பங்குனி மாத சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்

பங்குனி மாத சிறப்புகள் விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது.

பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன.

இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணங்களோடு மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது.

இம்மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க ஆரம்பிப்பதால் இம்மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது.

இனி பங்குனி மாத சிறப்புகள் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்பங்குனி உத்திரம்

பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

இந்நாளிலே சிவன் – பார்வதி, முருகன் – தெய்வயானை, ராமர் – சீதை, ஆண்டாள் – ரங்கமன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

மேலும் சாஸ்தா, மகாலட்சுமி, அர்ஜூனன் போன்றோர்களின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது.

பெரும்பாலோனோர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினையும் இந்நாளில் மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாதலால் இந்நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் கல்யாண விரதம் என்றழைக்கப்படுகிறது.

நல்ல திருமண வாழ்க்கை வேண்டி மணமாகாதோரும், திருமண வாழ்வானது வளமாகத் தொடர மணமானோரும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர்.

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தேர்திருவிழா பிரசித்தி பெற்றது.

 

வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி

உலக அன்னையாம் பராசக்தியை விரதமுறைகளை மேற்கொண்டு வழிபாடு செய்யக்கூடிய நாட்களே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

சாரதா நவராத்திரி, ஆசாட நவராத்திரி, சியமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என ஆண்டில் நான்கு நவராத்திரி விழாக்கள் அன்னை வழிபட மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நவராத்திரிகளில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் முக்கியமானவை.

வசந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை பிரதமை முதல் வளர்பிறை நவமி வரை ஒன்பது நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் அடுத்த பௌர்ணமி வரை பதினைந்து நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் சித்ரா பௌர்ணமி வரை நாற்பத்தைந்து நாட்களாவும் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவில் சில கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

இவ்வழிபாட்டினை மேற்கொள்ள யோகத்தை அன்னை நமக்கு அருளுவாள்.

 

காரடையான் நோன்பு

காரடையான் நோன்புகாரடையான் நோன்பு

கார் காலத்தில் விளைந்த நெல்லைக் கொண்டு அடை செய்து கவுரி ஆகிய காமாட்சி அம்மனை சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

சாவித்திரி என்ற‌ பெண் இவ்வழிபாட்டினை மேற்கொண்டு யமனிடமிருந்து தன்னுடைய கணவனின் உயிரினை மீட்டதால் இவ்விரதம் சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்விரத முறையானது மாசி மாதக் கடைசி நாள் தொடங்கப்பட்டு பங்குனி முதல் நாள் நிறைவு பெறுகிறது.

இவ்வழிபாட்டில் இடம் பெறும் நோன்புக் கயிறானது வழிபாடு முடிந்ததும் பெண்களால் அணியப்படுவது குறிப்பிடத் தக்கது.

இவ்விரத முறையினை திருமணமான பெண்கள் மேற்கொள்வதால் தங்கள் கணவனின் ஆயுள் நீடிப்பதோடு, அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினை அம்மன் வழங்குவதாகவும் கருதுகின்றனர்.

 

ஆலமகீ ஏகாதசி

பெருமாள்

பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஆலமகீ ஏகாதசி என்று பெயர்.

ஆலமகீ ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து திருமாலை வழிபட கோ (பசு) தானம் செய்த பலன் கிடைக்கும்.

இவ்விரதத்தை மேற்கொண்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

 

விஜயா ஏகாதசி

நீலமேகப் பெருமாள், திருக்கண்ணபுரம்

பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். விஜயா என்றால் வெற்றி என்பது பொருளாகும்.

தங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெற விரும்புவோர் இவ்விரதமுறையை பின்பற்ற நல்ல பலன் கிடைக்கும். ராமச்சந்திர மூர்த்தி இவ்விரத்தை மேற்கொண்டே இராவணனை வெற்றி கொண்டு, சீதா தேவியை மீட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

 

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையாரின் குருபூஜை பங்குனி சுவாதியில் மேற்கொள்ளப்படுகிறது.

பங்குனி மாத சிறப்புகள் பற்றி அறிந்து கொண்டீர்களா? பங்குனியில் அவதரித்ததால்தான் வில்வித்தை வீரனான அர்ஜூனன் பால்குணன் என்ற பெயரினைப் பெற்றான்.

வசந்த காலமான பங்குனி எல்லோர் வாழ்விலும் வசந்தத்தை வீசட்டும்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: