பகையாளி குடியை உறவாடி கெடு

பகையாளி குடியை உறவாடி கெடு என்ற பழமொழியை  பெரியவர் ஒருவர், ஓர் இளைஞனிடம் கூறிக் கொண்டிருந்ததை மீன்கொத்தி மீனாட்சி கேட்டது.

பழமொழிக்கான விளக்கம் கிடைக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஆவர்வத்தில் அவர்களின் பேச்சைத் தொடர்ந்து கேட்கலானது.

இளைஞன் முதியவரிடம் “தாத்தா இந்தப் பழமொழி நமக்கு பிடிக்காதவர்களுடன் பொய் நட்புப் பாராட்டி தக்க நேரத்தில் அவர்களை பழிவாங்க வேண்டும் என்றல்லவா கூறுகிறது?” என்று கேட்டான்.

முதியவர் “நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் நம் முன்னோர். அவர்கள் நட்பை கூட கற்பு என்றளவிற்கு போற்றுவார்கள். நம் முன்னோர் இப்படி ஒரு தவறான கருத்து வளர்க்கும் விதமாக பழமொழியை உருவாக்கி இருப்பார்களா?” என்று கேட்டார்.

அதற்கு இளைஞன் “ அப்படியானால், இப்பழமொழி கூறும் உண்மையான கருத்துதான் என்ன?” என்று கேட்டான்.

பெரியவர் “ ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதைக் கொள்கையாக கொண்ட நம் முன்னோர்களின் எண்ணத்தில் பகையாளி எப்படி குடியேற முடியும்?.

நான் பகையாளி குடியை உறவாடி கெடு என்பதற்கான நேரடியான பொருளை விளக்கிக் கூறுகிறேன். அந்தக் காலத்தில் பல அரசரர்களும் ஜமீன்தார்களும் இந்த நாட்டை ஆண்டு வந்தனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

அருகருகே இருக்கும் இரு நாட்டு அரசர்களிடையே ஏதோ ஒரு காரணத்தால் பகையுணர்வு ஏற்படும்போது பகை காரணமாக போர் மூளும். போரினால் பல உயிர்கள் மடிவதும் வழக்கமான ஒன்றாக இருந்தது.

சிறந்த ராஜதந்திரிகள் அரசர்களின் பகையை மாற்ற என்ன செய்வார்கள் தெரியுமா?. அவர்களிடையே ரத்த சம்பந்தம் ஏற்படும் வகையில் பெண் கொடுப்பது, பெண் எடுப்பது போன்ற திருமண பந்தத்தை உண்டாக்குவார்கள்.

இச்செயலின் மூலமாக போர் நிகழாது அமைதி நிலவும். இரு அரசுகளும் நட்பு பாராட்டி அன்பாக வாழும். இரு நாட்டு மக்களும் சுகமாக வாழ்வர். இக்கருத்தை வலியுறுத்தவே ‘பகையாளி குடியில் உறவை உண்டாக்கி பகையை கெடு’ என்றனர்.

அதாவது ‘உறவின் மூலம் பகை உணர்வை அழி’ என்று கூறுவதே இப்பழமொழியின் உண்மையான பொருளாகும்” என்று கூறினார்.

பழமொழிக்கான விளக்கம் கிடைத்த மகிழ்ச்சியில் மீன்கொத்தி மீனாட்சி சந்தோசத்தில் வட்ட பாறையினை நோக்கிப் பறந்தது.

வட்டப்பாறையில் மாலையின் சற்றுநேரத்திற்கு முன்பே வந்துவிட்டதால் எல்லோரின் வருகைக்காகவும் மீன்கொத்தி மீனாட்சி காத்திருந்தது.

சிறிது நேரத்தில் எல்லோரும் வட்டப்பாறைக்கு வருகை தந்தனர். காக்கை கருங்காலன் “என் அரமை குழந்தைகளே உங்களில் யார் பழமொழிக்கான விளக்கத்தைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.

மீன்கொத்தி மீனாட்சி “தாத்தா நான் இன்றைக்கு பகையாளி குடியை உறவாடிக் கெடு என்ற பழமொழி பற்றிக் கூறுகிறேன்.” என்றது.

காக்கை கருங்காலன் “சரியான பழமொழியைத்தான் கேட்டிருக்கிறாய். பழமொழிக்கான விளக்கம் தெரிந்தால் அதனையும் எல்லோருக்கும் விளக்கிக் கூறு” என்று கூறியது.

மீன்கொத்தி மீனாட்சி “தாத்தா பழமொழிக்கான விளக்கத்தையும் அறிந்து வந்திருக்கிறேன்” என்று தான்கேட்டது முழுவதையும் கூறியது.

“பழமொழி மற்றும் அதற்கான விளக்கம் மிகஅருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் மீன்கொத்தி மீனாட்சி” என்று குட்டியானை குப்பு கூறியது.

காக்கை கருங்காலன் “குட்டியானை கூறியதிலிருந்தே பழமொழி மற்றும் விளக்கம் எல்லோருக்கும் புரிந்ததை அறிய முடிந்தது. நாளை வேறு ஒரு பழமொழி பற்றிப் பார்ப்போம்.” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

One Reply to “பகையாளி குடியை உறவாடி கெடு”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.