பச்சை மொச்சை குழம்பு செய்வது எப்படி?

பச்சை மொச்சை குழம்பு என்றாலே தனி ருசிதான்.  இதனை பச்சை மொச்சை கிடைக்கும் சீசனில்தான் செய்ய முடியும்.

மார்கழி, தை, மாசி இக்காயின் சீசன் ஆதலால் இது இப்போது அதிகளவு கிடைக்கும்.

இனி சுவையான பச்சை மொச்சை குழம்பு செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சை மொச்சைக் காய் – ¼ கிலோ கிராம்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 2 எண்ணம் (பெரியது)

கல் உப்பு – தேவையான அளவு

மசால் அரைக்க

தேங்காய் – ½ மூடி

மல்லிப் பொடி – 1½ ஸ்பூன்

மிளகாய் வத்தல் பொடி – ¾ ஸ்பூன்

சீரகப் பொடி – ¾ ஸ்பூன்

மஞ்சள் பொடி – ¾ ஸ்பூன்

தாளிக்க

சின்ன வெங்காயம் – 1 எண்ணம்

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

செய்முறை

முதலில் பச்சை மொச்சைக் காயினை தோலுரித்து தனியே எடுத்து அலசி வைத்துக் கொள்ளவும்.

தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக்கவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுளாக்கவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். தேங்காயை சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

துண்டுகளாக்கிய தேங்காய், மஞ்சள் பொடி, மிளகாய் வத்தல் பொடி, சீரகப் பொடி, மல்லிப் பொடி ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மசால் அரைத்து தயார் செய்யவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி அதில் சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.

கடுகு வெடித்ததும்  சதுரங்களாக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

சின்ன வெங்காயத்தை வதக்கும்போது
சின்ன வெங்காயத்தை வதக்கும்போது

 

சின்ன வெங்காயம் பாதி வதங்கியதும் அதனுடன் பச்சை மொச்சை விதைகளைச் சேர்த்து வதக்கவும்.

 

பச்சை மொச்சை விதைகளைச் சேர்த்து வதக்கும்போது
பச்சை மொச்சை விதைகளைச் சேர்த்து வதக்கும்போது

 

இரண்டு நிமிடங்கள் கழித்து சதுரத் துண்டுகளாக்கிய தக்காளியை அதனுடன்  சேர்த்து வதக்கவும்.

 

தக்காளியைச் சேர்த்து வதக்கும்போது
தக்காளியைச் சேர்த்து வதக்கும்போது

 

தக்காளி வதங்கிய பின்
தக்காளி வதங்கிய பின்

 

ஒரு நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள மசாலைச் சேர்த்து கிளறவும். பின் அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் கல் உப்புச் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து அவ்வப்போது கிளறி விடவும்.

குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பினை அணைத்து விடவும். சுவையான பச்சை மொச்சை குழம்பு தயார்.

 

பச்சை மொச்சை குழம்பு
பச்சை மொச்சை குழம்பு

 

இதனை சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாயைக் கீறி குழம்பு கொதிக்கும்போது சேர்க்கலாம். இதனால் குழம்பு வாசனையாகவும், தனிப்பட்ட சுவையுடனும் இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் மல்லி இலையை பொடியாக நறுக்கி குழம்பினை இறக்கும்போது சேர்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து பச்சை மொச்சை குழம்பு தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.