பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் ஆண்டு தோறும் பங்குனி (மார்ச்- ஏப்ரல்) மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி பௌர்ணமி உத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நாளில் தான் தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன என புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்நாள் திருமண விரத நாள் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்விழாவானது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களில் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

 

இவ்விழாவின் முக்கியத்துவம்

பங்குனி உத்திர நாளில்தான் பார்வதி தேவியை சிவபெருமான் மணந்ததாகவும், முருகப்பெருமான், தெய்வயானையை மணந்ததாகவும், ஆண்டாளை ரங்கமன்னார் மணந்ததாகவும், சீதையை ராமர் மணம்புரிந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் அவதாரநாளும், மகாபாரதக் கதையின் வில் வீரனான அர்ஜூனன் பிறந்த நாளும் இந்நாளே ஆகும். பாற்கடலில் இருந்து இலட்சுமி தேவி வெளிப்பட்ட நாள் பங்குனி உத்திர நாளாகும்.

காமக் கடவுளான மன்மதனை உயிர்ப்பித்த நாளும் இது தான்,  பார்வதி தேவி கௌரியாக சிவனை மணம்புரிந்த நாள் என்றும் அதனால் இவ்விழா கௌரிகல்யாணம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

இவ்விழா கொண்டாடப்படும் விதம்

இவ்விழாவின்போது சிவன், பெருமாள், முருகன் கோவில்களில் தெய்வங்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொள்கின்றனர்.

முருகன் கோவில்களில் மக்கள் காவடி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனுக்கு நன்றி செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர்.

காவடியில் இறைவனின் பூஜைக்குரிய பொருள்களான மலர், விபூதி, புனித நீர் ஆகியவற்றைக் கொண்டும் மச்சம், சர்ப்பம் ஆகியவற்றைக் கொண்டும் காவடி எடுக்கின்றனர்.

உடல் மற்றும் கன்னங்களில் அலகு குத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். சிறுதேர் கட்டி அதில் முருகனின் சிறு சிலைகளையோ, அல்லது படத்தையோ வைத்து கோவிலைச் சுற்றிலும் வலம் வருகின்றனர்.

சிறு குடங்களில் பாலினை அடைத்து கோவிலைச் சுற்றிலும் வலம் வந்து இறுதியில் பாலினைக் கொண்டு முருகனுக்கு அபிசேகம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.

இன்னும் சிலர் நடைபயணம் மேற்கொண்டு கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.

பங்குனி உத்திரமானது ஐயப்பனின் அவதார நாளாக இருப்பதால், அன்றைய தினம் ஐயப்பன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.

பெரும்பாலானோர் தங்கள் குல தெய்வ வழிபாட்டினையும் இந்நாளில் மேற்கொள்கின்றனர்.

இவ்விழாக் கொண்டாட்டத்தில் மக்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர்.

பங்குனி உத்தர நாளன்று அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து குளிர்ந்த நீரில் நீராடி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.

பகலில் உணவு உண்ணாமல் இறை சிந்தனையோடு இறை நாமத்தை கூறி விரதம் மேற்கொள்கின்றனர்.

மீண்டும் மாலையில் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு வந்து உணவு உண்டு விரதத்தினை முடிக்கின்றனர்.

திருமணமாகாதோர் நல்ல வரன் வேண்டியும் திருமணமானோர் நல்ல வளமான வாழ்க்கை வேண்டியும் மேலும் சமுதாயத்தில் எல்லோருடனும் நல்லுறவு வேண்டியும் விரதமிருந்து மனம் மற்றும் உடலால் வழிபாடு மேற்கொள்கின்றனர்.

திருஞானசம்பந்தர் தேவார பூம்பாவாய் பதிகத்தில் பங்குனி உத்திரம் விழா கொண்டாட்டம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஆறுபடை வீடுகள் மற்றும் முருகன் கோவில்களில் இவ்விழா சிறப்பாக நடைபெறுகின்றது.

திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களில் இவ்விழா 10 நாட்கள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

பழநியிலும் இவ்விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பழநியில் 10வது நாள் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும் 48 வருடங்கள் இவ்விரதத்தினை கடைப்பிடித்து வழிபடுவோருக்கு மறுபிறப்பின்மை என்னும் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது.

 

இவ்விழாவின் நோக்கம்

பங்குனி உத்திர விழாவானது குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சமுதாயத்தின் அடித்தளம் குடும்பம்.

அந்த குடும்பத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரும் தம்தம் கடமைகளைச் செய்து நல்வழியில் வாழ்ந்து, நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் முக்கிய சாராம்சம் ஆகும்.

மேலும் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் உள்ளோரிடம் நல்லுறவை ஏற்படுத்துவதையும் இவ்விழா வலியுறுத்துகிறது.

தெய்வ திருமணங்களில் பங்கேற்று நல்ல குடும்ப வாழ்வும், குழந்தைகளையும் பெற்று அவர்களை நல்வழிப்படுத்தி இறுதியில் இறைவனின் பாதங்களை சரணடைய வேண்டும் என்பதையும், வாழ்க்கை வாழும் முறை, வாழ்க்கை தொடர்பு போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும், நல்ல சமுதாயத்தை உருவாக்குவதும் இவ்விழா கொண்டாடுவதின் நோக்கம் ஆகும்.

மக்கள் தங்கள் வாழ்க்கையின் கவலைகள் மற்றும் துயரங்களைத் தீர்க்கும் வழிமுறை பற்றி வேண்டி வழிபாட்டினை இந்நாளில் மேற்கொள்கின்றனர்.

நாமும் பங்குனி உத்திரம் விழா அன்று கடவுளை வழிபட்டு மனசாந்தி பெற்று, வாழ்க்கையை புரிந்து கொண்டு உறவுகளை மேம்படுத்தி நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

 

Comments are closed.