நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய் என்ற பாடல் கோதை நாச்சியார் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பத்தாவது பாசுரம் ஆகும்.
மார்கழி நோன்பினை நோற்பதால் நாராயணனின் அருளால் வீடுபேறு கிடைக்கும்.
அப்படிப்பட்ட பாக்கியம் பெற்ற பெண்ணே, உன்னுடைய நீண்ட உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து கதவைத் திறப்பாயாக என்று எழுப்புவதாக அமைந்த பாசுரம் இது.
திருப்பாவை பாடல் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்ற பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்
விளக்கம்
மார்கழி நோன்பின் பலனைக் கையில் கிடைக்கப் பெற்று, அதன் பலனாக சொர்க்கத்தை அடையும் பெரும் பாக்கியம் பெற்ற பெண்ணே, நீ உன் வாயில் கதவைத்தான் திறக்கவில்லை.
உன்னுடைய வாயைத் திறந்து பதில் கூடவா சொல்லக் கூடாது?.
தெய்வ மணம் மிக்க துளசியை தன்னுடைய முடியில் அணிந்த நாராயணனைப் போற்றி வழிபட்டால், அவன் நிச்சயம் அதற்கான பலனைத் (பறையை) தருவான்.
முன்னொரு காலத்தில் தூக்கத்தின் அரசன் எனப்படும் கும்பகர்ணன் இறக்கும் தருவாயில் உனக்கு நீண்ட தூக்கத்தை வழங்கி விட்டான் போலும். அதனால்தான் நீ இப்படி சோம்பேறியாய் உறங்குகிறாயா?.
குழுவுக்கு ஒப்பற்ற தலைவி அல்லவா நீ? ஆதலால் படுக்கையை விட்டு உடனே தெளிவாக எழுந்து கதவைத் திற என்று வெளியே நின்று கொண்டு தோழியர் உள்ளே உறங்குபவளை எழுப்புகின்றனர்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!