பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி ஏழைகளின் மாமிசம் என்ற பெயரினை உடையது. ஏனெனில் இக்காயில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் அடங்கியுள்ளது.

பச்சை பட்டாணியானது தோட்டப் பட்டாணி, இனிப்பு பட்டாணி, இங்கிலீஸ் பட்டாணி எனவும் வழங்கப்படுகிறது. பச்சை பட்டாணி லேசான இனிப்பு கலந்த தனிப்பட்ட சுவையினை உடையது.

ஆரம்பத்தில் வடமேற்கு இந்தியாவின் இமயமலை சமவெளிப் பகுதியில் மூலிகை செடியாக காணப்பட்டது. பின் மத்திய மற்றும் மத்திய கிழக்கு ஆசியப் பகுதிகளில் முறையாக பயிர் செய்யப்பட்டது.

மனிதர்களால் முதன் முதலில் பயிர் செய்யப்பட்ட உணவு என்ற பெருமையினை பட்டாணி பெறுகிறது.

இக்காயானது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பயிர் செய்யப்பட்டுள்ளது. பட்டாணியானது ஆரம்பத்தில் காய வைக்கப்பட்டு உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டது.

தற்போது வழக்கத்தில் உள்ள பச்சை பட்டாணியானது கிபி 1600-ல் ஐரோப்பாவில் நடைமுறைக்கு வந்தது.

பச்சை பட்டாணி ஃபேபேஸி குடும்பத்தைச் சார்ந்தது. பட்டாணியின் அறிவியல் பெயர் பைஸம் சட்டைவம் என்பதாகும்.

பச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இக்கொடியானது ஓராண்டு வாழக் கூடியது.

இக்கொடியானது பந்தலிட்டோ, மரங்களின் மீது படரவிட்டோ வளர்க்கப்படுகிறது.

 

பச்சை பட்டாணி கொடி
பச்சை பட்டாணி கொடி

 

 பச்சை பட்டாணி பூ
பச்சை பட்டாணி பூ

 

பச்சை பட்டாணியானது இருபுற வெடி கனி வகையைச் சார்ந்தது. இக்காயில் உறை போன்ற பையினுள் அடுக்காக 2-10 பட்டாணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

பச்சை பட்டாணி கனியானது நீளமாகவோ லேசாக வளைந்து அரை வட்ட வடிவிலோ உள்ளது.

ஒரு பச்சை பட்டாணி 2-3 அங்குல நீளத்தில் பச்சை நிறத்தில் சுமார் 0.1 முதல் 0.36 கிராம் எடையளவில் காணப்படுகிறது.

பச்சை பட்டாணி முற்றும்போது மஞ்சள் கலந்த பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இக்கொடியானது நல்ல வடிகால் வசதியுள்ள போதுமான ஈரப்பதமுள்ள மணற்பரப்பில் குளுமையான தட்ப வெப்பத்தில் நன்கு வளரும்.

மித வெப்ப மண்டலத்தில் நிலவும் காலநிலை இக்கொடிக்கு ஏற்றது. டிசம்பர் முதல் ஏப்ரல் வரை பச்சை பட்டாணி அதிகளவு கிடைக்கிறது.

உலகில் கனடா அதிக அளவு பச்சை பட்டாணியை உற்பத்தி செய்யும் நாடாகும். பிரான்ஸ், சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளிலும் இக்காய் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.

இந்தியாதான் பச்சை பட்டாணியை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடாகும்.

பச்சை பட்டாணிக் கொடியானது மண்ணில் நைட்ரஜன் சத்தை நிலைநிறுத்தகிறது.

விளைச்சல் முடிந்தபின் உள்ள பட்டாணிக் கொடியானது நல்ல உரமாக பயன்படுகிறது.

பயிர் சுழற்சி முறையில் பச்சை பட்டாணி பயிர் செய்யப்படும்போது பூச்சிகளின் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைக்கிறது.

 

பச்சை பட்டாணியில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்

பச்சை பட்டாணியில் விட்டமின்கள் ஏ,சி,கே, பி1(தயாமின்), ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகமாகக் காணப்படுகின்றன.

மேலும் இதில் விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்) போன்றவையும் உள்ளன.

பச்சை பட்டாணியில் தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இதில் பைட்டோ நியூட்ரியன்களான பீட்டா கரோடீன்கள், பீட்டா கிரிப்டோ சாக்தின், லுடீன் ஸீஸாத்தைன் ஆகியவை உள்ளன.

குறைந்த அளவு எரிசக்தி, அதிக அளவு நார்சத்து, புரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவற்றை பச்சை பட்டாணி பெற்றுள்ளது.

 

பச்சை பட்டாணியின் மருத்துவ பண்புகள்

ஆரோக்கியமான உடல் எடை குறைய

பச்சை பட்டாணி அதிக அளவு நார்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியைக் கொண்டுள்ளது.

எனவே இக்காயினை உண்ணும்போது இதில் உள்ள நார்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துவதால் நொறுக்கு தீனியின் அளவு குறைகிறது.

