பச்சை அவரை என்றதும் நமக்கு தெரியாத காயாக உள்ளதே என்று எண்ண வேண்டாம்.
நம் ஊரில் பீன்ஸ் அல்லது முருங்கை பீன்ஸ் என்று அழைக்கப்படும் காயே பச்சை அவரை ஆகும்.
இது ஆங்கிலத்தில் பைன் பீன், பிரெஞ்சு பீன், ஸ்டிரிங் பீன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. பச்சை அவரையில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
அடர் பச்சை, இளம் பச்சை, கருஊதா, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இவை காணப்படுகின்றன.
இவை உலகெங்கும் பரவலாக பயன்படுத்தக் கூடிய பிரபலமான காய்கறிகளில் ஒன்று.
பச்சை அவரையின் அமைப்பு
பச்சை அவரையானது குற்றுச்செடி வகைத் தாவரத்திலிருந்தும், கொடி வகைத் தாவரத்திலிருந்தும் பெறப்படுகின்றது.
குற்றுச்செடி வகை பச்சை அவரைத்தாவரமானது 2 அடி உயரம் வரை வளரும். இது வேகமாக வளர்ந்து பயனளிக்கக் கூடியது. வியாபார ரீதியாக இவ்வகை பச்சை அவரை தாவரமே அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
கொடி வகைத்தாவரமானது பந்தலிடப்பட்டு வளர்க்கப்படுகின்றது. இவை குற்றுச்செடி வகைத் தாவரத்தைப் போல வேகமாக வளருவதில்லை.
பச்சை அவரையின் விதைகள் நன்கு விளைவதற்கு முன்பே பச்சை அவரைகள் பறிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இதனுடைய அறிவியல் பெயர் ஃபாசிலோஸ் வல்காரிஸ் என்பதாகும்.
பச்சை அவரையின் வரலாறு
சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னரே மீசோ அமெரிக்காவில் இது பயிர் செய்யப்பட்டது. மெக்ஸிகோ, குவாத்தமாலா மற்றும் ஹோண்டுராஸ் உள்ளிட்ட இடங்களில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது.
பின் அது அமெரிக்கா முழுவதும் பரவியது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதலில் கொடி வகை பச்சை அவரையை கண்டறிந்து இதனை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார்.
தற்போது சீனா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், துருக்கி, எகிப்து, மொராக்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் மெக்ஸிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட வடஅமெரிக்க நாடுகளிலும் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.
பச்சை அவரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பச்சை அவரையில் விட்டமின் ஏ,சி,கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்) ஆகியவை காணப்படுகின்றன.
மேலும் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம், சிலிக்கான் போன்ற தாதுஉப்புகள் உள்ளன.
பச்சை அவரையில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, ஆல்பா மற்றும் பீட்டா கரோடீன்கள், லுடீன் சீதாக்ஸைன் உள்ளிட்டவைகளும் காணப்படுகின்றன.
பச்சை அவரை மருத்துவ பண்புகள்
இதய நலத்திற்கு
பச்சை அவரையில் உள்ள ப்ளவனாய்டுகள் மற்றும் பாலிபீனாலிக் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இதயநலத்தை மேம்படுத்துகின்றன. ப்ளவனாய்டுகள் இரத்த குழாய்களில் அடைப்பு உண்டாவதைத் தடைசெய்கின்றன.
இக்காயில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் உடலில் சேருவதைத் தடுக்கிறது. மேலும் இக்காயில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தை மேம்படுத்துகிறது.
எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த
பச்சை அவரையில் உள்ள விட்டமின் கே எலும்புகளைப் பலப்படுத்துகிறது. மேலும் இதில் காணப்படும் கால்சியம் எலும்பு முறிவு, ஆஸ்டியோஃபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது.
இதில் காணப்படும் சிலிக்கான் எலும்பு மறுவளர்ச்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த எலும்புகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது.
செரிமானம் நன்கு நடைபெற
பச்சை அவரையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் நார்ச்சத்து பாதுகாக்கிறது.
நோய்எதிர்ப்பு ஆற்றலைப் பெற
பச்சை அவரையில் உள்ள ப்ளவனாய்டுகள், கரோடினாய்டுகள் ஆகியவை நொய் எதிர்ப்பாற்றலை வழங்குகின்றன.
ப்ளவனாய்டுகளில் உள்ள குவாட்டர்சைன், கெம்ஃபூரல், கேட்டிசின், எபிகேட்டிசின் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நோய்எதிர்ப்பு ஆற்றலை வழங்குகின்றன.
கண்களைப் பாதுகாப்பிற்கு
பச்சை அவரையில் காணப்படும் ப்ளவனாய்டுகள் கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கண்தசை அழற்சி நோயானது கண்ணில் பார்வைக் குறைபாட்டினை உண்டாக்கி கண் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும்.
லுடீன் மற்றும் ஸீஸாக்தைன் கண்ணின் பார்வைத் திறனை மேம்படுத்துகிறது.
கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு
பச்சை அவரையில் ஃபோலேட்டுகள் அதிகளவு உள்ளன. இந்த ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடின்றி ஆரோக்கியமாக பிறக்க உதவுகிறது.
ஆதலால் கர்ப்பிணிகள், குழந்தைப்பேறினை எதிர்நோக்கி இருப்பவர்கள் பச்சை அவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சை அவரையை வாங்கும் முறை
பச்சை அவரையை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் வெட்டுக்காயங்கள் இன்றி கனமானதாகவும், இளமையானதாகவும் இருப்பதை வாங்க வேண்டும்.
பச்சை அவரை பொரியலாகவும், குழம்பாகவும், சூப்பாகவும் வைத்து பயன்படுத்தப்படுகிறது. சாலட்டுகள், புலாவ் உணவுகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை அவரையை அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.
மறுமொழி இடவும்