

பொதுவாக தூக்கத்திற்கு செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னர் இரவு உணவை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியும் நம்மில் பலர் அதைக் கடைப்பிடிப்பதில்லை.

எனவே புதுப்புது நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நாம் நமது பாராம்பரிய பழக்க வழக்கத்திற்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதில் நாம் அதிகம் கவனம் வைக்க வேண்டும்.

பொதுவாக சாலை ஓரங்களில் புற்றீசல்களாக முளைத்திருக்கும் துரித உணவுக்கடைகளில் உள்ள உணவுகளை வாங்கி உண்பதால்தான் நம்மைப் புதிய புதிய நோய்கள் நம்மைத் தாக்குகின்றன.

பராம்பரிய வாழ்க்கை முறைக்கு நம்மை மாற்றிக் கொண்டு நமது உடலுக்குத் தேவையான உணவுகளை ‘உணவே மருந்து’ ‘மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் உண்டு நோயில்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

Comments

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!” மீது ஒரு மறுமொழி

  1. Premalatha. M

    Good article

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.