மேலும் இது குறைந்த அளவு எரிசக்தியைக் கொடுக்கிறது. அத்துடன் உடலுக்குத் தேவையான நுண்ஊட்டச்சத்துகள் காணப்படுவதால் இதனை உண்டு ஆரோக்கியமான உடல் இழப்பினைப் பெறலாம்.

 

இதய நலத்திற்கு

இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பினை இக்காயில் உள்ள விட்டமின் பி3(நியாசின்) தடைசெய்கிறது.

இக்காயில் காணப்படும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடைசெய்கிறது.

மேலும் இக்காயில் உள்ள பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

எனவே பச்சை பட்டாணி சூப்பினை அருந்தி சீரான இரத்த அழுத்தத்துடன் இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.

 

நல்ல செரிமானம் மற்றும் மலச்சிக்கல் நீங்க

பச்சை பட்டாணியில் உள்ள நார்ச்சத்தானது செரிமானப் பாதையில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைத்து நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்கிறது.

இவை உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. மேலும் இக்காயில் கரையாத நார்சத்துகள் காணப்படுகின்றன.

இவை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை எளிதாக வெளியேற்றுகின்றன. எனவே பச்சை பட்டாணி மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

 

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

பச்சை பட்டாணியில் உள்ள விட்டமின் கே-வானது உடலானது கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது.

மேலும் இக்காயில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து அவற்றினை வலுவாக்குகின்றன.

பட்டாணியில் காணப்படும் விட்டமின் பி1(தயாமின்) மற்றும் ஃபோலேட்டுகள் எலும்பு புரை நோய் ஏற்படாமல் தடை செய்கிறது.

 

மனஅழுத்தத்தைக் குறைக்க

ஃபோலேட்டுகள் குறைவாக உள்ள உணவினை உண்பதால் நமக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதற்கு ஃபோலேட்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகம் உள்ள உணவினை உண்ண வேண்டும்.

பச்சை பட்டாணியானது அதிக அளவு ஃபோலேட்டுகளையும், ஆன்டிஆக்ஸிஜென்டுகளையும் கொண்டுள்ளது.

எனவே மனஅழுத்தத்தில் உள்ளவர்கள் ஒரு கப் வேக வைத்த பச்சை பட்டாணியை உண்டு தீர்வு காணலாம்.

 

வயிற்று புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க

பச்சை பட்டாணியில் நோய் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இவை உடலினை ப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்பால் ஏற்படும் புற்றுநோய் வளர்ச்சியை தடை செய்கின்றன.

மேலும் பட்டாணியில் காணப்படும் பாலிபீனாலான கௌமெஸ்டிரால் வயிற்றுப் புற்றுநோய் ஏற்படாமல் தடைசெய்கிறது.

 

நோய் எதிர்ப்பு பண்பினைப் பெற

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது உடலில் நோய்கிருமிகள் நுழைவதை தடைசெய்வதோடு பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

பச்சை பட்டாணியில், விட்டமின் சி-யானது அதிகளவு காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நோய் எதிர்ப்பு பண்பினை அதிகரிக்கிறது.

எனவே பச்சை பட்டாணியை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம்.

 

இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க

பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

இதனால் இரத்த சிவப்பு அணுக்களின் குறைவால் ஏற்படும் அனீமியா, சோர்வு ஆகியவற்றை போக்க பச்சை பட்டாணி சிறந்த தீர்வாகும்.

 

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு

பச்சை பட்டாணி அதிக அளவு ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது. ஃபோலேட்டுகள் பிறந்த குழந்தைகளில் நரம்புக் குழாய் குறைபாடுகள் ஏற்படுவதைத் தடைசெய்கிறது.

மேலும் செல்களின் உள்ளே உள்ள டிஎன்ஏ-விற்கும் ஃபோலேட்டுகள் இன்றியமையாதவை ஆகும். எனவே இக்காயினை உண்டு கர்ப்பிணிகள் பலன் பெறலாம்.

 

பச்சை பட்டாணியை வாங்கும் முறை

பச்சை பட்டாணியை வாங்கும்போது புதிதான உறைகள் முழுவதும் மூடிய நிலையில் கைகளில் எடுக்கும்போது கனமாக உள்ளவற்றை வாங்க வேண்டும்.

மேற்புறத்தில் சிதைந்த உறைகள் பிரிந்த, முதிர்ந்து மஞ்சள் நிறத்தில் உள்ளவற்றை தவிர்த்து விடவும்.

பச்சை பட்டாணியை குளிர்பதன‌ப் பெட்டியில் 2-3 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பதப்படுத்தப்பட்ட பச்சை பட்டாணியை பல மாதங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

புலாவ், சூப், ஆலு மட்டர், பன்னீர் மட்டர், மட்டர் காஜர் என பலவித உணவுகள் தயாரிக்க பச்சை பட்டாணி பயன்படுகிறது.

சத்துகள் நிறைந்த பச்சை பட்டாணியை அது கிடைக்கும்போது உணவில் சேர்த்து பயன் பெறுவோம்.

-வ.முனீஸ்வரன்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.