மதிய நேரம்.
வரிசையாக இருந்த ஒண்டுக் குடித்தன வீடுகளில் முதல் வீடாக இருக்கும் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தான் ரவிபாபு என்னும் கட்டிளங்காளை இளைஞன்.
அவனுடைய மனைவி ஒடிசலான இளம்பெண் பூங்கொடி எதிரில் வந்தாள்.
“என்னங்க சின்ன அத்தை வந்திருக்காங்க!” என்றாள் அவள்.
சமையலறையிலிருந்து அவனுடைய சித்தியான கனமான தேகம் கொண்ட நடுத்தர வயது மங்கை கையில் தேநீர் டம்ளருடன் வெளிப்பட்டார்.
“வா சித்தி! வழக்கம் போல உனக்கு நீயே டீ போட்டுகிட்டியா?” கேட்டான் ரவிபாபு.
“ஆமான்டா!” என்று சொல்லிக் கொண்டே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தேநீரைப் பருகினார். ரவிபாபுவும் அவன் மனைவியும் நின்று கொண்டிருந்தனர்.
தேநீரைப் பருகி டம்ளரைத் தரையில் வைத்து விட்டு அவனுடைய சித்தி பேசினார்
“என்னடா பாபு! டீக்கடை எப்படி போவுது? என்ன திடீர்னு இதுல இறங்கிட்ட!”
“முதல் நாள் கடைக்கு பூஜை போடும் போது அம்மா தான் இல்லையேன்னு உன்னைக் கூப்பிட்டேன்! நீ வரலை!”
“அன்னிக்கு கேட்டரிங்காரங்க கூப்பிட்டாங்க போக வேண்டியதா இருந்துச்சு. நான் வரலைன்னாலும் என் ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு. நான் ஒண்ணு கேட்டா ஒன் புருசன் என்ன சொல்றான் பாரும்மா?” என்ற சித்தி பூங்கொடியைப் பார்த்தார்.
“சரி உன் கேள்விக்கு பதில் சொல்றேன். பேக்ட்டரில ஆள் குறைப்பு பண்ணிட்டாங்க.
வேற வேலை தேடிகிட்டு இருக்கும்போது, என் ப்ரண்ட் ஜெகன் நடத்திகிட்டு இருந்த இந்த டீக்கடையை அவனால தொடர்ந்து நடத்த முடியல.
காரணம் அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. தங்கச்சிக்கும் உடம்பு முடியாம போனதால தங்கச்சி புருசன் அவளை இவன் வீட்ல விட்டுட்டு போய்ட்டான்? நீ நடத்துறயான்னு கேட்டான்.
ஒரு ஏற்பாட்டில் வேற வேலை கிடைக்கும் வரை இதை நடத்துவோம்னு நடத்திகிட்டு இருக்கேன்” ரவிபாபு சொல்லி முடித்தான்.
“அப்படியா நல்லா நடத்து. நீ டீக்கடை நடத்தற ஏரியாலேந்து புதுசா ஒரு பொண்ணு எங்க சுய உதவிக் குழுவுக்கு வருது. ‘எங்க புள்ள நடத்தற சென்னை டீக்கடையை தெரியுமா?’ன்னு கேட்டேன்.
நான் தினமும் அந்த வழியாக போறேன். ஒங்க புள்ளைக்கு டீ மாஸ்டராக வேற ஆள் கிடைக்கலையா? எப்பவும் சிடுசிடுப்போட இருக்கற ஆள வெச்சிருக்காருன்னு சொல்லிச்சு.
வேற ஆள பார்த்துகிட்டு இவரை கழட்டி விடு” என்று சித்தி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார்.
“டேய்! மணி ஒண்ணரை ஆயிடுச்சா? நான் வரேன். ரெண்டு மணிக்கு சுய உதவிக் குழு கூட்டம். வரேன் மருமகளே!” என்று கூறிய சித்தி வாசலை நோக்கி விரைந்தார்.
“நான் வண்டில விடறேன் சித்தி!” என்று கூறி ரவிபாபு அவர் பின்னால் சென்றான்.
“பக்கத்துல தான் நான் நடந்து போய் விடுவேன். நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு” என்று குரல் கொடுத்து விட்டு அந்த காம்பவுண்ட் வாசலை நோக்கிச் சென்றார் அவனுடைய சித்தி.
உள்ளே வந்த ரவிபாபு நாற்காலியில் அமர்ந்து சட்டையைக் கழற்றினான்.
அதனை வாங்கிய அவனுடைய மனைவி நைலான் கயிறு கொடியில் போட்டாள். அவனருகில் இருந்த மற்றொரு சிறிய நாற்காலியில் அமர்ந்தாள்.
பூங்கொடி கேட்டாள் “யாருங்க அந்த டீ மாஸ்டர்?”
ரவிபாபு புன்னகை பூத்து விட்டு பேசினான்.
“ஜெகன் தொடர்ந்து கடையை நடத்தலேன்னு அவன்கிட்ட இருந்த ஆளுங்க போய்ட்டாங்க. இவரு டீ மாஸ்டர் ஆக வேலை செய்ய வரேன்னாரு.
அவரா முன் வந்தாரு; சேர்த்துகிட்டேன். அகிலா சித்தி சொன்ன, வடிவேலு ஒரு படத்தில் சொல்றா மாதிரி அந்த சிடுமூஞ்சி சித்தப்பா வேற யாரும் இல்ல; எங்க சித்தப்பாவே தான்!”
“அப்படின்னா?”
“புரியலையா?
இப்ப வந்தாங்களே அகிலா சித்தி; அவங்களோட வீட்டுக்காரரு.
ரெண்டு பேரும் பிணக்குகளால பிரிஞ்சு இருக்காங்க.
நான் அவர்கிட்ட நல்ல சந்தர்ப்பம் பார்த்து பேசி புரிய வைக்க முடியுமான்னு பார்க்கலாம்ன்னு தான் அவருக்கு வேலை கொடுத்தேன்.
சித்திகிட்ட பேசறா போல அவர்கிட்ட உரிமையோட பேசி பழகினதில்ல. அப்படி அவர்கிட்ட பர்சனல் விஷயம் பேச எனக்கு தைரியம் வரலேன்னா கூட, எங்க அம்மாவும் சித்தியும் அச்சு அசலாக ஒரே மாதிரியான உருவம் உள்ளவங்க.
நான் எங்க அம்மா ஜாடை. அதனால்தான் மீசை இல்லாமல் க்ளீன் ஷேவ் முகத்தோட கடைக்கு போறேன்.
என் முகத்தை பார்க்க பார்க்க மனைவி நினைவு வந்து, வீண் வீம்பு ஜம்பத்தை விட்டு விட்டு சித்தியோட சேர்ந்தாலும் சேரலாம்ன்னு எனக்குள்ள ஒரு நினைப்பு.” என்று முடித்த ரவிபாபு எழுந்து நின்றான்.
அவன் மனைவியும் எழுந்து நின்றாள்.
அவனருகில் வந்து “இப்படி ஒரு பக்குவமான புருசனை தெய்வம் எனக்கு கொடுத்திருக்கு!” என்று கூறி அவனை இறுக கட்டிக் கொண்டாள்.
“என்ன இது? என் மேல வேர்வை; விடு! வாசல் கதவு வேற திறந்து இருக்கு!” என்று கூறிய ரவிபாபு அவளுடைய பிடியிலிருந்து விடுபட முயன்றான். அவள் விடுவதாக இல்லை.
எஸ். மதுரகவி
கைபேசி: 9841376382
மின் அஞ்சல்: mkavi62@gmail.com